Vettri

Breaking News

தேயிலையை அகற்றி கோப்பி பயிரிட நடவடிக்கை : போராட்டத்தில் மக்கள்!!




 தேயிலையை அழித்துவிட்டு கோப்பி பயிரிட நடவடிக்கை எடுத்துள்ள கலனிவெளி பெருந்தோட்ட முகாமைத்துவ கம்பனிக்கு உட்பட்ட நானு ஓயா உடரதல்ல தோட்ட நிர்வாகத்தின் தான்தோன்றி தனமான செயற்பாட்டுக்கு எதிராக உடரதல்ல தோட்ட இரண்டு பிரிவுகளை சேர்ந்த 150 க்கு மேற்பட்ட தொழிலாளர்கள் நானு ஓயா நகரில் இன்று (16) காலை வீதிக்கு இறங்கி போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

இதன்போது போராட்டத்தில் குதித்த தொழிலாளர்கள் தமது கோரிக்கைகளை பாதைகளில் எழுதி ஏந்தி கோஷமிட்டு போராட்டத்தை முன்னெடுத்தனர்.

உடரதல்ல தோட்டத்தில் நல்ல தேயிலை விளைச்சளை தரக்கூடிய இலக்கம் (05) தேயிலை மலையில் அத்தோட்ட நிர்வாகம் தேயிலை மரங்களை அகற்றிவிட்டு கோப்பி பயிர்ச் செய்கையை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளது.

அதேநேரத்தில் இந்த விடயம் தொடர்பாக தோட்ட நிர்வாகம் உடரதல்ல தோட்ட தொழிலாளர்கள், தோட்ட தொழிற்சங்க தலைவர்களின் ஆலோசனைகளை பெறாது தான்தோன்றித்தனமாக இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது என தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

தோட்ட நிர்வாகத்தின் இந்த செயற்பாடினால் அத்தோட்டத்தில் தேயிலை தொழிலை நம்பியுள்ள தொழிலாளர்களின் நாளாந்த தொழிலுக்கு பாதிப்பு ஏற்படுவதோடு எதிர்காலம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக தொழிலாளர்கள் சுட்டிக்காட்டினர்.

இந்த நிலையில் இந்த விடயம் குறித்து தோட்ட தொழிற்சங்க தலைவர்கள் பலமுறை தோட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு வந்து பேச்சுவார்த்தை மேற்கொண்ட போதிலும் தோட்ட நிர்வாகம் கோப்பி பயிரிடுவதை மாத்திரம் நோக்காக கொண்டுள்ளது.

எனவே, நாமும் தேயிலையை அழித்துவிட இடமளிக்கப்போவதில்லை என இப்போது போராட்டத்தில் குதித்துள்ளதாகவும் தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

அத்துடன், தோட்ட நிர்வாகம் குறித்த தோட்டத்தின் (05) ஆம் இலக்க தேயிலை மலையில் கோப்பியை பயிரிட தேயிலையை அழிக்க இயந்திரங்களை பாவிப்பதை தடுக்க முயன்ற தோட்ட தலைவர்கள் உள்ளிட்ட சிலரை பணிநீக்கம் செய்துள்ளதையும் தொழிலாளர்கள் கண்டித்துள்ளனர்.

இதே சந்தர்ப்பத்தில் உடரதல்ல தோட்டத்தில் தலைத்தூக்கியுள்ள இந்த பிரச்சனை தொடர்பில் நுவரெலியா உதவி தொழில் ஆணையாளர் திணைக்களத்தில் தொழிற்சங்கங்கள், தோட்ட நிர்வாகம், தொழிலாளர்கள் அடங்கிய பேச்சுவார்த்தை நேற்று (15) காலை இடம்பெற்ற போதிலும் அது தோல்வியில் முடிந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் காரணமாக உடரதல்ல தோட்ட தொழிலாளர்கள் நானு ஓயா நகரில் ஒன்று கூடி தமது கோரிக்கையை முன் வைத்து போராட்டத்தில் ஈடுப்பட்டதாக தெரிவித்தனர்.

எனவே, உடரதல்ல தோட்டத்தில் தேயிலையை ஒழிக்க இடமளிக்கப்போவதில்லை என தெரிவித்த தொழிலாளர்கள் உரிய தீர்வு கிட்டும் வரை தொடர்ச்சியான போராட்டத்தை கைவிடப்போவதில்லை என்றும் மேலும் தெரிவித்தனர்.

No comments