Vettri

Breaking News

ஜூன் 26 பாடசாலைகள் நடைபெறுமா?




 எதிர்வரும் ஜூன் 26ஆம் திகதி அரச பாடசாலை ஆசிரியர்கள் சுகயீன விடுமுறை தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் அறிவித்துள்ளது.

தாங்கள் எதிர்வரும் வாரம் புதன்கிழமை (26) பணிப் புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக, இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் உறுதியளித்தபடி கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்காவிட்டால், கல்விப் பொதுத் தராதரப்பத்திர பரீட்சை மதிப்பீட்டு நடவடிக்கைகளில் இருந்தும் விலகவுள்ளதாக, ஜோசப் ஸ்டார்லின் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, எதிர்வரும் 26ஆம் திகதி இடம்பெறவுள்ள இந்த தொழிற்சங்க நடவடிக்கையினால் ஆசிரியர்கள் பாடசாலைக்கு சமூகமளிக்காத நிலையில், அன்றைய தினம் மாணவர்கள் பாடசாலை செல்வதில் நிச்சயமற்ற நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் அன்றைய தினம் பாடசாலைகள் வழக்கம் போன்று நடைபெறும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை, ஆசிரியர்கள் ஒரே விடயத்தை கையில் எடுத்துக் கொண்டு சுகயீன விடுமுறை தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டாலும் தற்போதைய தலைமுறை மாணவர்கள் அதில் தங்கியிருக்காலம் இணையம் போன்ற விடயங்கள் மூலம் அறிவை பெற்று வருகின்றனர் எனவும் அதன் மூலம் அவர்களின் கல்வித் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதாகவும் கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

கொழும்பு கோத்தமி பாலிகா வித்தியாலயத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இதேவேளை அனைத்துப் பாடசாலைகளும் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு ஒரே வலையமைப்பில் இணைக்கப்பட்டால், அனைத்து பாடங்களையும் ஒரே இடத்தில் இருந்து குழந்தைகளுக்கு கற்பிக்க முடியும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

வேகமாக மாறிவரும் அறிவார்ந்த சமூகத்தின் புதிய போக்குகள் தொடர்பில் உரிய புரிதல் இல்லாவிட்டால் சமூகம் முன்னேறிச் செல்வது சாத்தியமற்றது என்பதால் இது தொடர்பில் முக்கியமாக ஆசிரியர்கள் மற்றும் பெரியவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

அத்துடன், அறிவைத் தேடிப் பெற்று தாங்கள் தங்களை மேம்படுத்துவதன் மூலம் மாணவர்களுக்கு புதிய அறிவை வழங்கும் திறன்களைப் பெறுவதற்கு ஆசிரியர்கள் புத்திசாலித்தனமாகவும் செயற்பட வேண்டும் என்றும், அதனை நன்கு புரிந்துகொண்டு மாணவர்களுக்காக மாறத் தயாராக வேண்டும் என்றும் சுசில் பிரேமஜயந்த இங்கு குறிப்பிட்டிருந்தார்.

மாறிவரும் உலகத்துக்கும் கல்வி முறைக்கும் ஏற்ப தம்மை மாற்றிக் கொள்ளாமல் சூழலையோ, உலகையோ மாற்றுவது பயனற்ற செயல் என்று புரிந்து கொள்ளாமல் பலனற்ற நடவடிக்கைகளை மேற்கொண்டிருப்பதை இன்னும் சில வருடங்களுக்கு மேல் தொடர முடியாது என்றும் அமைச்சர் இங்கு சுட்டிக்காட்டினார்.

No comments