Vettri

Breaking News

சொந்தக் காசில் சூனியம் வைத்துக்கொண்ட ராஜபக்சக்கள்! ரணில் வைத்த தரமான ஆப்பு




 


“ஊர் ரெண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம்” என்று கிராமப் புறங்களில் ஒரு கருத்து உண்டு. இது குழாய்ச் சண்டை முதல், ஆட்சிக்காக நடக்கும் அதிகாரச் சண்டை வரை பொருந்தும்.

இப்படி ஒரு நிலைதான், 2022ஆம் ஆண்டு இலங்கை அரசாங்கத்தின் அப்போதைய ஆட்சியாளர்களுக்கு எதிராக நாட்டு மக்கள் ஒன்று திரண்டிருந்த நேரம் ஏற்பட்டது.

தனது நான்கு தசாப்தத்திற்கும் மேற்பட்ட அரசியல் வாழ்க்கையில் என்றுமே இல்லாத தோல்வியை கடந்த 2020ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் சந்தித்த ரணில் விக்ரமசிங்க , 2022ஆம் ஆண்டு ஏற்பட்ட அரசாங்கத்திற்கு எதிரான போராட்டத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டார்.

எப்போதுமே அரசியல் பரப்பில் ரணிலை நரி என்று வர்ணிப்பர். அதற்கு அவருடைய அரசியல் தந்திரங்கள் என்பதை விட இராஜ தந்திரங்கள்தான் காரணம் என்று சொல்வது மிகையல்ல.

ஒரே ஒரு தேசியப் பட்டியல் ஆசனத்தைக் கொண்டு நாடாளுமன்ற உறுப்பினராகி, பின்னர் பிரதமர் ஆகி அடுத்து ஒரே மாதத்தில் அதிபரும் ஆனவர். இதனை விதி என்று சொல்வதா இல்லை சதி என்று சொல்வதா என்பதெல்லாம் விவாதத்திற்குரியது.

ஆனாலும், இந்த அரசியல் நகர்வுகளில் ரணிலின் இராஜதந்திரத்தை சந்தேகப் படவே முடியாது. முதன்முறையாக கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் வரலாறு காணாத தோல்வியை சந்தித்த ஐக்கிய தேசியக் கட்சியினரிடம் அதன் தலைவரான ரணில், ஆவேசப்படாதீர்கள் நிச்சயம் அதிகாரம் கிடைக்கும் என்று கூறியதாக அப்போதைய செய்திகள் மற்றும் விமர்சனங்கள் ஊடாக அறியக் கிடைத்தது.  

 அவர் எந்த நேரத்தில் எந்த நம்பிக்கையில் கூறினாரோ தெரியவில்லை. இறுதியில் நடந்தது அதுதான்.

ரணில் எந்த அளவுக்கு சிறந்த இராஜதந்திரியோ, சிறந்த அரசியல்வாதியோ அந்த அளவுக்கு பொருளாதார ரீதியான நகர்வுகளை மேற்கொள்வதில் சாமர்த்தியவாதியும் கூட.

ஒரு வேளை, 2019இன் அதிபர் தேர்தலின் பின்னர் ஆட்சி பீடத்தைக் கைப்பற்றிய ராஜபக்சவினரின் ஓரிரு மாத ஆட்சிக்காலத்திலேயே நாட்டின் எதிர்கால பொருளாதார நிலையை ரணில் ஊகித்திருக்கக் கூடும்.

இதன் காரணமாக தனது கட்சியினருக்கு ஆட்சி அதிகாரம் நமதே என்ற நம்பிக்கையும் அளித்திருக்கலாம். இந்த நிலையில் தான், 2022இல் இலங்கை மக்கள் ராஜபக்சவினரின் ஆட்சிக்கு எதிராக ஒன்று திரண்டு புரட்சி நடத்திக் கொண்டிருந்த சமயத்தில், 2022ஆம் ஆண்டு மே மாதம் 9ஆம் திகதி காலி முகத்திடல் கலவரம் வெடிக்கிறது. மகிந்த பிரதமர் பதவியை துறக்கின்றார். இலங்கை அரசியல் புயலில் சிக்கிய ஓடம் போல தள்ளாடிக் கொண்டிருக்கும் சமயத்தில் அப்போதைய அதிபர் கோட்டாபயவிடம் இருந்து ரணிலுக்கு அழைப்பு விடுக்கப்படுகின்றது.பிரதமர் பதவிக்காக..

இந்த அழைப்பு வரும் என்பதை நன்கு அறிந்திருந்தவர் போல ரணிலும் சில கோரிக்கைகளை கோட்டாயவிடம் முன்வைத்தாராம்.

அவற்றில் மிக முக்கியமானதுதான், காலி முகத்திடல் போராட்டக்காரர்களை அடக்கவோ, முடிவுறுத்தும் நடவடிக்கையில் ஈடுபடவோ கூடாது என்பது. ஜனநாயக ரீதியில் நடத்தப்படும் போராட்டத்தின் மீதோ, போராட்டக்காரர்கள் மீது சட்டம் பாயக் கூடாது என்றும், போராட்டக்காரர்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என்றும் கோட்டாபயவிடம் கோரியதாக செய்திகள் வெளிவந்திருந்தன.

ஆனால், தொடர் சரிவைக் கண்ட ராஜபக்சவினரின் பதவி துறப்புக்களுக்கும், அவர்களது சாம்ராச்சியத்தின் அழிவுக்கும் இதுதான் பிரதான காரணமாக இருந்தது.

