Vettri

Breaking News

பேஸ்போலாக மாறுகிறது கிரிக்கெட் ? இல்லையா? - சாம் கரன்




 


இந்தியாவில் நடைபெற்றுவரும் 17ஆவது இண்டியன் பிறிமியர் லீக் அத்தியாயத்தில் பந்துவீச்சாளர்கள் நையப்புடைக்கப்படுவதால் சாதனைகள் முறியடிக்கப்பட்டவண்ணம் இருக்கிறது.

சிக்ஸ்கள் குவிப்பதில் சாதனை, அதி கூடிய வெற்றி இலக்கை கடப்பதில் சாதனை என்பன இப்போது இண்டியன் பிறீமியர் லீக்கில் சர்வசாதாராணமாகிவிட்டது.

கொல்கத்தா நைட் ரைடர்ஸினால் நிர்ணயிக்கப்பட்ட மிகப் பெரிய ரி20 வெற்றி இலக்கான 262 ஓட்டங்களை 8 பந்துகள் மீதமிருக்க பஞ்சாப் கிங்ஸ் விரட்டிப்பிடித்து வெற்றியீட்டியது. இதன் மூலம் ரி20 கிரிக்கெட் போட்டிகளில் மிகப்பெரிய வெற்றி இலக்கை அடைந்த அணி என்ற  உலக சாதனையை  பஞ்சாப் கிங்ஸ்  நிலைநாட்டியது.

இவற்றை நோக்கும் போது கிரிக்கெட் விளையாட்டு பேஸ்போலாக மாறுகிறதோ என்ற கேள்வியை பஞ்சாப் கிங்ஸ் அணியின் பதில் தலைவர் சாம் கரன் எழுப்பியது தவறு அல்ல.

இந்த வெற்றிக்குப் பின்னர் கிரிக்கெட் முற்றிலும் மாறுபட்ட விளையாட்டாக மாறுகிறதா என்று ஆச்சரியத்துடன் அவர் கேள்வி எழுப்பினார்.

போட்டி முடிவில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த சாம் கரன்,

'கிரிக்கெட் விளையாட்டு பேஸ்போலாக மாறுகிறது, இல்லையா? இது முற்றிலும் நம்ப முடியாததாக உள்ளது' என்று கூறினார்.

'இந்த வெற்றி குறித்து கூறுவதென்றால் எங்கே, எப்படி தொடங்குவது? இருந்தாலும் இரண்டு புள்ளிகள் கிடைத்ததையிட்டு முற்றிலும் மகிழ்ச்சி அடைகிறோம். இது போன்ற விளையாட்டுகள் அற்புதமானவை. சில வாரங்களாக நாங்கள் ஓர் அணியாக கடினமாக உழைத்தோம். உண்மையில் எதிரணிகளுக்கு கடைசிவரை நாங்கள் கடும்போட்டியாக இருந்தோம். மொத்த எண்ணிக்கைகள் என்னவாக இருந்தாலும் நாங்கள் உண்மையில் வெற்றி பெறுவதற்கு தகுதியானவர்கள் என்று நினைத்தேன்'

இம்முறை ஐபிஎல் போட்டிகளில் துடுப்பாட்ட வீரர்களின் அதிரடிகள் காரணமாக மொத்த எண்ணிக்கை சில சந்தர்ப்பங்களில் 300ஐ அண்மிக்குமோ என எண்ணவைத்தது.

ஐபிஎல் கிரிக்கெட்டின் 16 வருட வரலாற்றில் குவிக்கப்பட்ட 260க்கும் மேற்பட்ட அதிகூடிய மொத்த எண்ணிக்கைகளில் 8 இந்த வருடம் பெறப்பட்டவையாகும். அவற்றில் 262 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை பஞ்சாப் கிங்ஸ் கடந்ததே உலக ரி20 கிரிக்கெட் அரங்கில் பதிலுக்கு துடுப்பெடுத்தாடியபோது பெறப்பட்ட அதிகூடிய உலக சாதனை இலக்காக இருக்கிறது.

அதே போட்டியில் இரண்டு அணிகளாலும் மொத்தமாக குவிக்கப்பட்ட 42 சிக்ஸ்கள், ரி20 போட்டி ஒன்றில் பெறப்பட்ட அதிகூடிய சிக்ஸ்கள் என்ற உலக சாதனையாகவும் பதிவானது.

