"அச்சமின்றி பெண்கள் எல்லா இடங்களுக்கும் செல்லக்கூடிய நிலையை ஜனாதிபதி உருவாக்குவார்" - விஜயகலா மகேஸ்வரன் தெரிவிப்பு!!
அச்சமின்றி பெண்கள் எல்லா இடங்களுக்கும் செல்லக்கூடிய நிலையை ஜனாதிபதி உருவாக்குவார் என்ற நம்பிக்கை உள்ளதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் காணி உரிமையை அனைவருக்கும் வழங்கும் “உறுமய” வேலைத்திட்டத்தின் கிளிநொச்சி மாவட்ட நிகழ்ச்சி நேற்று (25) முற்பகல் இரணைமடு நெலும் பியச மண்டபத்தில் இடம்பெற்றபோது அந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
“உறுமய” திட்டத்தின் கீழ் ஜனாதிபதியால் முல்லைத்தீவு மாவட்டத்தில் காணி உறுதிப் பத்திரங்கள் வழங்கப்படுகின்றன. ஜனாதிபதியின் 45 வருட சேவையை 5 நிமிடங்களில் சுருக்கிச் சொல்ல முடியாது. வட மாகாணத்தில் பெண்கள் எப்படி பாதுகாப்பாக வாழ்ந்தனர் என்று அறிவோம். அதனால் அடுத்த மாதங்களில் பெண்கள் பாதுகாப்புக்கான சட்டங்களை நிறைவேற்றுவதாக ஜனாதிபதி கூறுவது சிறந்த விடயமாகும்.
அதனால் நாடளாவிய ரீதியிலிருக்கும் பெண்கள் அனைவரும் பாதுகாப்பு பெறுவர். மொழிப் பிரச்சினையால் அதிகாரிகளிடம் பெண்களின் பிரச்சினைகளை விளக்கமாக கூற முடியாத நிலை இருந்தது. அச்சமின்றி பெண்கள் எல்லா இடங்களுக்கும் செல்லக்கூடிய நிலையை ஜனாதிபதி உருவாக்குவார் என்ற நம்பிக்கை உள்ளது. அதற்காக ஜனாதிபதிக்கு நன்றி சொல்கிறேன்.
தமிழ் மக்களின் காணி விடுவிப்பு பிரச்சினைக்கு ஜனாதிபதி தீர்வினை வலியுறுத்தினார். அதேபோல் காணி உறுதிகளையும் வழங்குகிறார். அதனால்தான் அவர் சர்வதேச ரீதியாக மதிக்கப்படுகிறார் என்றார்.
No comments