பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விவகாரம் : இன்று மீண்டும் கூடுகிறது சம்பள நிர்ணயசபை
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விவகாரம் தொடர்பான பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதற்கு சம்பள நிர்ணய சபை புதன்கிழமை (24) மீண்டும் கூடவுள்ளது. தொழில் ஆணையாளர் நாயகம் எச்.கே.கே.ஏ.ஜயசுதந்தர தலைமையில் கூடவுள்ள சம்பள நிர்ணய சபையில் தொழிற்சங்கங்கள், முதலாளிமார் சம்மேளனம் மற்றும் அரச தரப்பினர் பங்கேற்கவுள்ளனர்.
கடந்த 10ஆம் திகதி பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் தொடர்பில் தீர்மானிப்பதற்காக சம்பள நிர்ணய சபை கூட்டப்பட்ட போதிலும், இறுதி நேரத்தில் முதலாளிமார் சம்மேளனம் சமூகமளிக்காமையினால் பேச்சுவார்த்தை ஒத்திவைக்கப்பட்டது. சம்பள நிர்ணய சபை கூடுவது குறித்து தமக்கு உரிய நேரத்தில் அறிவிக்கப்படவில்லை எனத் தெரிவித்து முதலாளிமார் சம்மேளனம் பேச்சுவார்த்தையில் பங்கேற்றிருக்கவில்லை.
இந்நிலையில் முதலாளிமார் சம்மேளனத்துக்கு முறையாக 14 நாட்களுக்கு முன்னர் அறிவித்தல் விடுக்கப்பட்டு இன்று மீண்டும் பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளது. தொழிற்சங்களினால் முன்வைக்கப்பட்டிருந்த 1700 ரூபா சம்பள அதிகரிப்பு தொடர்பில் தீர்மானிப்பதற்காக சம்பள நிர்ணய சபை கூட்டப்பட்டிருந்ததோடு, இந்த கோரிக்கை கம்பனிகள் ஏற்காவிட்டால் வாக்கெடுப்பினை நடத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டிருந்தது.
எவ்வாறிருப்பினும் இறுதி தருணத்தில் கம்பனிகளின் பிரதிநிதிகள் சமூகமளிக்க முடியாது என அறிவித்தமையால் எவ்வித தீர்மானத்தையும் எட்ட முடியாத நிலையில் பேச்சுவார்த்தை ஒத்தி வைக்கப்பட்டது. எவ்வாறிருப்பினும் இன்று முதலாளிமார் சம்மேளனமும் பேச்சுவார்த்தையில் பங்கேற்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளமையால், தீர்மானமொன்று எட்டப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இன்றைய பேச்சுவார்த்தை தொடர்பில் இலங்கை தொழிலாளர் காங்ரஸின் சிரேஷ்ட சட்ட ஆலோசகர் கே.மாரிமுத்துவிடம் வினவிய போது, 'இன்று முதலாளிமார் சம்மேளனம் பேச்சுவார்த்தையில் பங்கேற்குமா இல்லையா என்பதை எம்மால் உறுதியாகக் கூற முடியாது. ஆனால் கடந்த முறையைப் போன்று இம்முறையும் முதலாளிமார் சம்மேளனம் பேச்சுவார்த்தையைப் புறக்கணித்தால் இ.தொ.கா.வின் தலைமைபீடம் கூறி தீர்மானமொன்றை எடுக்கும்.' என்றார்.
இலங்கை தேசிய தோட்ட தொழிலாளர் சங்கத்தின் தேயிலை சம்பள நிர்ணய சபை உறுப்பினர் முத்துக்குமாரிடம் வினவிய போது, 'இன்றைய வாழ்க்கை செலவு புள்ளியுடன் ஒப்பிடுகையில் 1700 ரூபா என்பது போதுமான தொகையல்ல. எவ்வாறிருப்பினும் பெருந்தோட்ட மக்களுக்கு ஆகக் குறைந்தது இந்த தொகையாவது வழங்கப்பட வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும். அந்த வகையில் இன்றைய பேச்சுவார்த்தையிலாவது தீர்வொன்று எட்டப்படும் என்று எதிர்பார்க்கின்றோம்.' என்றார்.
சம்பள நிர்ணய சபையானது தொழில் ஆணையாளர் நாயகம் தலைமையில் கூட்டப்படும். இதில் தொழிற்சங்கங்கள் சார்பில் 8 பேரும், கம்பனிகள் சார்பில் 8 பேரும், அரசாங்கத்தின் சார்பில் மூவரும் (தொழில் ஆணையாளர் நாயகம் உட்பட) பங்கேற்பர். அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தொழில் அமைச்சராக பதவி வகித்த போது அரச தரப்பினர் மூவரும் தொழிலாளர்கள் சார்பாக தொழிற்சங்களுக்கே ஆதரவளித்தனர். இதனால் கடந்த முறை தொழிலாளர்களுக்கு சார்பான தீர்வு எட்டப்பட்டது. அதே போன்று இம்முறையும் அரச தரப்பு தொழிற்சங்களுக்கு ஆதரவளித்தால் தொழிலாளர்களுக்கு சாதகமான தீர்வு எட்டப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
No comments