இதன் மூலம், ஹைதராபாத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையில் கடந்த மாதம் நடைபெற்ற போட்டியிலும் பெங்களூருவில் றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையில் கடந்த வாரம் நடைபெற்ற போட்டியிலும் மொத்தமாக குவிக்கப்பட்ட 38 சிக்ஸ்கள் என்ற சம சாதனையும் முறியடிக்கப்பட்டது.

இவற்றின் மூலம் இதுவரை அசாத்திய ஆற்றல்களைக் காணக்கூடியதாக இருந்தது என்றார் கரன்.

'ஆமாம்! பல மாறுபாடான நிகழ்வுகள்  இதுவரை  இடம்பெற்றுவிட்டன என நான் நினைக்கிறேன். வீரர்கள் பெரிய அளவில் பயிற்சி பெறுகிறார்கள் என்பது வெளிப்படையான உண்மை. அவர்கள் நீண்ட நேரம் ஆடுகளத்தில் தாக்குப்பிடித்து பந்தை அடிக்கக்கூடியவர்கள். இவை எல்லாவற்றுக்கும் வீரர்கள் கொண்டிருக்கும் நம்பிக்கை, பயிற்றுநர்களின் வழிநடத்தல் மற்றும் பயிற்சி பெறும் விதம் என்பனவே காரணம். நேர்மையாக சொல்வதென்றால் சிறிய மைதானங்களில் பனித்துளிகளுக்கு மத்தியில் பந்துவீச்சாளர்கள் சிரமப்படுவதுண்டு. பந்து வழுவிச் செல்வதால் வைட் ஆகிவிடுகிறது. அதன் பின்னர் மேலதிக பந்து வழங்கப்படுகிறது. அதேநேரம் எல்லோரும் சிக்ஸ்களைப் பார்க்க விரும்புகிறார்கள். புள்ளி விபரங்களோ எல்லைக் கடந்து செல்வது போல் இருக்கிறது. இவற்றுக்கெல்லாம் மத்தியில் வெற்றிபெறுவதுதான் முக்கியம்' என அவர் குறிப்பிட்டார்.

இந்த வருட ஐபிஎல் போட்டிகளில் குறைந்த ஓட்டங்களைப் பெற்றதால் அணியிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்ட ஜொனி பெயாஸ்டோவ், அன்றைய இரவு எதிர்நீச்சல் போட்டு துடுப்பாட்டத்தில் அசத்தி ஆட்டமிழக்காத சதம் (108 ஆ.இ.) குவித்ததை சாம் கரன் பாராட்டத் தவறவில்லை.

அவருக்கு பக்கபலமாக அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி 28 பந்துகளில் ஆட்டம் இழக்காமல் 68 ஓட்டங்கள் குவித்த ஷ ஷாங்க் சிங்கையும் சாம் கரன் வெகுவாக பாராட்டினார்.

அவர்களைவிட கொல்கத்தா சார்பாக பில் சோல்ட் (75), சுனில் நரேன் (71), பஞ்சாப் சார்பாக ப்ரப்சிம்ரன் சிங் (54) ஆகியோரும் துடுப்பாட்டத்தில் அசத்தி இருந்தனர்.

அப் போட்டியில் துடுப்பெடுத்தாடிய 11 பேரில் ஒருவரைத் தவிர மற்றைய எல்லோரும் சிக்ஸ் அடித்திருந்தனர்.

இதேவேளை, அடுத்ததாக டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை எதிர்கொள்ளும் போது தனது வீரர்கள் வலிமையுடன் விளையாட வேண்டும் என கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணித் தலைவர் ஷ்ரேயாஸ் ஐயர் தெரிவித்தார்.

'உண்மையைச் சொல்வதென்றால், இரண்டு அணிகளும் அபாரமாக விளையாடின. இந்தப் போட்டியில் எங்கு தவறு நிகழ்ந்தது என்பதை நாங்கள் ஆராய்ந்து பார்க்கவேண்டும். குறிப்பாக முதலில் துடுப்பெடுத்தாடி 260 ஓட்டங்களை எடுத்த பிறகு அதை தக்கவைக்க முடியாமல் போனது பாதிப்பை தோற்றுவிக்கிறது. ஆனால், சகல வீரர்களுக்கும், குறிப்பாக பந்துவீச்சாளர்களுக்கு இது ஒரு சிறந்த பாடம். எங்களுக்கு இன்னும் ஒரு ஆட்டம் இந்த மைதானத்தில் இருக்கிறது. எனவே, சூழ்நிலைகளை நாங்கள் சரியாக மதிப்பிட்டு மிகச் சிறந்த வியூகங்களுடன் களம் இறங்குவோம்' என்றார் ஷ்ரேயாஸ் ஐயர்.

No comments