சாந்தனின் தாயாரை சந்திப்பதற்கு முயற்சிக்க வேண்டாம்! சகோதரரின் உருக்கமான வேண்டுகோள்!!!
என் தாயாரை பார்க்க நினைப்பவர்கள் இன்னும் இரண்டு நாட்களின் பின்னர் பார்க்க வருவது உசிதமாக இருக்கும், என்ற கோரிக்கையை, உயிரிழந்த சாந்தனின் சகோதரர் விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை வழக்கில் அண்மையில் விடுதலையாகி உடல்நலக் குறைவால் நேற்று (28) தமிழகத்தில் உயிரிழந்த சாந்தனின் சகோதரரே இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
இது தொடர்பில் அவர் முகநூலில் இட்டுள்ள பதிவில் தெரிவித்ததாவது,
நேரில் வர விரும்புபவர்கள்
“கடந்த இந்த ஒன்றரை வருட காலமாக போராடியும் அண்ணனை என்னால் மீட்க முடியவில்லை, இந்தச் செய்தியை அம்மாவிடம் சேர்ப்பதற்கு 2 நாட்களாவது எனக்குத் தேவைப்படுகின்றது.
அதுவரை அம்மாவைத் தனிமையில் வைத்திருக்கிறேன், அவர் யாரையும் சந்திக்கவில்லை யாருடனும் பேசவில்லை என யாரும் கோபிக்க வேண்டாம், நேரில் வர விரும்புபவர்களும் 2 நாட்களின் பின்னர் வர முடியுமா...” என்று அவர் தனது கோரிக்கையினை விடுத்துள்ளார்.
மேலும், என் தாயின் நிலை இனிமேலாவது எந்த தாய்க்கும் வராமலிருக்கட்டும் எனவும் சாந்தனின் சகோதரர் உருக்கமாக வேண்டிக்கொண்டுள்ளார்.
முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை வழக்கில் இருந்து கடந்த 2022ஆம் ஆண்டு விடுதலை செய்யப்பட்ட இலங்கையைச் சேர்ந்த சாந்தன் உள்ளிட்டவர்கள் திருச்சியிலுள்ள சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.
தீவிர சிகிச்சை
இந்நிலையில், சாந்தனின் உடல் நிலை சீரில்லாமல்போன நிலையில் அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இருந்தபோதிலும், அவரது உடல் நிலை தொடர்ந்தும் சீரற்ற நிலையில் இருந்ததால் அவரை இலங்கைக்கு அனுப்பி வைக்குமாறு சாந்தனின் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதனை ஏற்று சாந்தனை இலங்கைக்கு அனுப்பி வைக்க தீர்மானிக்கப்பட்டிருந்த நிலையில், துரதிஷ்டவசமாக நேற்றையதினம் (28) அதிகாலை அவர் தமிழகத்தில் வைத்து உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments