ருத்துராஜ், டுபே ஆகியோரின் அதிரடிகளை வீணடித்தார் ஸ்டொய்னிஸ் ; நான்கு நாட்கள் இடைவெளியில் சென்னையை மீண்டும் வென்றது லக்னோவ்
சென்னை சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் விளையாட்டரங்கில் செவ்வாய்க்கிழமை (23) நடைபெற்ற 38ஆவது இண்டியன் பிறீமியர் லிக் அத்தியாயத்தின் 39ஆவது போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸை எதிர்த்தாடிய லக்னோவ் சுப்பர் ஜயன்ட்ஸ் 6 விக்கெட்களால் அபார வெற்றிபெற்றது.
புத்திசாதுரியத்துடன் துடுப்பெடுத்தாடிய மாக்கஸ் ஸ்டொய்னிஸ் ஆரம்பத்தில் நிதானத்தைக் கடைப்பிடித்ததுடன் கடைசியில் அதிரடியைப் பிரயோகித்து அபார சதம் குவித்து லக்னோவை வெற்றி அடையச் செய்தார். ஐபிஎல் போட்டியில் மாக்கஸ் ஸ்டொய்னிஸ் குவித்த முதலாவது சதம் இதுவாகும்.
இதன் காரணமாக ருத்துராஜ் கய்க்வாட் குவித்த ஆட்டமிழக்காத சதமும் ஷிவம் டுபே விளாசிய அரைச் சதமும் வீண் போயின.
நான்கு நாட்கள் இடைவெளியில் சென்னையை இரண்டாவது தடவையாக லக்னோ வெற்றிகொண்டது.
லக்னோவில் கடந்த வெள்ளிக்கிழமை சென்னையை 8 விக்கெட்களால் லக்னோவ் வெற்றி கொண்டிருந்தது.
சென்னை பந்துவீச்சாளர்கள் ஆரம்பத்தில் சிறப்பாக பந்துவீசிய போதிலும் பின்னர் மோசமாக பந்துவீசி ஓட்டங்களை வாரி வழங்கியதால் அவர்களது அணி தோல்வி அடைந்தது. இலங்கையின் மதீஷ பத்திரண மாத்திரமே சிறப்பாக பந்துவீசினார்.
ஐபிஎல் ரி20 போட்டி ஒன்றில் சென்னை விளையாட்டரங்கில் 211 என்ற மிகப் பெரிய வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய லக்னோவ் அந்த இலக்கை கடந்து சாதனை படைத்தது. அத்துடன் இந்த மைதானத்தில் இரண்டாவதாக துடுப்பெடுத்தாடிய அணி சார்பாக அதிகூடிய ஓட்டங்களைப் பெற்றவர் என்ற சாதனையை மாக்கஸ் ஸ்டொய்னிஸ் படைத்தமை விசேட அம்சமாகும்.
இதற்கு முன்னர் 2012இல் கொல்கத்தா நைட் ரைடர்ஸினால் நிர்ணயிக்கப்பட்ட 206 ஓட்டங்கள் என்ற அப்போதைய மிகப் பெரிய வெற்றி இலக்கை சென்னை சுப்பர் கிங்ஸ் பதிலுக்கு துடுப்பெடுத்தாடி வெற்றிகரமாக கடந்திருந்தது.
செவ்வாய்க்கிழமை நடைபெற்ற போட்டியில் சென்னையைப் போன்றே லக்னோவின் ஆரம்பமும் மோசமாக இருந்தது.
குவின்டன் டி கொக் ஓட்டம் பெறாமல் ஆட்டம் இழந்ததுடன் அணித் தலைவர் கே.எல். ராகுல் 16 ஓட்டங்களுடன் வெளியேறினார். (33 - 2 விக்.)
எனினும், அடுத்த 3 விக்கெட்களில் சிறந்த இணைப்பாட்டங்களை மாக்கஸ் ஸ்டொய்னிஸ் ஏற்படுத்தி அணியின் வெற்றியை உறுதிசெய்தார்.
