யூதர்கள் மீதான கொலை வெறித்தாக்குதல்! அச்சத்தில் சுவிட்சர்லாந்து
சுவிட்சர்லாந்தின் சூரிச்சில் நடந்த கத்திக்குத்து சம்பவமானது அந்நாட்டில் யூத எதிர்ப்பினை விதைத்துவிடுமோ என்ற அச்சத்தினை ஏற்படுத்தியுள்ளதாக சுவிட்சர்லாந்தின் அதிபர் வயோலா அம்ஹெர்ட் தெரிவித்துள்ளார்.
குறித்த கத்திக்குத்துச் சம்பவமானது கடந்த சனிக்கிழமையன்று (02) இடம்பெற்றுள்ளது.
சம்பவ தினத்தன்று 50 வயதான ஆர்த்தடொக்ஸ் யூத நபர் ஒருவர் சுவிட்சர்லாந்தின் சூரிச்சில் வைத்து கத்திக்குத்துக்கு இலக்கானார், இதன் போது அவரை மீட்ட காவல்துறையினர் அவரை வைத்தியசாலையில் அனுமதித்திருந்தனர்.
மேலதிக விசாரணை
அங்கு அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிருக்கு எந்தவித ஆபத்தும் இல்லை என்றும் உடல்நலம் தேறி வருவதாகவும் நேற்றைய தினம் (04) வைத்தியசாலை நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், குறித்த தாக்குதல் சம்பவம் சாதாரணமானது இல்லை எனவும் இது யூத எதிர்ப்பை பிரதிபலிப்பதாக இருப்பதாகவும் சந்தேகித்த காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வந்தனர்.
இதனடிப்படையில், துனிசியப் பின்னணியைக் கொண்ட 15 வயது சுவிஸ் சிறுவன் இந்தத் தாக்குதலை நடத்தியிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளார்.
உடனடியாக தீர்வு
இந்நிலையில் தாக்குதலுடன் தொடர்புடையதாக கருதப்படும் காணொளி ஒன்றும் புலனாய்வுப்பிரிவினருக்கு கிடைத்துள்ளது, அதில் இளைஞன் ஒருவன் இஸ்லாமிய அரசு குழுவிற்கு தனது விசுவாசத்தை காண்பிப்பதோடு, உலகெங்கிலும் உள்ள யூதர்களுக்கு எதிராக போரிட அழைப்பு விடுத்துள்ளார்.
தவிரவும், இளைஞர்கள் சுவிட்சர்லாந்தில் யூதர்கள் மீது பெரும் தாக்குதலை நடத்துவோம் என்று அச்சுறுத்தியது மாத்திரமன்றி முடிந்தவரை பல யூதர்களுக்கு தீங்கு விளைவிப்போம் என்றும், தெருவில் சென்று முஸ்லிமல்லாதவர்களை கொலை செய்வோம் என்றும் மேலும் தெரிவித்திருந்தார்.
இஸ்ரேல் - ஹமாஸ் இடையே முடிவின்றி தொடரும் இந்த யுத்தத்தின் எதிரொலியாக இந்தப் பிரச்சினை உருவாகியுள்ளதாக தெரிவித்த காவல்துறையினர், இஸ்லாம் ஆதரவாளர்கள் ஹாமாஸ்க்கு ஆதரவான தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்தும் விதமாகவும் இந்தப் பிரச்சினையை நிகழ்த்துவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனால் சுவிட்சர்லாந்தில் யூத எதிர்ப்பு தலைதூக்கிவிடுமோ என்ற அச்சம் அனைவர் மத்தியிலும் பரவத்தொடங்கியுள்ளதாகவும், இது மிகவும் ஆபத்தான விடயம் என்பதால் இது தொடர்பில் உடனடியாக தீர்வு எட்டப்பட வேண்டும் எனவும் அந்நாட்டின் அதிபர் இதன்போது வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments