Vettri

Breaking News

அம்பாறை புத்தங்கல வீதியிலுள்ள கழிவு மீள்சுழற்சி நிலைய பகுதியில் யானைகள் நடமாட்டம்!!
















பாறுக் ஷிஹான்

அம்பாறை புத்தங்கல வீதியிலுள்ள கழிவு மீள்சுழற்சி நிலைய பகுதியில்  மலைபோல் குவிந்துள்ள குப்பைகளை   உண்ண யானைகள் தினமும் வருகை தருகின்றன.

 இவ்வாறு வரும் யானைகள் சில அருகில் உள்ள பொதுமக்களின் சொத்துக்களுக்கும் சேதங்களை விளைவிப்பதனால் மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.

இக்காட்டு யானைகளை  கட்டுப்படுத்த யானை வேலிகள் அமைப்பதற்கான  நடவடிக்கை  ஆரம்பிக்கப்பட்ட போதிலும் யானைகள் அத்துமீறி வீதிகள் பயிர் நிலங்களை நோக்கி வருகை தருகின்றன.அம்பாறை நகரில் இருந்து   குப்பைகள் வாகனங்கள் மூலம் தினமும்  கொண்டுவரப்பட்டு   கொட்டப்படுகின்றதுடன் மலைபோல் குவிந்துள்ள குறித்த குப்பைகளை யானைகள் தினமும் உண்ண வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 இலங்கையின்   பெருமளவான காட்டு யானைகள் குப்பை மேடுகளை தேடி உணவுக்காக வருகின்றன. தாவர உண்ணியான காட்டு யானைகள், குப்பைகள் ,பொலீத்தீன்கள், பிளாஸ்ரிக் பொருட்கள் உள்ளிட்ட கழிவு பொருட்களை உட்கொள்வதனால் யானைகளின் இறப்பு வீதம் அதிகரித்து வருகின்றது. யானை நாளொன்றுக்கு சுமார் 150 கிலோ உணவை உட்கொள்வதாகவும்   160 லீட்டர் தண்ணீரையும் குடிப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

அண்மைக்காலங்களில்  யானை – மனித மோதலால்   யானைகளும் மனித உயிர்களும் இழக்கின்ற சந்தர்ப்பங்கள் சடுதியாக அதிகரித்துள்ளன.  அத்துடன்  யானை – மனித மோதலால் அதிகளவான மனித உயிரிழப்புக்கள் இடம்பெறும் நாடுகளில்  இரண்டாவதாக இலங்கை காணப்படுகிறது.

யானை – மனித மோதலை குறைப்பதற்கு பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்ட போதும் அவற்றை  முறையாக அமுல்படுத்தப்படாமை மற்றும் மேற்பார்வை செய்யப்படாமை காரணமாக   யானை – மனித மோதலின் இழப்புக்களை குறைப்பது இன்று வரையும் முடியால் உள்ளமை வெளிப்படையாகும்.

இதனால் குறித்த மோதலினால்  யானைகளும் மனிதர்களும் தொடர்ச்சியாக மரணித்து வருகின்றனர். எனவே மனிதன் மற்றும் யானைகளை காப்பாற்றவும் சொத்துக்களை பாதுகாக்கவும் உடனடியாக தேசிய வேலைத்திட்டத்தை முன்னெடுக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமையாகும்

இவ்வாறு தொடர்ச்சியாக யானை மற்றும் மனித மரணங்கள் நிகழ்ந்து வந்தாலும் அவற்றினை நிவர்த்திப்பதற்கு அல்லது குறைப்பதற்கு பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றமையும் சுட்டிக்காட்டத்தக்கது.
 

No comments