Vettri

Breaking News

மாடியில் இருந்து விழுந்த குழந்தை பத்திரமாக மீட்பு: உயிரை பணயம் வைத்து மீட்ட மக்கள்




 




திருவள்ளூர்: ஆவடி அருகே அடுக்குமாடி குடியிருப்பின் 4-வது மாடியில் இருந்து கீழே விழுந்த 6 மாத பெண் குழந்தை, 2-வது மாடியில் மழைக்காக அமைக்கப்பட்டிருந்த தகர கூரையில் விழுந்ததால் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தது. குடியிருப்புவாசிகள் உயிரை பணயம் வைத்து, அந்த குழந்தையை பத்திரமாக மீட்டனர்.

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அடுத்த திருமுல்லைவாயல் திருமலைவாசன் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் இளம் தம்பதியின் 8 மாத பெண் குழந்தை கிரண்மயி.இந்நிலையில், நேற்று காலை குடியிருப்பு வளாகத்தின் 4-வது தளத்தில் இருந்தபடி, குழந்தைக்கு தாய் சோறு ஊட்டிக் கொண்டிருந்தார். அப்போது, எதிர்பாராத விதமாக, தாயின் பிடியில் இருந்து தவறிய குழந்தை, பால்கனி வழியாக கீழே விழுந்தது. தாய் அலறித் துடிக்க, அதிர்ஷ்டவசமாக, 2-வது மாடியில் மழைக்காக அமைக்கப்பட்டிருந்த தகர கூரை மீது குழந்தை விழுந்தது.

இந்த நிலையில், சத்தம் கேட்டு, குடியிருப்புவாசிகள் ஓடி வந்தனர். தகர கூரையின் நுனியில் குழந்தை அழுதபடியே தொங்கிக் கொண்டு இருப்பதை பார்த்து பலரும் பதறினர். பிடி நழுவினால் 2-வது மாடியில் இருந்து எந்நேரத்திலும் குழந்தை கீழே விழக்கூடும் என்ற நிலை இருந்ததால், ஒரு பெரிய துணியை கையில் பிடித்தபடி, பலரும் கீழே சூழ்ந்து நின்றனர். பின்னர், ஒரு பெரிய போர்வையை எடுத்து வந்து 10-க்கும் மேற்பட்டவர்கள் சுற்றி நின்று கெட்டியாக பிடித்துக் கொண்டனர்.

எதிர் குடியிருப்பில் இருந்து இதை பார்த்துக் கொண்டிருந்த 2 பெண்கள் உட்பட 3 பேர், “குழந்தையை எப்படியாவது காப்பாற்றுங்கள்” என தொடர்ந்து வேதனையுடன் குரலெழுப்பியபடி இருந்தனர்.

இதற்கிடையே, தகர கூரையில் தொங்கிக்கொண்டு இருக்கும் குழந்தையை பத்திரமாக மீட்பதற்கான முயற்சியில் குடியிருப்புவாசிகள் சிலர் இறங்கினர். உயிரை பணயம் வைத்து, முதல் தளத்தில் உள்ள ஜன்னல் வழியாக ஒன்றன்பின் ஒன்றாக இறங்கினர். ஒருவரை ஒருவர் பத்திரமாக பிடித்து கொள்ள, ஒருவர் துணிச்சலுடன் ஏறி, தகர கூரையின் நுனியில் தவித்துக் கொண்டிருந்த குழந்தையை லாவகமாக மீட்டார்.

குழந்தையை   எப்படியாவது காப்பாற்றிவிட வேண்டும் என்ற முயற்சியில் ஈடுபட்ட அனைவரும் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.மீட்கப்பட்ட குழந்தை கிரண்மயிக்கு நெற்றியில் லேசாக காயம்பட்டிருந்தது. உடனடியாக குழந்தைக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

கூரையின் நுனியில் குழந்தை தவிப்பது முதல், பத்திரமாக மீட்கப்பட்டது வரை வீடியோவாக பதிவு செய்த ஒருவர் இதை சமூக வலைதளத்தில் பதிவிட்டார். வலைதளங்களில் இது வைரலானது. குழந்தையை மீட்கும் முயற்சியில் ஈடுபட்ட அனைவருக்கும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

No comments