இலங்கை-ஆப்கான் அணிகளின் கடைசி ஒருநாள் போட்டி இன்று
இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று (14) பல்லேகல சர்வதேச கிரிக்கெட் அரங்கில் நடைபெறவுள்ளது.
இந்த ஒருநாள் தொடரின் முதல் இரு போட்டிகளிலும் இலங்கை அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றிய நிலையிலேயே இன்று தொடரை முழுமையாக வெல்லும் இலக்குடன் இன்று களமிறங்கவுள்ளது. மறுபுறம் ஆப்கானிஸ்தான் தொடரில் ஒரு போட்டியிலேனும் வெற்றி பெற வேண்டும் என்ற இலக்குடன் இன்று ஆடும் என்று எதிர்பார்க்கலாம்
முதலாவது ஒருநாள் போட்டியில் பத்தும் நிசங்கவின் இரட்டைச் சதத்துடன் இலங்கை அணி வெற்றியீட்டியபோதும் ஆப்கான் அணி இலங்கைக்கு கடைசி வரை சவால் கொடுத்தது. இரண்டாவது ஒருநாள் போட்டியில் ஆப்கான் அணி 10 ஓட்டங்களில் கடைசி ஏழு விக்கெட்டுகளையும் மளமளவென்று பறிகொடுத்தே தோல்வியை சந்தித்தது.
குறிப்பாக துடுப்பாட்டத்திற்கு சாதகமான பல்லேகல மைதானத்தில் இலங்கை அணி முதல் இரு போட்டிகளிலும் 300க்கும் அதினமான ஓட்டங்களை பெற்றிருந்ததோடு பந்துவீச்சிலும் வனிந்து ஹசரங்க, டில்ஷான் மதுஷங்க பிரமோத் மதுஷான் சிறப்பாக செயற்பட்டு வருகின்றனர்.
இலங்கை அணி ஏற்கனவே தொடரை கைப்பற்றி இருக்கும் நிலையில் இன்றைய போட்டியில் அணியில் சில மாற்றங்கள் செய்யப்பட வாய்ப்பு அதிகம் உள்ளது. குறிப்பாக சகலதுறை வீரர்களான சாமிக்க கருணாரத்ன மற்றும் துனித் வெள்ளாலகே அழைக்கப்பட வாய்ப்பு உள்ளது.
எனினும் அடுத்து ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரில் ஆடவேண்டி இருப்பதால் அதற்கு தயாராகும் வகையில் இன்றைய போட்டியை இலங்கை அமைத்துக் கொள்ளும் என்று எதிர்பார்க்கலாம்.
No comments