கிழக்கில் அருகிப்போகும் சுண்ணாம்பு தொழிலாளர்களின் சோகம்!!
(செ.துஜியந்தன்)
'கூட்டத்தில் கூடி நின்று கூவி பிதற்றலன்றிநாட்டத்தில் கொள்ளாரடி கிளியே நாளில் மறப்பாரடி'
என்ற மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் பாடல்வரிகள் வாய்ச் சொல்லில் வீரராக இருப்பவர்களுக்கு என்றும் பொருத்தமாக இருக்கின்றது. ஏழை மக்களுக்கு அதைச் செய்வோம் இதைச் செய்வோம் என தேர்தல் காலத்தில் மேடைகளில் வீரமுழக்கம் முழங்கும் அரசியல்வாதிகள் தேர்தல் பரப்புரைகள் முடிந்து வெற்றிபெற்ற பின்னர் அம் மக்களை கண்டு கொள்வதில்லை. அவர்களின் பயணம் 'ஆறு கடக்கும் வரை அண்ணன் தம்பி ஆற்றைக்கடந்த பின்னர் நீயாரோ? நான் யாரோ?' என்ற நிலையாகவே இருக்கின்றது. நாட்டில் நாளுக்கு நாள் உயரும் விலைவாசியால் ஏழை மக்கள்படும் துயர் சொல்லிமாளாது. இந் நிலையில் பலர் பாரம்பரியமாக செய்து வந்த தமது குடிசைக் கைத்தொழிலையும் கைவிட்டுள்ளனர். பாரம்பரிய குடிசைக் கைத் தொழிலாளர்களின் தொழில் துறைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும் என பேசப்பட்டுவந்தாலும் இன்னும் அத் தொழிலில் ஈடுபடுபவர்களுக்கு நவீன முறையிலான தொழில் வழிகாட்டல்கள், ஆலோசனைகள் கூட வழங்கப்படாதுள்ளது. காலப்போக்கில் அருகிப்போகும் தொழில் துறைகளில் ஒன்றாக சுண்ணாம்பு நீறு உற்பத்தியாளர்களது தொழில் உள்ளது. ஒரு காலத்தில் அமோகமாக கொடிகட்டிப்பறந்த சுண்ணாம்பு தொழிலாளர்களது வாழ்க்கை. இன்று வீழ்ச்சியடைந்து செல்லும் தொழிலாக மாறியுள்ளது. விரல்விட்டு எண்ணக்கூடிய சிலரே தற்போது சுண்ணாம்பு உற்பத்தியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு மண்முனைப்பற்று ஆரையம்பதி பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட கோயில்குளம் எனும் கிராமத்தில் மாத்திரமே சுண்ணாம்பு நீறு உற்பத்தியில் ஈடுபடும் தொழிலாளர்கள் இருக்கின்றனர். அதுவும் இத் தொழிலை நம்பி குடும்பசீவியத்தை நகர்த்திவந்த பலர் இன்றைய விலைவாசி ஏற்றம் மற்றும் சந்தைப்படுத்தல் வசதியற்ற நிலை ஆகியவற்றால் தாம் செய்து வந்த இக் கைத்தொழிலை கைவிட்டுச் சென்றுள்ளனர். இத் தொழிலை கைவிட்டால் தமது சீவியத்துக்கு வேறு வழி தெரியாத ஒரு சில குடும்பங்கள் மாத்திரம் மிகுந்த கஸ்டங்களுக்கு மத்தியில் சுண்ணாம்பு உற்பத்தியில் ஈடுபடுகின்றனர்.
கடந்த 35 வருடங்களாக சுண்ணாம்பு நீறு உற்பத்தியில் ஈடுபட்டுவரும் கோயில்குளம் அருமைநாதன்(55வயது) என்பவர் தனது வேதனையை இப்படிக்கூறுகின்றார்.
