Vettri

Breaking News

நாடு முழுவதும் 250 புதிய பாலங்களை அமைக்கத் திட்டம் - ஜனாதிபதி தெரிவிப்பு!!




 தேசிய மட்ட அபிவிருத்தித் திட்டங்களின் பயனை கிராமப்புற மக்களுக்குப் பெற்றுக்கொடுக்கும் வகையில் வீதி கட்டமைப்பை மேம்படுத்தி நாடு முழுவதும் 250 புதிய பாலங்களை அமைக்கத் திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

2014-2024 காலப்பகுதியில் நெதர்லாந்து ஜென்சன் பிரிஜிங் நிறுவனத்தினால் இலங்கையின் பல்வேறு பகுதிகளில் 750 கிராமிய பாலங்களை வெற்றிகரமாக நிர்மாணித்து நிறைவு செய்ததை முன்னிட்டு 03 ஆம் திகதி திங்கட்கிழமை முற்பகல் கொழும்பு ஷங்ரிலா ஹோட்டலில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.

இந்தப் பாலங்கள் ஊடாக இணைக்கப்பட்டுள்ள பிரதேச மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கு அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகத் தெரிவித்த ஜனாதிபதி, நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சியடையும் போது, குறைந்த வருமானம் பெறும் மக்களும் அதன் மூலம் பயனடைவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

கிராமப்புறங்களில் உள்ள மக்கள் மீது அதிக கவனம் செலுத்துவதன் மூலம் பல பரிமாண வறுமையை 10% வரை குறைக்க வேண்டும் என்பதே அரசின் எதிர்பார்ப்பு என்றும், கிராமப்புறங்களில் உட்கட்டமைப்பு வசதியை மேம்படுத்தும் இவ்வாறான திட்டங்கள் அந்த இலக்கை அடைவதற்கு மிகவும் முக்கியமானவை என ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

இந்தத் திட்டத்திற்கு பங்களித்த நெதர்லாந்து அரசாங்கத்திற்கும் ஜனாதிபதி நன்றி தெரிவித்தார்.

ஜென்சன் பிரிஜிங் நிறுவனத்தின் 10 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு அந்நிறுவனம் இலங்கையில் 750 பாலங்களை வெற்றிகரமாக நிர்மாணித்து நிறைவு செய்ததை முன்னிட்டு, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, நெதர்லாந்து நாட்டின் இலங்கைக்கான தூதுவர் பொனி ஹோர்பாக் ( Bonnie Horbach) அவர்களுக்கு விசேட நினைவுப் பரிசொன்றையும் வழங்கினார்.

No comments