பாராளுமன்ற செயலாளர் நாயகம் தென்கிழக்கு பல்கலைக்கு விஜயம்!!
பாறுக் ஷிஹான்
பாராளுமன்ற செயலாளர் நாயகம் தென்கிழக்கு பல்கலைக்கு விஜயம்
இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக, கலை கலாச்சார பீட அரசியல் விஞ்ஞான துறை இலங்கை ஜனநாயக சோசலிஷ குடியரசின் பாராளுமன்றத்துடன் இணைந்து, பல்கலைக்கழக உள்வாரி இளங்கலைப்பட்டதாரி மாணவர்களுக்கான "பாராளுமன்ற செயற்பாடுகளும் ஒழுங்கு முறைகளும்” பற்றிய குறுங்கால கற்கைநெறியில் கலந்துகொண்ட மாணவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கிவைக்கும் நிகழ்வு செவ்வாய்க்கிழமை (27) ஆம் திகதி கலை கலாச்சார பீட அரசியல்துறை தலைவர் கலாநிதி எம்.அப்துல் ஜப்பார் அவர்களது தலைமையில் தென்கிழக்கு பல்கலைக்கழக தொழில்நுட்பவியல் பீடத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
பாராளுமன்ற செயலாளர் நாயகம் உள்ளிட்ட அதிதிகள் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டனர்.
நிகழ்வில் வரவேற்புரையை கலாநிதி எம்.அப்துல் ஜப்பார் அவர்களும் நிகழ்வுபற்றிய அறிமுக உரையை பாராளுமன்ற தொடர்பாடல் பிரிவின் மக்கள் தொடர்பு அதிகாரி யாஸ்ரி முகம்மட் அவர்களும் ஆற்றினர்.
பாராளுமன்ற தொடர்பாடல் பிரிவுடன் இணைந்து இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி அனுஷா ரோஹனதீர அவர்கள் கலந்துகொண்டதுடன் கௌரவ அதிதிகளாக உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் அவர்களும் கலை கலாச்சார பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் எம்.எம். பாஸில் அவர்களும் கலந்து கொண்டு உரையாற்றினர்.
தென்கிழக்கு பல்கலைக்கழக கலை கலாச்சார பீட அரசியல்துறை தலைவர் கலாநிதி எம்.அப்துல் ஜப்பார் மற்றும் பாராளுமன்ற தொடர்பாடல் பிரிவின் மக்கள் தொடர்பு அதிகாரி யாஸ்ரி முகம்மட் ஆகியோரின் கூட்டு நெறிப்படுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வுகளுக்கு அனுசரணையை USAID மற்றும் தேசிய ஜனநாயக நிறுவனம் என்பன வழங்கியிருந்தது.
இங்கு பிரதம அதிதிக்கு பொன்னாடை போர்த்தப்பட்டு ஞாபக சின்னங்களும் வழங்கிவைக்கப்பட்டன.
அத்துடன் வளவாளர்களுக்கும் உபவேந்தர் உள்ளிட்ட அணியினர் ஞாபக சின்னங்களையும் சான்றிதழ்களையும் வழங்கிவைத்தனர்.
கற்கை நெறியை பூர்த்திசெய்த 246 மாணவர்கள் இன் நிகழ்வின்போது தாங்களுக்கான சான்றிதழ்களைப் பெற்றுக்கொண்ட அதேவேளை நிகழ்வுகளுக்கு ஒத்துழைத்த அனைத்துத் தரப்பினருக்கும் நன்றி தெரிவித்து விரிவுரையாளர் ரீ .எfப். சாஜிதா அவர்கள் உரையாற்றியது குறிப்பிடத்தக்கது.
நிகழ்வின்போது பொறியியல் பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் எம்.ஏ.எல். அப்துல் ஹலிம், சிரேஷ்ட பேராசிரியர் றமீஸ் அப்துல்லாஹ், பதில் பதிவாளர் எம்.ஐ. நௌபர், பேராசிரியர்கள், திணைக்களங்களின் தலைவர்கள், சிரேஷ்ட, கனிஷ்ட விரிவுரையாளர்கள், சிரேஷ்ட நிதியாளர், பல்கலைக்கழக வேலைப்பகுதியின் பொறியலாளர், கல்விசாரா உத்தியோகத்தர்கள் மற்றும் மாணவர்கள் என பலரும் பங்குகொண்டிருந்தனர்.
No comments