குஜராத் டைட்டன்ஸை வெளுத்துக் கட்டியது றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு; வில் ஜெக்ஸ், விராத் கோஹ்லி அபார துடுப்பாட்டங்கள்
அஹமதாபாத் நரேந்திர மோடி விளையாட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை (28) நடைபெற்ற 17ஆவது இண்டியன் பிறீமியர் லீக் அத்தியாயத்தின் 45ஆவது போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் பந்துவீச்சாளர்களை வெளுத்துக்கட்டிய றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு 4 ஓவர்கள் மீதம் இருக்க 9 விக்கெட்களால் அமோக வெற்றிபெற்றது.
வில் ஜெக்ஸ் குவித்த சதம், விராத் கோஹ்லி குவித்த அரைச் சதம், அவர்கள் பகிர்ந்த 166 ஓட்டங்கள் என்பன றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை வெற்றிபெறச் செய்தன.
இந்தப் போட்டியில் தனது 3ஆவது வெற்றியை ஈட்டிய றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு 6 புள்ளிகளுடன் அணிகள் நிலையில் தொடர்ந்தும் கடைசி இடத்தில் இருக்கிறது.
அப் போட்டியில் குஜராத் டைட்டன்ஸினால் நிர்ணயிக்கப்பட்ட 201 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு 16 ஓவர்களில் ஒரு விக்கெட்டை இழந்து 206 ஓட்டங்களைப் பெற்று இலகுவாக வெற்றியீட்டியது.
விராத் கோஹ்லி, அணித் தலைவர் பவ் டு ப்ளெசிஸ் (24) ஆகிய இருவரும் 23 பந்துகளில் 40 ஓட்டங்களைப் பகிர்ந்திருந்தபோது டு ப்ளெசிஸ் ஆட்டம் இழந்தார்.
ஆனால், அதன் பின்னர் குஜராத் டைட்டன்ஸ் பந்துவீச்சாளர்களுக்கு திண்டாட்டம்தான் காத்திருந்தது.
விராத் கோஹ்லியுடன் 2ஆவது விக்கெட்டில் ஜோடி சேர்ந்த வில் ஜெக்ஸ் ஆரம்பத்தில் நிதானத்தைக் கடைப்பிடித்து பின்னர் அதிரடியைப் பிரயோகித்து அபார சதம் குவித்து அணி வெற்றி பெறுவதற்கு பெரும் பங்காற்றினார்.
அவரும் கோஹ்லியும் பிரிக்கப்படாத 2ஆவது விக்கெட்டில் 73 பந்துகளில் 166 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியின் வெற்றியை உறுதி செய்தனர்.
தனது முதல் 31 ஓட்டங்களை 24 பந்துகளில் பெற்ற வில் ஜெக்ஸ், கடைசி 17 பந்துகளில் 4 பவுண்டறிகளும் 9 சிக்ஸ்களும் அடங்கலாக 69 ஓட்டங்களைப் பெற்று 100 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.
மறுமுனையில் விராத் கோஹ்லி 44 பந்துகளில் 6 பவுண்டறிகள், 3 சிக்ஸ்கள் உட்பட 70 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.
முன்னதாக முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட குஜராத் டைட்டன்ஸ் 20 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து 200 ஓட்டங்களைப் பெற்றது.
ஆரம்ப வீரர்களான ரிதிமான் சஹா (8), அணித் தலைவர் ஷுப்மான் கில் (16) ஆகிய இருவரும் குறைந்த ஓட்டங்களுடன் வெளியேறினர். (45 - 2 விக்.)
எனினும், சாய் சுதர்சன், ஷாருக் கான் ஆகிய இருவரும் 3ஆவது விக்கெட்டில் 86 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியைப் பலமான நிலையில் இட்டனர்.
ஷாருக் கான் 30 பந்துகளில் 3 பவுண்டறிகள், 5 சிக்ஸ்களுடன் 58 ஓட்டங்களைப் பெற்றார்.
தொடர்ந்து சுதர்சன், டேவிட் மில்லர் ஆகிய இருவரும் பிரிக்கப்படாத 4ஆவது விக்கெட்டில் 69 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.
சாய் சுதர்சன் 49 பந்துகளை எதிர்கொண்டு 8 பவுண்டறிகள், 4 சிக்ஸ்கள் அடங்கலாக 84 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.
டேவிட் மில்லர் ஆட்டம் இழக்காமல் 26 ஓட்டங்களைப் பெற்றார்.
No comments