சகல துறைகளிலும் டெல்ஹியை விஞ்சிய கொல்கத்தாவுக்கு இலகுவான வெற்றி
கொல்கத்தா ஈடன் கார்ட்ன் விளையாட்டரங்கில் திங்கட்கிழமை (29) நடைபெற்ற 17ஆவது இண்டியன் பிறீமியர் லீக் அத்தியாயத்தின் 47ஆவது போட்டியில் டெல்ஹி கெப்பட்டல்ஸ் அணியை 7 விக்கெட்களால் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இலகுவாக வெற்றிகொண்டது.
துடுப்பாட்டம், பந்துவீச்சு, களத்தடுப்பு ஆகிய சகல துறைகளிலும் கொல்கத்தா பிரகாசித்து வெற்றியை ஈட்டியது.
வருண் சக்கரவர்த்தி, ஹர்ஷித் ரானா, வைபாவ் அரோரா ஆகியோரின் துல்லியமான பந்துவீச்சுகள், பில் சோல்டின் அதிரடி அரைச் சதம், ஷ்ரேயாஸ் ஐயரின் அபார துடுப்பாட்டம் என்பன கொல்கத்தா நைட் ரைடர்ஸின் வெற்றியில் பிரதான பங்காற்றின.
டெல்ஹி கெப்பிட்டல்ஸினால் நிர்ணயிக்கப்பட்ட 154 ஓட்டங்கள் என்ற சுமாரான மொத்த எண்ணிக்கையை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 16.3 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து 157 ஓட்டங்களைப் பெற்று அபார வெற்றியீட்டியது.
லிஸாட் வில்லியம்ஸின் முதல் ஓவரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 21 ஓட்டங்களைப் பெற்றது.
அடுத்த ஓவரில் கலீல் அஹ்மத் வீசிய முதல் பந்தில் பில் சோல்ட் கொடுத்த உயரமான, இலகுவான பிடியை லிஸாட் வில்லியம்ஸ் தவறவிட்டார். அப்போது 15 ஓட்டங்களைப் பெற்றிருந்த பில் சோல்ட் 26 பந்துகளில் 50 ஓட்டங்களளைப் பூர்த்திசெய்தார்.
பவர் ப்ளே நிறைவில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் விக்கெட் இழப்பின்றி 79 ஓட்டங்களைக் குவித்திருந்தது.
ஆனால், அதன் பின்னர் 21 ஓட்டங்கள் வித்தியாசத்தில் 3 விக்கெட்கள் சரிந்தன.
சுனில் நரேன் 15 ஓட்டங்களுடன் வெளியேறினார்.
33 பந்துகளில் 7 பவுண்டறிகள், 5 சிக்ஸ்களுடன் 68 ஓட்டங்களைப் பெற்றிருந்த பில் சோல்ட் 2ஆவதாக ஆட்டம் இழந்தார்.
அவரைத் தொடர்ந்து மற்றொரு அதிரடி ஆட்டக்காரர் ரின்கு சிங் 11 ஓட்டங்களுடன் களம் விட்டகன்றார். (100 - 3 விக்.)
எனினும் அணித் தலைவர் ஷ்ரேயாஸ் ஐயர், வெங்கடேஷ் ஐயர் ஆகிய இருவரும் நிதானத்துடன் துடுப்பெடுத்தாடி பிரிக்கப்படாத 4ஆவது விக்கெட்டில் 57 ஓட்டங்களைப் பகிர்ந்து தமது அணி வெற்றி பெறுவதை உறுதி செய்தனர்.
ஷ்ரேயாஸ் ஐயர் 23 பந்துகளில் 33 ஓட்டங்களுடனும் வெங்கடேஷ் ஐயர் 23 பந்துகளில் 26 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர்.
அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த டெல்ஹி கெப்பிட்டல்ஸ் 20 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 153 ஓட்டங்களைப் பெற்றது.
போட்டியின் 14ஆவது ஓவரில் டெல்ஹி கெப்பிட்டல்ஸ் 7 விக்கெட்களை இழந்து 101 ஓட்டங்களைப் பெற்று பெரும் தடுமாற்றத்தை எதிர்கொண்டது.
ஆனால், அதன் பின்னர் 2 விக்கெட்களை மாத்திரம் இழந்து மேலும் 52 ஓட்டங்களைப் பெற்ற டெல்ஹி கெப்பிட்டல்ஸ் கௌரவமான நிலையை அடைந்தது.
9ஆம் இலக்க வீரர் பியூஷ் சௌலா திறமையாகத் துடுப்பெடுத்தாடி 26 பந்துகளில் 5 பவுண்டறிகள், ஒரு சிக்ஸ் உட்பட ஆட்டம் இழக்காமல் 35 ஓட்டங்களைப் பெற்றதாலேயே டெல்ஹி கெப்பிட்டல்ஸ் சுமாரான மொத்த எண்ணிக்கையைப் பெற்றது.
அவரை விட அணித் தலைவர் ரிஷாப் பான்ட் 27 ஓட்டங்களையும் அபிஷேக் பட்டேல் 18 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்துவீச்சில் வருண் சக்கரவர்த்தி 4 ஓவர்களில் 16 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ஹர்ஷித் ரானா 28 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் வைபவ் அரோரா 29 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
ஆட்டநாயகன்: வருண் சக்கரவர்த்தி.
No comments