Vettri

Breaking News

நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்கு அனைத்துப் பிரஜைகளினதும் பங்களிப்பு அவசியம்- ஜனாதிபதியின் தொழிற்சங்கப் பணிப்பாளர்




 நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்கு அனைத்துப் பிரஜைகளினதும் பங்களிப்பு அவசியமாகும் என்று


ஜனாதிபதியின் தொழிற்சங்கப் பணிப்பாளர் சமன் ரத்னப்பிரிய தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வடக்கு, விஜயத்துக்கு சமாந்தரமாக 12 மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை கால்கள் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த முப்பது வருடங்களாக நீடித்த போர் காரணமாக, வடக்கில் உள்ள பலர் தமது சொத்துக்களை இழந்தனர், காணிகளை இழந்தனர், அவயவங்களை இழந்தனர். வருமானமீட்டும் வழிகளை இழந்தனர். இதனால் தொடர்ச்சியாக அவர்கள் நெருக்கடிகளுக்கு முகங்கொடுக்கும் நிலைமையொன்று ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், அவர்களை தேசிய வேலைத்திட்டத்தில் பங்களிப்புச் செய்வதனை நோக்காக் கொண்டு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பல நடவடிக்கைளை முன்னெடுத்துள்ளார். குறிப்பாக, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாடு வங்குரோத்து அடைந்துவிட்டதாக அறிவிக்கப்பட்ட தருணத்தில் அரசியல், சட்டம் ஒழுங்கு உள்ளிட்ட ஸ்திரமற்ற நிலைமைகள் காணப்பட்ட தருணத்தில் தான் தலைமையை ஏற்றுக்கொண்டார். 

பலத்த சவால்களுக்கு மத்தியில் அந்த நிலைமைகளை நாடு கடப்பதற்கு நடவடிக்கைகளை எடுத்ததோடு, வரிசை யுகத்தினையும் முடிவுக்கு கொண்டுவந்தார். தற்போது பொருளாதாரத்தினை மீட்டெடுக்கும் போராட்டத்தினை ஆரம்பித்துள்ளார். இந்தப் பயணத்தில் அரசியல், பேதங்கள், இன,மத,மொழி போதங்கள் என்று அனைத்தையும் கடந்து அனைத்து தரப்பினரும் பங்களிப்பினைச் செய்ய வேண்டும் என்று கருதுகின்றார். மாற்றுத்திறனாளிகளாக இருப்பவர்கள் கடந்த காலத்தில் பெரும் உழைப்பாளிகளாக இருந்தனர். அவர்களின் பங்களிப்பு கணிசமாக இருந்தது.  தற்போது அவர்களின் வருமானத்தினைப் பெருக்குவதற்கும், தமது பணிகளை ஆற்றுவதற்கும் ஏதுவான உதவிகளை அளிப்பதற்கு பல நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. குறிப்பாக, சுயதொழில் செயற்பாடுகளை மேம்படுத்துவதில் அரசாங்கம் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது என்றார்.

No comments