Vettri

Breaking News

கிழக்குப்பல்கலைக்கழகம், பெண் தொழில் முயற்சியாளர்களையும், பெண் சமூகசேவையாளர்களையும் கௌரவிப்பு!!










சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு கிழக்குப்பல்கலைக்கழகமானது முதன்முறையாக மட்டக்களப்பு மாவட்டத்தில் 14 செயலகபிரிவுகளில் தொழில் முயற்சிற்கும், சமூக சேவைக்கும் அதி கூடிய பங்களிப்பு செய்த 14 பெண் தொழில் முயற்சியாளர்களையும், 14 பெண் சமூகசேவையாளர்களையும் கௌரவிக்கும் முகமாக 'சர்வதேச மகளிர் தினம் - 2024' நிகழ்வானது 13.03.2024 அன்று கிழக்கு பல்கலைக்கழக நல்லையா மண்டபத்தில் நடைபெற்றது. இந் நிகழ்வானது கிழக்குப்பல்கலைக்கழகத்தின் பாலின சமத்துவம் மற்றும் சம உரிமை பிரிவினரால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. இந் நிகழ்விற்கு பிரதம விருந்தினராக கிழக்குப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் வ. கனகசிங்கம் அவர்களும். சிறப்பு விருந்தினராக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் (மாவட்ட செயலகம்) திருமதி  ஜெ. முரளிதரன் அவர்களும், மற்றும் கௌரவ விருத்தினராக கிழக்குப்பல்கலைக்கழகத்தின் பிரதி உபவேந்தர் கலாநிதி த. பிரபாகரன் அவர்களும் கலந்து கொண்டார்கள். கிழக்குப்பல்கலைக்கழகத்தின் பீடங்களின் பீடாதிபதிகள், கல்விசார் ஊழியர்கள், நிர்வாக உத்தியோகத்தர்கள், கல்விசார ஊழியர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பொதுமக்களும் இந் நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் பாலின சமத்துவம் மற்றும் சம உரிமை பிரிவின் முன்னாள் பணிப்பாளர் கேமமாலி குணதிலக்க அவர்கள் நிகழ்கலையூடாக முதன்மையுரையினை வழங்கினார். அவர் தனது உரையில் 'உலகிலும், இலங்கையிலும் பெண்களுக்கான சமநிலை மற்றும் சமத்துவம் அனைவராலும் கொடுக்கப்படுகின்றது என்றும் சமூகத்தின் பார்வை மாற்றப்பட்டுள்ளது' என்றும் குறிப்பிட்டார். உபவேந்தர் பேராசிரியர் வ. கனகசிங்கம் அவர்கள் தனது பிரதம உரையில், 'பல்கலைக்கழகமானது ஒரு சமூக நிறுவனமாக இருப்பதனால், சமூகம் சார்ந்த நிகழ்வுகளிள் பங்களிப்பு செய்வது முக்கியமானதாகும் தற்போது மட்டக்களப்பு மாவட்டமானது பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொண்டு வருகின்றது. பிரதானமாக பொருளாதார நெருக்கடிக்கடியின் மத்தியில் பெண்கள் தமது சுயமுயற்சியில் சமூகத்திற்கு பாரிய பங்களிப்பு செய்வது பாரட்டபடவேண்டிய விடயமாகும். அந்தவகையில் தமது குடும்ப சுமைகளுக்கு மத்தியில் தனது  தனிப்பட்ட தேவைகளை கருத்தில் கொள்ளாது சமூகசேவையை மட்டும் கருத்தில் கொண்டு செயற்பட்டுக்கொண்டு வருகின்ற சாதனைப்பெண்களை  கிழக்குப்பல்கலைக்கழகம் சார்பாக கௌரவிப்பதில் மிகவும் பெருமிதமடைகின்றோம். ஏதிர்வரும் காலங்களில் பல்வேறுபட்ட நிறுவனங்களுடன் இணைந்து சமூகத்திற்கு முன்மாதிரியாக திகழும் பெண்களை இணங்கண்டு அவர்களை கௌரவிப்பதுடன், அவர்களுக்குரிய அங்கீகாரத்தையும் வழங்க திட்டமிட்டுள்ளோம்' என்று குறிப்பிட்டார். 

இதனைத் தொடர்ந்து மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜெ. முரளிதரன் அவர்களால் சிறப்பு விருத்தினர் உரையாற்றப்பட்டதுடன், அவர் தனது உரையில், மகளிர் தினமானது மட்டக்களப்பு மாவட்டத்தில் மார்ச் மாதம் முழுவதும் கொண்டாடப்பட்டுவருகின்றது. அந்தவகையில் கிழக்கு பல்கலைக்கழகமானது மட்டக்களப்பு மாவட்டத்தின் பெண் முயற்சியாளர்களையும் சமூகசேவையாளர்களையும் கௌரவிப்பது முதற்தடவையாகும் என குறிப்பிட்டார். இந்நிகழ்வில் பெண் தொழில் முயற்சியாளர்கள் மற்றும் பெண் சமூகசேவையாளர்கள் தமது சுயசரிதையை பகிர்ந்துகொண்டது அனைவரையும் மிகுவாக கவர்ந்தது.


ஜே.கே.யதுர்ஷன்

தம்பிலுவில் நிருபர்...

No comments