Vettri

Breaking News

பெண்களின் வலுவூட்டல் சட்டமூலத்துக்கு துறைசார் மேற்பார்வைக் குழுவில் அனுமதி!!




 பாராளுமன்றத்தில் நாளை முன்வைக்கப்படவுள்ள பெண்களின் வலுவூட்டல் சட்டமூலத்துக்கு துறைசார் மேற்பார்வைக் குழுவில் அனுமதி 


இரண்டாவது மதிப்பீட்டுக்காக நாளை (04) பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ள பெண்களின் வலுவூட்டல் சட்டமூலத்துக்கு சிறுவர்கள், பெண்கள் மற்றும் பாலினம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் அனுமதி வழங்கப்பட்டது.


பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ தலதா அத்துகோரள தலைமையில் அண்மையில் (27) கூடிய சிறுவர்கள், பெண்கள் மற்றும் பாலினம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் கூட்டத்திலேயே நிபந்தனையின் அடிப்படையில் குறித்த சட்டமூலத்துக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டது. 


இக்கூட்டத்தில் பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தின் தலைவர் கௌரவ (வைத்தியகலாநிதி) சுதர்ஷனி பெர்னாந்துபுள்ளே, ஒன்றியத்தின் இணைத் தலைவர் கௌரவ (வைத்தியகலாநிதி) சீதா அரம்பேபொல, மேற்பார்வைக் குழுவின் உறுப்பினர் கௌரவ (கலாநிதி) ஹரினி அமரசூரிய, கௌரவ டீ.வீரசிங்க ஆகியோர் கலந்துகொண்டனர்.  


இலங்கை அரசாங்கத்தினால் கைச்சாத்திடப்பட்டுள்ள பெண்களுக்கெதிரான எல்லா வகையிலுமான ஓரங்கட்டுகையை ஒழித்தல் மீதான சமவாயத்தை நடைமுறைப்படுத்துவதற்கான சட்டதிட்டங்களை விரைவில் தயாரிக்க வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் குறித்த சட்டமூலத்துக்கு அனுமதி வழங்கப்படுவதாகக் குழுவின் தலைவர் குறிப்பிட்டார்.  அது மாத்திரமன்றி, பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியம் மற்றும் குறித்த துறைசார் மேற்பார்வைக் குழுவினால் முன்வைக்கப்பட்டுள்ள திருத்தங்களும் குழுநிலையில் உள்ளடக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.


பெண்களுக்கெதிரான எல்லா வகையிலுமான ஓரங்கட்டுகையை ஒழித்தல் மீதான சமவாயத்தை நடைமுறைப்படுத்துவதற்கான சட்டதிட்டங்கள் தயாரிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி அமைச்சரவைப் பத்திரத்தை இரண்டு வாரங்களுக்குள் சமர்ப்பிப்பதாக பெண்கள், சிறுவர்கள் விவகாரங்கள் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் செயலாளர் யமுனா பெரேரா குழுவில் உறுதியளித்தார்.


குறித்த சமவாயத்தை நடைமுறைப்படுத்துவதற்கான சட்டதிட்டங்களைக் கொண்டு வருவதன் ஊடாகவே மேற்குறிப்பிட்ட சட்டமூலத்தின் முழுமையான நன்மையையும் அடைய முடியும் எனக் குழுவின் தலைவர் வலியுறுத்தினார். 


பெண்கள், சிறுவர்கள் விவகாரங்கள் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் அதிகாரிகள், சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் சட்டவரைஞர் திணைக்களம் ஆகியவற்றின் பிரதிநிதிகளும் இதில் கலந்துகொண்டிருந்தனர்.





No comments