Vettri

Breaking News

மட்டக்களப்பு பொது நூலகத்தின் கட்டுமான பணிகள் தொடர்பில் பிரதமரிடம் கலந்துரையாடல்!!




 மட்டக்களப்பு பொது நூலகத்தின் கட்டுமான பணிகளை விரைவுபடுத்தி நிறைவு செய்து மக்கள் பாவனைக்கு கையளிப்பது தொடர்பில் நாட்டின் பிரதமர் தினேஷ் குணவர்த்தன மற்றும் இராஜாங்க அமைச்சர் சிவ. சந்திரகாந்தன் ஆகியோர் தலைமையிலான உயர்மட்ட கலந்துரையாடல். 


மட்டக்களப்பு பொது நூலகத்தின் கட்டுமான பணிகளை விரைவு படுத்தி நிறைவு செய்வதற்கான மேலதிக நிதி ஒதுக்கீடு மற்றும் அமைச்சரவையில் விசேட  அமைச்சரவை பத்திரம் சமர்ப்பித்தல், வேலைத்திட்டங்களை முன்னெடுக்கும் போது ஏற்படுகின்ற இடையூறுகளை கையாள்வதற்கான பொறி முறைமைகள் போன்றன தொடர்பில் ஆராயும் விசேட கலந்துரையாடல் நாட்டின் பிரதமரும், பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான அமைச்சருமான தினேஷ் குணவர்த்தன மற்றும் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும், மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவருமான சிவ.சந்திரகாந்தன் ஆகியோர் தலைமையில் பாராளுமன்ற கட்டிட தொகுதியில் நடைபெற்றது.


இதன் போது குறித்த அமைச்சரவை பத்திரம். மற்றும் விசேட நிதி ஒதுக்கீடு தொடர்பாக பிரதமர் தினேஷ் குணவர்த்தன அவர்களினால் விசேட கவனம் செலுத்தப்பட்டிருந்ததோடு. இராஜாங்க அமைச்சர் சிவ.சந்திரகாந்தன் அவர்களின் வேண்டுகோளுக்கு அமைவாக குறித்த நூலகத்தின் பணிகளை முழுமையாக முடிவுறுத்தி மக்கள் பாவனைக்கு கையளிப்பதற்கான நிதி ஒதுக்கீடு மற்றும் ஏனைய  அனைத்து விடையங்கள் தொடர்பிலுமான முனைப்பான நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக குறிப்பிட்டிருந்தார்.           


கிராமிய வீதிகள் அபிவிருத்தி  இராஜாங்க அமைச்சரின் தூரநோக்கு சிந்தனைக்கு அமைவாக மட்டக்களப்பு மாவட்டத்தின் அடையாளச் சின்னமாகவும், ஆசியாவின்  பிரமாண்டங்களுள்  ஒன்றாகவும் மிளிரவிருக்கும் மட்டக்களப்பு பொது நூலகத்தின் கட்டுமான பணிகளானது

கடந்த காலங்களில் நிலவிய கசப்பான அரசியல் பழிவாங்கல்கள், மற்றும் அரசியல் ரீதியான குரோத செயற்பாடுகள் காரணமாகவும் தொடர் இழுபறி நிலைக்கு தள்ளப்பட்டிருந்தது.


அதன் பின் 2020 காலப்பகுதியில் முன்னாள் முதலமைச்சர் சந்திரகாந்தன் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டிருந்த போதும். 

அப்போதைய காலப்பகுதியில் நிலவிய கொவிட் தொற்று அதனுடனினைந்த பொருளாதார நெருக்கடி மற்றும் நிர்மான துறையில் ஏற்பட்ட பின்னடைவு போன்ற காரணங்களால் குறித்த நூலகத்தின் கட்டுமான பணிகளை முன்னெடுப்பதில் பல சவால்களை எதிர்கொள்ள வேண்டியேற்பட்டது.


அதன் பின்னர் இடைநடுவே மட்டு  மாநகர சபையானது தாம் தருவதாக ஒப்புதல் அளித்திருந்த 142 மில்லியன் ரூபாய்களில் 100 மில்லியன் ரூபாய்களை இராஜாங்க அமைச்சர் சந்திரகாந்தன்  கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானின் ஊடாக மட்டு மாநகர சபையில் இருந்து பெற்று பகுதி அளவிலான வேலைகளை முன்னெடுத்திருந்தார்.


பின்னர் குறித்த நூலகத்தின் மேலதிக கட்டுமான பணிகளை முழுமையாக நிறைவு செய்வதற்கு தேவையான நிதியினை ஒதுக்குவது தொடர்பிலான சந்திப்பு நாட்டின் பிரதமரும், பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராச்சி அமைச்சருமான தினேஷ் குணவர்த்தனவிற்கும்  இராஜாங்க அமைச்சரும், மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவருமான சந்திரகாந்தனுக்குமிடையே இடம்பெற்றிருந்தது.


அதன்போது பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும்  உள்ளூராட்சி அமைச்சின் நிதியிலிருந்த குறித்த கட்டுமான பணிகளை நிறைவு செய்வதற்கு தேவையான முழுமையான நிதியினை ஒதுக்குவதற்கு பிரதமர் இணக்கம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.


குறித்த கலந்துரையாடலில் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர, கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரின் இணைப்பு செயலாளர் மாணிக்கவாசகர் தயாபரன், மட்டக்களப்பு மாநகர சபை ஆணையாளர் எந்திரி சிவலிங்கம், தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் பொதுச்செயலாளரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினரும், தற்போதைய கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரின் பிரத்தியேக செயலாளருமான பூபாலபிள்ளை பிரசாந்தன் உட்பட கட்டிட திணைக்கள உயர் அதிகாரிகள், துறைசார் அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.




No comments