வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு நஷ்டஈட்டை பெற்றுக்கொடுக்க ஹரீஸ் எம்.பி நடவடிக்கை!!
நூருல் ஹுதா உமர்
அண்மையில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்ட வெள்ளம் மற்றும் வெள்ளநீரை கட்டுப்படுத்த அணைக்கட்டுக்களை திறந்தமையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் கிழக்குமாகாண அதிலும் குறிப்பாக அம்பாறை மாவட்ட பல ஆயிரக்கணக்கான விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டு விவசாயிகள் செய்வதறியாது திணறி வருகிறார்கள். இவர்களுக்கு உரிய நிவாரணத்தை பெற்றுக்கொடுக்கும் நோக்கில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித்தலைவரும், முன்னாள் இராஜாங்க அமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் இன்று (18) கமத்தொழில் , வனசீவராசிகள் மற்றும் வளங்கள் வனப்பாதுகாப்பு அமைச்சர் மஹிந்த அமரவீரவிடம் கலந்துரையாடினார்.
அமைச்சின் செயலாளர், அதிகாரிகள் கலந்து கொண்ட இந்த கூட்டத்தில் அம்பாறை மாவட்ட விவசாயிகள் வெள்ளத்தினால் அடைந்துள்ள நஷ்டங்கள் தொடர்பில் எடுத்துக்கூறிய பாராளுமன்ற உறுப்பினர் ஹரிஸ் விவசாய நிலங்கள் வெள்ளத்தில் சிக்குண்டு வேளாண்மை மற்றும் மரக்கறி செய்கைகள் பாதிக்கப்பட்டுள்ள விடயங்களையும் விளக்கியதுடன் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு முழுமையான நஷ்டஈட்டை வழங்க நடவடிக்கை எடுக்குமாறும், நீர்ப்பாசன திணைக்கள கட்டுக்கள், அணைகள், கால்வாய்கள் வெள்ளத்தில் சேதமாகியுள்ளத்தால் அவற்றை புனரமைக்க நடவடிக்கை எடுக்குமாறும் அமைச்சரை கேட்டுக்கொண்டார்.
அம்பாறை மாவட்ட விவசாயிகளின் பிரச்சினைகளை கேட்டறிந்த அமைச்சர் மஹிந்த அமரவீர, மிகத்துரித கெதியில் விவசாயிகளுக்கு நஷ்டஈட்டை பெற்றுக்கொடுக்க தான் நடவடிக்கை எடுப்பதாகவும் அனைக்கட்டுக்களை புனரமைப்பது தொடர்பில் நீர்ப்பாசன அமைச்சரிடம் கலந்துரையாடி உடனடி தீர்வை வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் ஹரிஸ் அவர்களுக்கு உறுதியளித்தார்.
No comments