'ஒரு காலத்தில் வீட்டுக்கு சுண்ணாம்பு பூசாமல் ஒண்டும் செய்யமாட்டாங்க. இப்ப கட்டிடங்களுக்கு நீறு கலந்து பூசுவதை விட்டுத்தாங்க. முன்னர் செழிப்பாக இருந்த சுண்ணாம்பு தொழில் இப்போ சுருண்டுபடுத்துட்டு. இங்க 25பேர் இந்த தொழிலை செய்துவந்தாங்க. இப்போ நானும் இன்னும் ரெண்டு, மூணு பேர் மட்டு;மே செய்துவருகிறோம். சாமானுகளுக்கு எல்லாம் விலை கூடிப்போயிற்று. முந்தி இருநூறு ரூபாக்கு வாங்கின சிற்பி ஐந்நூறு விற்குது. நாங்க சிற்பி வாங்குறது எண்டால் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள வலையிறவு, புதூர், திமிலைத்தீவு, வாகரை போன்ற தூர இடங்களுக்குச் சென்றுதான் எடுத்துவரவேணும். அங்கும் மட்டி பிடித்து விற்பனை செய்யும் ஆட்கள் குறைஞ்சி போயிற்றாங்க. சிற்பி கோது எடுக்கிறது சரியான கஸ்டமாக இருக்கிறது. தூரஇடங்களில் இருந்து 25 கிலோ சிற்பி வேக் நூறு வாங்கி ஏற்றி வருவது எண்டால் எல்லாம் சேர்த்து ஐம்பது ஆயிரம் ரூபா செலவாகும். இந்த ஐம்பது ஆயிரம் ரூபா முதலீட்டை செய்து சிற்பியைக் கொண்டுவந்து சூளையில் போட்டு சுட்டு எடுக்கவேண்டும். சுண்ணாம்பு சூளையில் சிற்பியை சுட்டு எடுப்பதற்கு அடுப்பு கரி அல்லது பனங்கொட்டை போட்டு எரிக்கவேண்டும். கரி 700ரூபாவும், பனங்கொட்டை 150ரூபாவும் போகுது. இவ்வளவு கஸ்டப்பட்டு சிற்பியை நீறாக்கி எடுத்தால் அதை விற்பதற்கு மூணு, நாலு மாசம் ஆகும். எங்களப்போல கஸ்டப்படும் சிறு குடிசைக் கைத்தொழிலாளர்களின் பிரச்சினைகளை பேசி தீர்க்கவோ, உதவி செய்யவோ ஆருமில்லை. சும்மா வந்து படம் பிடிச்சுட்டு வாக்குறுதி தந்துட்டு போறத்துக்கு நிறையப்பேர் இருக்காங்க. இன்னும் ஓரிரு வருடங்களில் எங்களோட இந்த தொழில் அழிஞ்சு போயிடும் அதுதான் கவலையாக கிடக்குது.' என்றார் மனவேதனையுடன் அருமைநாதன்.
சுண்ணாம்பு நீறு தொழில் என்பது அவ்வளவு இலகுவான ஒரு தொழில் அல்ல. கடலில் மட்டிபிடிப்பவர்களை முதலில் தேடிப்பிடிக்க வேண்டும். அவர்கள் பிடிக்கும் மட்டியை உணவிற்காக அவித்து எடுத்து விட்டு அதன் சிற்பி கோதை இவர்களுக்கு விற்பார்கள். அதனைப் பெற்றுக்கொள்ளும் சுண்ணாம்பு தொழிலாளர்கள் அவர்களது இடத்திற்கு கொண்டுவந்து சிற்பியை வெயிலில் காயப்போடுவார்கள். பின்னர் சுண்ணாம்பு சூளையில் சிற்பியை போட்டு நெருப்பில் சுடுவார்கள். நெருப்பிற்காக கரி அல்லது பனங்கொட்டை பயன்படுத்துகின்றனர். சுடுபட்டசிற்பியை எடுத்து நீறாக்கி பதமாக்கி நீறு பக்கட் போடுவார்கள். 15 கிலோ வேக் நீறு போட்டு விற்பார்கள். ஒரு சூளைக்கு 10 வேக் சிற்பி போட்டு அதற்கு நெருப்பிற்காக 20 வேக் பனங்கொட்டை அல்லது 5 வேக் கரி போட்டு எரிப்பார்கள். ஒரு சுண்ணாம்பு சூளையில் 35 சாக்கு நீறு கிடைக்கும். இதனை விற்று பணம் ஆக்குவதற்கு குறைந்தது இண்டு, மூன்று மதங்கள் ஆகிறது.
