சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி மாபெரும் வெற்றி!!
சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் விளையாட்டரங்கில் வெள்ளிக்கிழமை (24) இரவு நடைபெற்ற 17ஆவது இண்டியன் பிறீமியர் லீக் அத்தியாயத்தின் இரண்டாவது தகுதிகாண் போட்டியில் ராஜஸ்தான் றோயல்ஸை எதிர்த்தாடிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 36 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.
இந்த வெற்றியுடன் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் இதே விளையாட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை (26) நடைபெறவுள்ள ஐபிஎல் சம்பியனைத் தீர்மானிக்கும் இறுதிப் போட்டியில் முன்னாள் சம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸை எதிர்த்தாடவுள்ளது.
2016இல் சம்பியனான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 3ஆவது தடவையாக இறுதிப் போட்டியில் விளையாட தகதிபெற்றுள்ளது.
அங்குரார்ப்பண ஐபிஎல் அத்தியாயத்தில் (2008) சம்பியனான ராஜஸ்தான் றோயல்ஸ் 3ஆவது தடவையாக இறுதிப் போட்டிக்குள் பிரவேசிக்கும் வாய்ப்பைத் தவறவிட்டது.
ஹென்றிச் க்ளாசெனின் அரைச் சதம், தங்கராசு நடராஜன், ஷாஹ்பாஸ் அஹ்மத், அபிஷேக் ஷர்மா ஆகியோரது துல்லியமான பந்துவீச்ச என்பன கொல்கத்தாவின் வெற்றியில் முக்கிய பங்காற்றின.
அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 20 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 174 ஓட்டங்களைப் பெற்றது.
அபிஷேக் ஷர்மா அதிரடியாக துடுப்பாட்டத்தை ஆரம்பித்த போதிலும் 5 பந்துகளில் 12 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார்.
ட்ரவிஸ் ஹெட், ராகுல் த்ரிபதி ஆகிய இருவரும் நிதானம் கலந்த வேகத்துடன் துடுப்பெடுத்தாடி எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்தனர்.
ட்ரவிஸ் ஹெட் 34 ஓட்டங்களையும் ராகுல் த்ரிபதி 37 ஓட்டங்களையும் பெற்றனர்.
அதன் பின்னர் விக்கெட்கள் சீரான இடைவெளியில் சரிந்தன.
ஏய்டன் மார்க்ராம் (1), நிட்டிஷ் குமார் ரெட்டி (5), அப்துல் சமாத் (0) ஆகியோர் பந்துவீச்சாளர்களுக்கு சிரமம் கொடுக்காமல் ஆட்டம் இழந்தனர்.
எனினும் ஹென்றிச் க்ளாசனும் ஷாஹ்பாஸ் அஹ்மதும் 7ஆவது விக்கெட்டில் 43 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியின் மொத்த எண்ணிக்கைக்கு வலு சேர்த்தனர்.
இந்த இணைப்பாட்டமே முழுப் போட்டியிலும் சிறந்த இணைப்பாட்டமாக இருந்தது.
ஹென்றிச் க்ளாசன் 50 ஓட்டங்களைப் பெற்றதுடன் ஷாஹ்பாஸ் அஹ்மத் 18 ஓட்டங்களைப் பெற்றார்.
பந்துவீச்சில் ஆவேஷ் கான் 27 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ட்ரென்ட் போல்ட் 45 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் சந்தீப் ஷர்மா 25 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ராஜஸ்தான் றோயல்ஸ் 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 139 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.
இரண்டு துடுப்பாட்ட வீரர்கள் மாத்திரமே துடுப்பாட்டத்தில் திறமையை வெளிப்படுத்தினர். ஏனைய அனைவரும் சரியான வியூகங்களை அமைக்காமல் எல்லா பந்துகளையும் அடிக்க முயற்சித்து அநாவசியமாக விக்கெட்களைத் தாரைவார்த்தனர்.
ஆரம்ப வீரர் யஷஸ்வி ஜய்ஸ்வால் 42 ஓட்டங்களையும் த்ருவ் ஜுரெல் ஆட்டம் இழக்காமல் 56 ஓட்டங்களையும் பெற்றனர்.
மூன்றாவது அதிகப்பட்ச எண்ணிக்கையாக தலா 10 ஓட்டங்களை டொம் கோஹ்லர்_கெட்மொர், சஞ்சு செம்சனும் பெற்றனர். வேறு எவரும் இரட்டை இலக்க எண்ணிக்கையை எட்டவில்லை.
பந்துவீச்சில் ஷாஹ்பாஸ் அஹ்மத் 23 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் அபிஷேக் ஷர்மா 24 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் தங்கராசு நடராஜன் 13 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
ஆட்டநாயகன்: ஷாஹ்பாஸ் அஹ்மத்.
No comments