கல்முனையில் உலக வாய் சுகாதார தினத்தினை முன்னிட்டு மாபெரும் பற்சிகிச்சை முகாம்!!
பாறுக் ஷிஹான்
உலக வாய் சுகாதார தினத்தினை முன்னிட்டு கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலின் கீழ் பிராந்திய வாய் சுகாதார பிரிவு ஏற்பாடு செய்த மாபெரும் பற்சிகிச்சை முகாம் வெள்ளிக்கிழமை (23) பெரியநீலாவனை கிராமிய ஆயுர்வேத வைத்தியசாலை வளாகத்தில் இடம்பெற்றது.
இலங்கை பல் மருத்துவ சங்கத்தின் கிழக்கு மாகாண கிளையின் ஒருங்கிணைப்பில் மகிழ்ச்சியான வாய் ஆரோக்கியமான உடல் எனும் தொனிப்பொருளில் பிராந்திய வாய் சுகாதார பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர் எம்.எச்.எம்.சரூக் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி சகீலா இஸ்ஸடீன் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.
இதன்போது நிந்தவூர் ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டொக்டர் எம்.பீ.அப்துல் வாஜித், கல்முனை பிராந்திய சுகாதார பணிமனையின் பிரிவுத் தலைவர்கள், இலங்கை பல் மருத்துவர் சங்கத்தின் கிழக்கு மாகாண தலைவர் டொக்டர் ரீ.கேதீசன், செயலாளர் டொக்டர் எஸ்.லிவிட்டன் உட்பட சங்கத்தின் உறுப்பினர்கள், பல் மருத்துவர்கள், சுகாதாரத் திணைக்கள உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
கிழக்கு மாகாண பல் மருத்துவ சங்கத்தின் வருடாந்த மாநாட்டினை தொடர்ந்து இடம்பெற்ற பற்சிகிச்சை மருத்துவ முகாமில் பாடசாலை மாணவர்கள், பொதுமக்கள் என பெருமலவிலானோர் கலந்து கொண்டு சிகிச்சை பெற்றனர். அதனைத் தொடர்ந்து வாய் சுகாதாரம் தொடர்பான விழிப்புணர்வுக் கருத்தரங்கொன்றும் இடம்பெற்றது.
ஒவ்வொரு வருடமும் மார்ச் 20 ஆம் திகதி உலக வாய் சுகாதார தினம் அனுஷ்டிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு அதற்கு முன்னுள்ள மாதத்தினையும் பின்னுள்ள மாதத்தினையும் தேசிய வாய் சுகாதார விழிப்புணர்வு மாதங்களாக பிரகடனப்படுத்தி பல்வேறு வேலை திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. குறித்த வேலைத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு இம்முறை கல்முனை பிராந்தியத்தில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
No comments