இந்தக் கோரிக்கை போராட்டக்காரர்களின் பாதுகாப்புக்காக முன்வைக்கப்பட்டதாக பார்த்தாலும் சரி, ராஜபக்சர்களுக்கு ஆப்பு வைப்பதற்காக முன்வைக்கப்பட்டதாக பார்த்தாலும் சரி.

அடுத்து, கோட்டாபயவின் அழைப்பை ஏற்ற ரணில் பிரதமரானார், போராட்டம் தொடர்ந்தது அடுத்தடுத்து ராஜபக்சவினரின் சமஸ்தானத்திற்குள் இருந்த பசில் உள்ளிட்ட முக்கியஸ்தர்களின் பதவி விலகல்களும், தனி வழிப் பயணங்களும் தொடர்ந்தன.

பாரிய இடையூறுகள் இன்றி தொடர்ந்த போராட்டம் ஜூலை மாதம் 9ஆம் திகதி விஷ்வரூபம் எடுக்க தலைமைப் பதவியே வேண்டாம் என்று நாட்டை விட்டுத் தப்பி ஓடும் பரிதாப நிலை கோட்டாபயவுக்கு ஏற்பட்டது.

அந்த சமயம் ரணிலுக்கு அடித்தது அதிர்ஷ்டம். தனது பல தசாப்த கால அரசியல் வரலாற்றில் முதன் முறையாக நாட்டின் தலைமைப் பதவியை ஒரு இக்கட்டான நிலையில் ஏற்றார் ரணில். இதை அதிர்ஷ்டம் என்றும் சொல்லலாம், இராஜ தந்திரம் என்றும் சொல்லலாம், ராஜபக்சவினர் விதைத்த வினையின் பலன் என்றும் சொல்லலாம்.

எப்படியோ, ஆட்சிப் பீடம் ஏறி கடந்த இரண்டு வருடங்களில் ஓரளவு நாட்டு மக்களால் உணரக் கூடிய வகையிலான பொருளாதார நிவாரணங்கள் நாட்டுக்கும் மக்களுக்கும் கிடைத்திருந்தாலும் அடுத்து ஒரு தலைமைப் பரீட்சையை எதிர்கொள்ளப் போகின்றார் ரணில்.

கிட்டத்தட்ட, ராஜபக்சவினர் மீதான நம்பிக்கையை இலங்கை மக்கள் முற்றாக இழந்திருக்கின்றனர்.  

ஒருபக்கம், அடுத்த தேர்தலில் வேட்பாளர் யார் என்று தீர்மானிக்க முடியாத இக்கட்டில் ராஜபக்சவினர் இருக்கின்றனரா என்றும், ரணிலுக்கு ஆதரவு கரம் நீட்டுவார்களா இல்லையா என்றும் ராஜபக்சக்களின் சகாக்கள் குழம்பிப் போய் இருக்கின்றனர்.

மறுபக்கம், ராஜபக்சவினர் பக்கம் நின்ற மொட்டுக் கட்சியைச் சேர்ந்த பலர், குறிப்பாக பிரசன்ன ரணதுங்க, டயானா கமகே உள்ளிட்ட மேலும் பலர் ரணிலுக்கு ஆதரவாகவே தமது கரங்களை உயர்த்தி வருகின்றனர்.

இந்த நிலையில், ரணில் அதிபர் தேர்தலில் வேட்பாளராக களமிறங்குவது உறுதி, அவருக்கு மொட்டுக் கட்சியில் பலரது ஆதரவு கிடைக்கப் போகின்றது என்பதும் உறுதி.இவ்வருடம் அதிபர் தேர்தல் நடக்கப் போகின்றது என்பதும் உறுதி.

ஆனால் ராஜபக்சர்களின் நிலை என்ன..??

2015ஆம் ஆண்டு ஏற்பட்ட படுதோல்விக்கு பின்னர் புதிய கட்சி ஒன்றை ஆரம்பித்து அடுத்தடுத்து உள்ளூராட்சி மன்றத் தேர்தல், அதிபர் தேர்தல், நாடாளுமன்ற தேர்தல் என்று பல வெற்றிகளைக் காண ராஜபக்சர்களுக்கு அப்போது 3 வருடத்திற்கும் மேலான கால அவகாசம் இருந்தது.

அவ்வாறானதொரு நிலை இப்போது இல்லை என்பது தெளிவு. இப்படியிருக்க ராஜபக்சக்கள் கட்டமைத்த சாம்ராச்சியத்தின் அழிவு அடுத்தடுத்த தேர்தல்களிலும் தொடருமோ என்ற சந்தேகத்தை அவர்களின் சகாக்களுக்கு ஏற்படுத்தியுள்ளது.

கிட்டத்தட்ட சொந்த காசில் சூணியம் வைத்துக் கொண்டது போன்ற நிலைதான் தற்போது ராஜபக்சக்களுக்கு.

ரணிலைக் கொண்டு தக்கவைத்துக் கொள்ள முயற்சித்த ஆட்சியை ரணிலிடமே தாரைவார்த்து விட்டு காத்திருக்கின்றது அந்தக் கூட்டம்.

இறுதியில், ராஜபக்சவினரின் ஆட்சிக்கும், இலங்கை மக்களுக்கும் நடந்த போராட்டத்தில் ரணிலுக்கே கொண்டாட்டம்..

No comments