இவ் சுண்ணாம்பு உற்பத்தியை மிகுந்த இன்னல்களுக்கு மத்தியில்தான் அவர்கள் செய்து வருகின்றனர். பாரம்பரியமாக செய்துவரும் இத் தொழிலாளர்களின் வாழ்வியலை முன்னேற்ற இதுவரை எந்தவொரு ஆக்க பூர்வமான நடவடிக்கைகளும் அரச, அரசசார்பற்ற நிறுவனங்களினால் முன்னெடுக்கப்படவில்லை என்பது பெரும் கவலையாகும். இன்று சிற்பியை நீறாகப் பதப்படுத்துவதற்கு நவீன இயந்திரங்கள் வந்து விட்டது. ஆனால் இவர்களுக்கு அந்த வசதி வாய்ப்பு கூட ஏற்படுத்திக் கொடுக்கப்படவில்லை. வங்கிகளில் சுண்ணாம்பு தொழிலுக்கு என கடன் வசதிகள் கூட வழங்கப்படுவதில்லை என இம் மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். நீறு என்பது வீட்டுக்கு மட்டுமல்ல தோட்டங்கள் செய்பவர்களுக்கு சிறந்ததொரு கிருமி நாசினியாகவும் பயன்படுகிறது. கிருமித் தாக்கங்களில் இருந்து பயிர்களையும், சுற்றுப்புறத்தையும் பாதுகாக்கின்றது. தற்போது முட்டைக்கோழி வளர்ப்பவர்களுக்கு தீனியாகவும் சிற்பி பயன்படுத்தப்படுவதாக சுண்ணாம்பு செய்கையாளர்கள் தெரிவிக்கின்றனர். இதனால் அதிக விலைக்கு நிறுவனங்கள் சிற்பியை கொள்வனவு செய்வதினால் தம்மைப்போன்ற சிறு வியாபாரிகளுக்கு சிற்பி கிடைப்பதில்லை என நீறு தொழிலாளி அருமைநாதன் கூறினார். நவீன இயந்திரங்களில் சிற்பியை அரைத்து கூடுதல் விலைக்கு நிறுவனங்கள் கோழித்தீன் விற்பனை செய்கிறது. சிற்பியை அரைக்கும் அவ்வாறான நவீன இயந்திரங்கள் அரச அரசசார்பற்ற நிறுவனங்கள் ஊடாக தமக்கு கிடைக்குமாக இருந்தால் சுண்ணாம்பு உற்பத்தியை மேலும் அதிகரிக்க முடியும் என கூறுகின்றனர். நீறு உற்பத்தியில் ஈடுபடும் இத் தொழிலாளர்களின் தரத்தை உயர்த்துவதற்கு நவீன இயந்திர சாதனங்கள் வழங்கப்படவேண்டும்.
சுண்ணாம்பு தொழிலை நம்பி சீவியம் நடத்துபவர்களுக்கு மழைக் காலம ;ஆரம்பித்து விட்டால் அத் தொழிலை செய்யமுடியாது. இக் காலப்பகுதியில் வேறு வருமானம் இன்றி அன்றாடச் செலவுகளுக்கு அல்லாட வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு சுண்ணாம்பு உற்பத்தியாளர்கள் செல்கின்றனர். அருகிப்போகும் நிலையிலுள்ள சுண்ணபாம்பு நீறு உற்பத்தியை ஊக்குவிப்பதற்கும், மேம்படுத்துவதற்கும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும். கஸ்டப்படும் சுண்ணாம்பு தொழிலாளர்களின் வேதனைகள் தீர்க்கப்படுமா? இலவு காத்த கிளிபோல் காத்திருக்கின்றனர் அத் தொழிலாளிகள்.?
No comments