தமிழரசுக் கட்சி தொடர்பான வழக்கை முடிவுறுத்த தீர்மானம்!!
இலங்கைத் தமிழரசுக் கட்சி தொடர்பான வழக்கில் எதிராளிகள் அனைவரது மறுமொழியையும் ஒரு நிலைப்பாடாக பதிவு செய்து வழக்கை முடிவுறுத்த தீர்மானித்துள்ளதாக, பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம், வவுனியா இரண்டாம் குறுக்குதெருவிலுள்ள தனியார் விருந்தினர் விடுதியில் நேற்று முன்தினம் (16) நடைபெற்றது. இதன் பின்னர் நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இந்த விடயம் தொடா்பாக அவர் மேலும் தெரிவித்த போது, “எதிராளிகள் அழைத்துள்ள ஆட்சேபனைகள் தொடர்பாக வழக்காளி தனது நிலைப்பாட்டை தெரியப்படுத்த வேண்டுமென்ற காரணத்துக்காகவே கடந்த தவணை வழக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. ஆனால் இந்த வழக்கில் வழக்கை முடிவுறுத்த வேண்டுமென்ற நோக்கத்துக்காக நாம் குறுகிய தினத்தை கேட்டிருக்கிறோம்.
அன்றையதினம் வழக்காளி நீதிமன்றில் தெரிவித்த விடயத்துடன், எதிராளிகள் ஏழு பேரும் அழைத்திருக்கின்ற ஆட்சேபனைகளின் அடிப்படையில் மூன்று வித்தியாசமான நிலைப்பாடுகள் எடுக்கப்பட்டன.
குறிப்பாக, நானும் கட்சியின் பொதுச் செயலாளரும் நிர்வாக செயலாளரும் ஒரு நிலைப்பாட்டையும், மாவை சேனாதிராஜா மற்றும் யோகேஸ்வரன் ஆகியோர் வேறொரு நிலைப்பாட்டையும் சிறிதரன், குகதாசன் ஆகியோர் இன்னொரு நிலைப்பாட்டையும் எடுத்திருப்பது சுட்டிக்காட்டப்பட்டது.
No comments