Vettri

Breaking News

"Blue Flag Beach" எண்ணக்கரு தொடர்பில் மேற்பார்வைக் குழுவில் கலந்துரையாடல் !!




 சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் நோக்கும் இந்நாட்டின் கரையோரத்தில் நடைமுறைப்படுத்தும் நோக்கிலான "Blue Flag Beach" எண்ணக்கரு தொடர்பில் சுற்றாடல், இயற்கை வளங்கள் மற்றும் நிலைபேறான அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் கலந்துரையாடப்பட்டது. பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ அஜித் மான்னப்பெரும தலைமையில் அண்மையில் (20) பாராளுமன்றத்தில் இந்தக் குழு கூடிய போதே இது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

இந்தக் கூட்டத்தில் நகர அவிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு, சுற்றுலா மற்றும் காணி அமைச்சு, மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு, கரையோரப் பாதுகாப்பு மற்றும் கரையோர வளங்கள் முகாமைத்துவத் திணைக்களம், கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபை மற்றும் இலங்கை துறைமுக அதிகாரசபை ஆகிய நிறுவனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி அதிகாரிகள் கலந்துகொண்டிருந்தனர்.
அத்துடன், இந்தக் குழுக் கூட்டத்தில் எதிர்க் கட்சித் தலைவர் கௌரவ சஜித் பிரேமதாசவும் கலந்துகொண்டிருந்தார்.
"Blue Flag Beach" தரச் சான்றிதழைப் பெற்றுள்ள கரையோரங்களுக்கு அதிகளவு சுற்றுலாப் பயணிகளின் ஈர்ப்பு காணப்படுவதாக குழுவின் தலைவர் சுட்டிக்காட்டினார். அதற்குக் காரணம் இந்தக் கரையோரங்கள் மிகவும் பாதுகாப்பானதாகவும், உயர் தரம் வாய்ந்ததாகவும் காணப்படுவது என அவர் தெரிவித்தார். உலகில் தற்பொழுது சுமார் 50 நாடுகளில் 4000 கரையோரங்கள் "Blue Flag Beach" சான்றிதழ் பெற்றுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். எனினும், இலங்கையில் இதுவரை "Blue Flag Beach" சான்றிதழைப் பெறுவதற்கு கரையோரங்கள் தரம் வாய்ந்ததாக அபிவிருத்தி செய்யப்படாமை தொடர்பில் சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினரதும் கவனம் செலுத்தப்பட வேண்டும் என குழுவின் தலைவர் சுட்டிக்காட்டினார்.
இலங்கையில் இதுவரை பிரதான 12 கடற்கரைகள் "Blue Flag Beach" எண்ணக்கருவை நடைமுறைப்படுத்த அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவற்றில் 4 கடற்கரைகளை செயற்பாட்டு மட்டத்துக்குக் கொண்டுவருவதற்கு தற்பொழுது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக இதன்போது கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபை சுட்டிக்காட்டியது.
அத்துடன், கரையோரங்களில் சட்டவிரோதமான கட்டுமானங்களை தடுப்பதற்கு எடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகள் தொடர்பில் எதிர்க் கட்சித் தலைவர் கௌரவ சஜித் பிரேமதாச வினவினார்.
இந்தக் கூட்டத்தில் குழுவின் உறுப்பினர்களான கௌரவ ஜயந்த கெடகொட, கௌரவ நாலக பண்டார கோட்டெகொட ஆகியோரும் கலந்துகொண்டனர்.




No comments