தரமற்ற தடுப்பூசி இறக்குமதி : சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் இன்றும் விசாரணைக்கு அழைப்பு !
தரமற்ற இம்யூனோகுளோபுலின் தடுப்பூசி குப்பிகளை நாட்டுக்கு இறக்குமதி செய்யப்பட்டதாக கூறப்படும் விடயம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் சமன் ரத்நாயக்க குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு இன்றும் அழைக்கப்பட்டுள்ளார்.
குறித்த விடயம் தொடர்பில் நேற்று குற்றப்புலனாய்வு திணைக்களம் அவரிடம் 9 மணித்தியாலங்களுக்கு மேல் வாக்குமூலங்களை பதிவுசெய்திருந்தது.
தரமற்ற இம்யூனோகுளோபுலின் தடுப்பூசி குப்பிகள் நாட்டுக்கு இறக்குமதி செய்யப்பட்டதாக கூறப்படும் விடயம் தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்காக முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு நேற்று அழைக்கப்பட்டிருந்த போதிலும், அவர் பிறிதொரு திகதியை கோரியிருந்தார்.
முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல வாக்குமூலம் வழங்குவதற்கு சமூகமளிக்காத விடயம் தொடர்பில் அவரது ஊடகப்பிரிவு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரின் விசாரணைகளுக்கு அமைச்சர் பூரண ஒத்துழைப்பை வழங்குவாரென அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த விடயத்தில் சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் ஜனக ஸ்ரீ சந்திரகுப்த உள்ளிட்ட 7 பேர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
No comments