மோட்டார் சைக்கிள்களை திருடிய மோசடியில் ஈடுபட்ட சந்தேக நபர்கள் கைது!!
மோட்டார் சைக்கிள்களை திருடி பாகங்களாக பிரித்து விற்பனை செய்யும் மோசடியில் ஈடுபட்ட நான்கு சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இதன்போது அவர்களிடம் இருந்து 116 மோட்டார் சைக்கிளின் இலக்க தகடுகளை பொலிஸார் கண்டுபிடித்தனர்.
அனுராதபுரம் ஸ்ரவஸ்திபுர, தம்புள்ளை கித்துல்ஹிதியாவ, மிரிஸ்கோனியா சந்தி மற்றும் ஹீன் மொரகொல்ல ஆகிய இடங்களில் வசிக்கும் 29 முதல் 44 வயதிற்கும் இடைப்பட்ட சந்தேகநபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
அநுராதபுரம் பிரதேச புலனாய்வு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போதே குறித்த குழுவினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த திருட்டு மோசடி சுமார் 10 வருடங்களாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
கைப்பற்றப்பட்ட இலக்கத் தகடுகளுடன் தொடர்புடைய மோட்டார் சைக்கிள்களின் சட்டப்பூர்வ உரிமையாளர்களைக் கண்டறிவதற்காக இந்த விடயம் குறித்து மோட்டார் போக்குவரத்து திணைக்களத்திற்கு அறிவிக்கப்படவுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இன்று (24) நொச்சியாகம நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
இதேவேளை, மோட்டார் சைக்கிள்களை திருடி பாகங்களாக பிரித்து விற்பனை செய்யும் மோசடியில் ஈடுபட்டு வந்த மேலும் மூவரை வெலிக்கடை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, திருடப்பட்ட மோட்டார் சைக்கிள்களை அவிசாவளையில் இருவருக்கு கொடுத்து பாகங்களாக பிரித்து விற்பனை செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.
சந்தேகநபர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட பொருட்களில், மோட்டார் சைக்கிள் உதிரி பாகங்கள், தகவல்களை அறிய முடியாத வகையில் உள்ள பத்து மோட்டார் சைக்கிள்கள் மற்றும் இந்த குற்றச்செயல்களுக்கு பயன்படுத்தப்பட்ட இரண்டு மோட்டார் சைக்கிள்களும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
No comments