"மலையக புத்தாண்டு’ விசேட ஒருங்கிணைந்த கிராம அபிவிருத்தி திட்டத்துக்காக இவ்வருடம் 10,000 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. இதில், 9,410 மில்லியன் ரூபா அபிவிருத்தி திட்டங்களுக்காக மாவட்ட செயலாளர்களிடம் விடுவிக்கப்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.
இதன் கீழ், 13,612 செயற்றிட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன. இவ்வேலைத்திட்டங்களை ஜூலை 31க்கு முன்னர் நிறைவு செய்யுமாறு அமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளார். இதன்படி, திட்டப்பணிகள் விரைவில் நிறைவு செய்யப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது, நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சும் இந்தத் திட்டங்களின் முன்னேற்றத்தைப் பின்தொடர்ந்து செயற்பட்டு வருகிறது.
கண்டி, மாத்தளை, நுவரெலியா, களுத்துறை, காலி, மாத்தறை, பதுளை, குருநாகல், இரத்தினபுரி. கேகாலை மற்றும் அம்பாறை மாவட்டங்களில் 97 கிராம சேவை உத்தியோகத்தர் பிரிவுகளில் இத்திட்டம் செயற்படுத்தப்படுகிறது. வீடமைப்பு, உட்கட்டமைப்பு, சமூக அபிவிருத்தி மற்றும் வாழ்வாதார அபிவிருத்தி போன்ற பத்து பகுதிகளின் கீழ், இதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
வாழ்வாதாரம், உணவுப் பாதுகாப்பு, சந்தை அபிவிருத்தி மற்றும் சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்காக 1,032 திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. கல்விக்காக 1,152 திட்டங்களும், குடிநீர் வசதிக்காக 676 திட்டங்களும் செயற்படுத்தப்பட்டுள்ளன. மொத்த திட்டங்களில், 8,140 திட்டங்கள் சாலை வசதிகளை மேம்படுத்த செயல்படுத்தப்படுகின்றன. விவசாயம் மற்றும் சிறு நீர்ப்பாசன அபிவிருத்திக்காக 780 திட்டங்களும் மின்சாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அபிவிருத்திக்காக 271 திட்டங்களும், தொலைபேசி மற்றும் இணைய வசதிகளை மேம்படுத்துவதற்கான 13 திட்டங்களும் செயற்பட்டு வருகின்றன. சுகாதாரம் மற்றும் சுகாதார ஆரோக்கிய வசதிகளுக்காக ஒதுக்கப்பட்ட திட்டங்களின் எண்ணிக்கை 516 ஆகவுள்ளது . சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் பேரிடர் முகாமைத்துவத்துக்காக 88 திட்டங்களும், வீட்டு வசதிகளை மேம்படுத்த 944 திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருவதாக அமைச்சர் தெரிவித்தார்.
No comments