2024 ரி - 20 உலகக் கிண்ணத்திலிருந்து சர்வதேச வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் நிறுத்தக் கடிகார முறைமை நிரந்தரம்!!!
இந்த வருடம் நடைபெறவுள்ள ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியிலிருந்து வெள்ளைப் பந்து சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் நிறுத்தக் கடிகாரம் (Stop clock) முறைமை நிரந்தரமாக்கப்படவுள்ளது.
இந்த முடிவு வெள்ளிக்கிழமை (15) நடைபெற்ற சர்வதேச கிரிக்கெட் பேரவையின் (ஐசிசி) வருடாந்த சபைக் கூட்டத்தில் எடுக்கப்பட்டது.
மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் அமெரிக்காவில் 2024 ஜூன் மாதம் தொடங்கவுள்ள ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ண ஆரம்பப் போட்டியிலிருந்து அனைத்து சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளிலும் ரி20 சர்வதேச போட்டிகளிலும் நிறுத்தக் கடிகாரம் நிரந்தரமாக்கப்படும்.
ஆடவருக்கான மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் சர்வதேச போட்டிகளில் 2023 டிசம்பரில் பரீட்சார்த்த அடிப்படையில் நிறுத்தக் கடிகாரத்தை ஐசிசி அறிமுகப்படுத்தியது. இந்த பரீட்சார்த்த செயற்பாடு 2024 ஏப்ரல் வரை தொடர்வதாக இருந்தது. ஆனால், இந்த பரீச்சார்த்த செயற்பாடானது போட்டிகளை குறிப்பிட்ட நேரத்திற்குள் நிறைவு செய்ய முடியும் என்பதை உறுதிப்படுத்தியுள்ளது.
இந்த பரீட்சார்த்த செயற்பாட்டின் மூலம் ஒவ்வொரு சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியிலும் 20 நிமிடங்களை மீதப்படுத்தலாம் என பிரதம நிறைவேற்று அதிகாரிகள் குழுவிடம் எடுத்துக்கூறப்பட்டது.
இதற்கு அமைய சகல முழு அந்தஸ்துடைய நாடுகளுக்கு இடையிலான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் மற்றும் ரி20 சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இந்த முறைமை 2024 ஜூன் 1ஆம் திகதயிலிருந்து கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அன்றைய தினத்திலிருந்துதான் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி ஆரம்பமாகவுள்ளது.
நிறுத்தக் கடிகார விதிக்கு அமைய வெள்ளைப் பந்து கிரிக்கெட் போட்டிகளில் களத்தடுப்பில் ஈடுபடும் அணியினர் ஒரு ஓவர் முடிவடைந்து 60 செக்கன்களுக்குள் அடுத்த ஓவரை ஆரம்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
60 செக்கன்களிலிருந்து பூஜ்ஜியம்வரை பின்னோக்கி நகரும் மின்னியல் கடிகாரம் மைதானத்தில் காட்சிப்படுத்தப்படும். கடிகாரத்தின் தொடக்கத்தை தீர்மானிப்பது மூன்றாவது மத்தியஸ்தரின் பொறுப்பில் இருக்கும்.
களத்தடுப்பில் ஈடுபடும் அணி முந்தைய ஓவர் முடிவடைந்து குறிப்பிட்ட 60 செக்கன்களுக்குள் அடுத்த ஓவரின் முதலாவது பந்தை வீச தவறினால் 2 எச்சரிக்கைகளுக்கு உள்ளாகும். தொடர்ச்சியாக மீறல்கள் இடம்பெற்றால் ஒவ்வொரு மீறல்களுக்கும் 5 ஓட்டங்கள் வீதம் அபாராதம் விதிக்கப்படும். அதாவது மற்றைய அணியின் மொத்த எண்ணிக்கைக்கு 5 ஓட்டங்கள் வீதம் செரும்.
இந்த விதியில் சில விதிவிலக்குகள் உள்ளன, மேலும் கடிகாரம் ஏற்கனவே தொடங்கப்பட்டிருந்தால், சூழ்நிலைகளுக்கு ஏற்ப அது ரத்து செய்யப்படலாம்.
ஓவர்களுக்கு இடையில் ஒரு புதிய துடுப்பாட்ட வீரர் களம் நுழையும்போது,
உத்தியோகபூர்வ தாகசாந்தி இடைவெளி அறிவிக்கப்படும்போது,
துடுபாட்ட வீரர் அல்லது களத்தடுப்பாளருக்கு உபாதை ஏற்பட்டு சிகிச்சைக்கு கள மத்தியஸ்தர் ஒப்புதல் வழங்கும்போது,
களத்தடுப்பில் ஈடுபடும் அணியின் கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்ட எந்த சூழ்நிலையிலும் நேரம் இழக்கப்படும்போது இந்த விதியில் விதிவிலக்களிக்கப்படும்.
No comments