மகனைக் கொன்று பயணப் பையில் கொண்டு சென்ற பெண் கைது - இந்தியாவில் சம்பவம்
இந்தியாவின் கோவா மாநிலத்தில் வாடகை வீட்டில் தனது நான்கு வயது மகனைக் கொன்றதாக தனியார் நிறுவனம் ஒன்றின் தலைமை நிறைவேற்றுஅதிகாரியான பெண் நேற்று செவ்வாய்க்கிழமை (09) கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பெண் தனது மகனை கொலை செய்து உடலை பயணப் பைக்குள் திணித்து, அந்த வாடகை வீட்டின் உரிமையாளர்கள் ஏற்பாடு செய்து கொடுத்த வாகனத்தில் குறித்த பெண் கர்நாடகாவுக்குச் சென்றதாகத் தெரியவந்துள்ளது.
குறித்த பெண் தங்கியிருந்த வாடகை வீட்டைச் சுத்தம் செய்த ஊழியர், இரத்தக் கறையைப் பார்த்ததை அடுத்து இக்குற்றச் செயல் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
தகவல் அறிந்து வாடகை வீட்டுக்கு விரைந்த கோவா பொலிஸார், வீட்டைச் சோதனை செய்தனர். பிறகு கண்காணிப்பு கமராவில் பதிவான காட்சிகளை ஆராய்ந்த பிறகு மகன் இல்லாமல் பெண் தனியாக அங்கிருந்து சென்றது தெரியவந்துள்ளது.
வாடகை வீட்டின் உரிமையாளர்கள் வாகன சாரதியின் தொலைபேசி இலக்கத்தை பொலிஸ் அதிகாரிகளிடம் கொடுத்துள்ளனர்.
வாகன சாரதியை தொடர்புகொண்டு தொலைபேசியை பெண்ணிடம் கொடுக்கும்படி பொலிஸ் அதிகாரி தெரிவித்துள்ளார். மகனைப் பற்றி பெண்ணிடம் கேள்வி எழுப்பியபோது மகனைத் தமது தோழியின் வீட்டில் விட்டுச் சென்றதாக கூறியுள்ளார்.
தோழியின் முகவரியை அவரிடம் கேட்டபோது போலி முகவரியை பெண் கொடுத்துள்ளார்.
இந்நிலையில், வாகன சாரதிக்கு மீண்டும் தொடர்பு கொண்டு பொலிஸ் அதிகாரி பெண்ணுக்கு தெரியாத கொங்கனி மொழியில் பேசி, பெண்ணுக்குச் சந்தேகம் ஏற்படாத வகையில் அருகில் உள்ள பொலிஸ் நிலையத்துக்குச் செல்லும்படி தெரிவித்துள்ளனர்.
அப்போது வாகனம் கர்நாடகா மாநிலத்தின் சித்ரதுர்கா மாவட்டத்தில் இருந்தது. அருகில் இருந்த பொலிஸ் நிலையத்துக்குச் அந்த சாரதி ஓட்டிச் சென்றார்.
அங்குள்ள பொலிஸ் அதிகாரி பெண் வைத்திருந்த பையைச் சோதனையிட்டார். அதில் அந்த சிறுவனின் உடல் இருந்தது உறுதி செய்யப்பட்டது. அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தக் கொலை தொடர்பான விசாரணை இடம்பெற்றுவருகிறது.
No comments