ஆலயத்திற்கு எதிரே புத்த விகாரை..! கிழக்கில் அரங்கேறும் மற்றுமொரு அநீதி
திருகோணமலை மடத்தடி பகுதியில் மேற்கொள்ளப்பட்டுவரும் சட்டவிரோதமான பௌத்தம் சார்ந்த கட்டுமான பணிகளினால் அப்பகுதியில் பதட்டமான சூழல் நிலவி வருகின்றது.
திருக்கோணமலை மடத்தடி வீரகத்தி பிள்ளையார் ஆலயத்திற்கு முன்பாக உள்ள ஆலயத்திற்கு சொந்தமான பகுதியில் சட்டவிரோதமான முறையில் பெரும்பான்மை மக்களினால் கடந்த வெள்ளிக்கிழமை முதல் பௌத்தம் சார்ந்த கட்டுமானங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
அப்பகுதியில் 2019 ஆம் ஆண்டு சட்ட விரோதமான முறையில் புத்தர் சிலை வைக்கப்பட்டிருந்த நிலையில் அப்பகுதியில் பாரிய கட்டுமானங்களுக்கான கட்டடப் பொருட்கள் இறக்கப்பட்டு கட்டுமானப்பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிய வருகின்றது.
குறித்த சட்ட விரோத கட்டுமானம் தொடர்பாக திருகோணமலை நகராட்சி மன்றத்திற்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டை அடுத்து நகரசபையின் செயலாளர் கடந்த சனிக்கிழமை அப்பகுதிக்கான விஜயம் ஒன்றினை மேற்கொண்டிருந்தார்.
இதன் பின்னரும் நான்கு பாரிய தூண்கள் அமைக்கப்பட்டு தொடர்ச்சியாக கட்டுமானப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அங்கிருந்து கிடைக்கின்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த பகுதியானது மடத்தடி வீரகத்தி பிள்ளையார் ஆலயத்திற்கு சொந்தமானது எனவும் அப்பகுதியை சிலர் ஆக்கிரமித்து வசித்து வருவதாகவும், அதற்கான ஆவணங்களை வழங்குமாறு கோரி வருவதோடு தொடர்ந்தும் பௌத்தம் சார்ந்த ஆக்கிரமிப்புகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இச்செயற்பாடானது இனங்களுக்கு இடையேயான முறுகல் நிலையை தோற்றுவிக்கலாம் எனவும் புத்திஜீவிகள் தெரிவிக்கின்றனர்.
No comments