மார்கஸ் ஸ்டொய்னிஸ் 3ஆவது விக்கெட்டில் தேவ்டத் படிக்கல்லுடன் 55 ஓட்டங்களையும் நிக்கலஸ் பூரனுடன் 4ஆவது விக்கெட்டில் 33 பந்துகளில் 70 ஓட்டங்களையும் பகிர்ந்தார்.
அடுத்ததாக பிரிக்கப்படாத 5ஆவது விக்கெட்டில் வெறும் 18 பந்துகளில் 55 ஓட்டங்களை மாக்கஸ் ஸ்டொய்னிஸும் தீப்பக் ஹூடாவும் பகிர்ந்து 3 பந்துகள் மீதமிருக்க லக்னோவின் வெற்றியை உறுதி செய்தனர்.
மாக்கஸ் ஸ்டொய்னிஸ் 63 பந்துகளை எதிர்கொண்டு 13 பவுண்டறிகள், 6 சிக்ஸ்கள் உட்பட 124 ஓட்டங்களுடனும் தீப்பக் ஹூடா 6 பந்துகளில் 17 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர்.
பந்துவீச்சில் மதீஷ பத்திரண 35 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.
தனது சொந்த மைதானத்தில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட சென்னை சுப்பர் கிங்ஸ் 20 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 210 ஓட்டங்களைக் குவித்தது.
அஜின்கியா ரஹானே ஒரு ஓட்டத்துடன் ஆட்டம் இழக்க சென்னையின் ஆரம்பம் சிறப்பாக அமையவில்லை. (4 - 1 விக்.)
தொடர்ந்து 6ஆவது ஓவரில் மொத்த எண்ணிக்கை 49 ஓட்டங்களாக இருந்தபோது டெரில் மிச்செல் (11) ஆட்டம் இழந்தார்.
எனினும், அணித் தலைவர் ருத்துராஜ் கய்க்வாட், ரவீந்த்ர ஜடேஜா ஆகிய இருவரும் 3ஆவது விக்கெட்டில் 52 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியின் வீழ்ச்சியை சீர்செய்தனர்.
ரவீந்த்ர ஜடேஜா 16 ஓட்டங்களைப் பெற்றார்.
அதன் பின்னர் ருத்துராஜ் கய்க்வாடும் ஷிவம் டுபேயும் எதிரணி பந்துவீச்சாளார்களை நாலா பக்கமும் சிதறடித்தனர்.
அவர்கள் இருவரும் 4ஆவது விக்கெட்டில் 47 பந்துகளில் 104 ஓட்டங்களைப் பகிர்ந்து மொத்த எண்ணிக்கை 200ஐக் கடக்க உதவினர்.
ஷிவம் டுபே 27 பந்துகளை மாத்திரம் எதிர்கொண்டு 3 பவுண்டறிகள், 7 சிக்ஸ்களுடன் 66 ஓட்டங்களைக் குவித்தார்.
மறுபக்கத்தில் நிதானமாகவும் பின்னர் அதிரடியாகவும் துடுப்பெடுத்தாடிய ருத்துராஜ் கய்க்வாட் 60 பந்துகளில் 12 பவுண்டறிகள், 3 சிக்ஸ்கள் அடங்கலாக 108 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.
தனது 60ஆவது ஐபிஎல் போட்டியில் விளையாடிய ருத்துராஜ் கய்க்வாட் குவித்த இரண்டாவது சதம் இதுவாகும்.
விசாகப்பட்டினம், மும்பை, லக்னோவ் ஆகிய மைதானங்களில் தனது அதிரடிகள் மூலம் இரசிகர்களைப் பரவசத்தில் ஆழ்த்திய தோனிக்கு சென்னையில் இ ஒரு பந்தை மாத்திரமே எதிர்கொள்ள கிடைத்தது. அந்தப் பந்தை சுழற்றி அடித்த தோனி 4 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.
No comments