உணவகங்களில் சுகாதார சீர்கேடு-பொதுமக்கள் விசனம்!!!
பாறுக் ஷிஹான்
கல்முனை மாநகர சபைக்குட்பட்ட பிரதேசங்களில் உள்ள உணவகங்களில் அண்மைக்காலமாக சுகாதார சீர்கேடுகள் இடம்பெற்று வருவதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
உணவு சீர்கேடுகள் மற்றும் உணவகங்களில் பாராதூரமான குறைபாடுகள் காரணமாக அரச தனியார் அலுவலகர்கள் உட்பட பாடசாலை மாணவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றார்கள் என ஒரு குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு வருகின்றன.
குறிப்பாக மாநகர சபை அண்டிய புறநகர் பகுதிகளிலும் இவ்வாறான சம்பவங்கள் உணவங்களில் தொடர்ந்து இடம்பெறுவதாக சுட்டிக்காட்டுகின்றனர்.இது தவிர உணவுக்கழிவுகள் கூட உடனடியாக அகற்றப்படாமல் உணவகங்களில் தேங்கிக் காணப்படுகின்றன.
கல்முனை நகரப்பகுதி பெரிய நீலாவணை மருதமுனை நற்பிட்டிமுனை பாண்டிருப்பு கல்முனை சாய்ந்தமருது உள்ளிட்ட பகுதிகளில் வீதியோரங்களில் உள்ள உணவகங்களில் இவ்வாறான நிலை உள்ளமை குறிப்பிடத்தக்கது.
அம்பாறை மாவட்டம் கல்முனை பிராந்தியத்தில் உணவகங்களின் எண்ணிக்கை மிக அதிகமாக காணப்படுகின்றதுடன் அதிகளவான பொதுமக்கள் உணவுத்தேவைகளை இவ்வுணவகங்களில் பூர்த்தி செய்வதை அவதானிக்க முடிகின்றது. ஒவ்வொரு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளிலும் திடீர் கண்காணிப்பு நடவடிக்கைகளுக்காக உணவு பாதுகாப்பு கண்காணிப்பாளர்கள் பொதுச்சுகாதார பரிசோதகர்கள் கடமையாற்றுகின்ற போதிலும் இவ்வாறான சுகாதார சீர்கேடுகள் தொடர்கதையாகவே உள்ளதாக பாதிக்கப்பட்டோர் குறிப்பிடுகின்றனர்.இவ்வாறான சீர்கேடான குறைகளை சுட்டிக்காட்டும் போது உணவக உரிமையாளர்கள் அராஜகத்தில் ஈடுபடுவதாகவும் நுகர்வோர் தெரிவிக்கின்றனர்.
மேற்படி பிரதேசங்களில் உள்ள உணவகங்களில் உணவு பரிமாறும் பணியாளர்களின் உடைகள் அசுத்தமாக உள்ளமை உணவகங்களில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகள் முறையாக அகற்றப்படாமை ,உணவு பரிமாறும் பாத்திரங்கள் மீள சுத்தப்படுத்தப்படாமை, உணவுப் பண்டங்கள் காட்சிப்படுத்தப்படும் கண்ணாடிப்பெட்டிகள் சுத்தமின்மை, சீராக மூடப்படாமை ,உணவக சமையல் பகுதி அசுத்தமாக உள்ளமை பழைய உணவுகளை சூடு காட்டி உண்ணக்கொடுத்தல் ,போன்ற செயற்பாடுகளால் சுகாதார சீர்கேடுகள் இடம்பெறுகின்றன என்பதை மக்களின் கருத்துக்களில் இருந்து அறிய முடிகிறது.
இவ்வாறான செயற்பாடுகளால் வெளிமாவட்டத்தில் இருந்து கல்வி,வேலை நிமிர்த்தம் வந்தவர்களும், உள்ளுர் மக்களும் வெகுவாக பாதிக்கப்படுகின்றனர்.மேலும் இச்சீர்கேடுகளினாலும் உரிய பராமரிப்பின்மையினாலும் மேற்படி பிரதேசங்களில் இலையான்களின் பெருக்கம் அதிகரித்து காணப்படுவதுடன் அதிக தொற்று நோய்களும் ஏற்படுவதற்கான சூழலும் ஏற்பட்டுள்ளன.
இது தவிர பெரும்பாலான உணவங்களின் கழிவு நீர் வெளியேற்றும் பகுதி பிரதான வீதியால் வெளியேற்றப்படுவதனால் பாதசாரிகள் விபத்துக்களுக்கு உள்ளாவதுடன் சுகாதார ரீதியாக பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொள்கின்றனர்.
இத்தகைய சீர்கேடு தொடர்பாக உரிய சுகாதார அதிகாரிகளிடம் சுட்டிக்காட்டுகின்ற போதிலும் அந்த உணவகங்களில் தேநீர் அருந்திச்செல்கின்கின்றார்களே தவிர தகுந்த நடவடிக்கை எதனையும் இதுவரை மேற்கொள்ளவில்லை என பொதுமக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
No comments