மாணவர்களுக்கு மதிய உணவைக் கொடுக்க முடியாத இந்த அரசாங்கம் ஹூதி கிளர்ச்சியாளர்களை அடக்க 250 மில்லியன் செலவிடுகிறது - சஜித் விசனம்
பெறுமதி சேர் வரி ஊழல்வாதிகளைப்பாதுகாக்கும் வரியாகும். கொள்ளையடித்தவர்களிடமிருந்து பணத்தை மீட்பதற்கு பதிலாக, அவர்கள் அரசாங்கத்தால் பாதுகாக்கப்படுகின்றனர் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச விசனம் வெளியிட்டார்.
மினுவாங்கொட நெதகமுவ கனிஷ்ட வித்தியாலயத்தில் நேற்று (06) இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்
“தற்போது அதிகரிக்கப்பட்டுள்ள பெறுமதி சேர் வரி ஊழல்வாதிகளைப் பாதுகாக்கும் வரியாகும். ஊழல் மிக்க ஆட்சியாளர்கள் ஒவ்வொரு துறையிலும் கொள்ளையடித்ததன் காரணமாகவே நாடு வங்குரோத்தடைந்தது.
இவ்வாறு கொள்ளையடித்தவர்களிடமிருந்து பணத்தை மீட்பதற்கு பதிலாக, அவர்கள் அரசாங்கத்தால் பாதுகாக்கப்படுகின்றனர். எனவே இந்த வற் வரியை ஊழல் நிறைந்த வரி என்று அழைக்கலாம்.
தற்போதைய அதிபர் ஊழல்வாதிகளின் வாக்குகளால் தேர்ந்தெடுக்கப்பட்டதால் ஊழல்வாதிகளை பாதுகாத்து வருகிறார். இதன் காரணமாக பொதுஜன பெரமுனவின் 134 பேரும் கூறுவதற்கு ஏற்ப கைப்பாவை போன்று அவர் செயற்படுகின்றார்.
செங்கடலில் ஹூதி கிளர்ச்சியாளர்களின் நடவடிக்கைகளால் நமது நாட்டில் பொருட்களின் விலை அதிகரிப்பதால், 250 மில்லியன் ரூபா செலவிட்டு இலங்கை கடற்படைக் கப்பலை ஈடுபடுத்தி, இந்த ஹூதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக போராட தீர்மானித்துள்ளதாக அதிபர் அண்மையில் தெரிவித்தார்.
உலகில் அபிவிருத்தியடைந்த நாடுகள் இருக்கும் போது இந்த வங்குரோத்து நாடு ஏன் இவ்வாறான செயலைச் செய்ய முன்வருகிறது என்பது ஆச்சரியமளிக்கிறது.
மாணவர்களுக்கு மதிய உணவைக் கொடுக்க முடியாத, பொருட்களின் விலையை குறைக்க முடியாத இந்த அரசாங்கம் ஹூதி கிளர்ச்சியாளர்களை அடக்க 250 மில்லியன் செலவிட்டுள்ளது.
நாடு வங்குரோத்து நிலையில் இருக்கும் வேளையில் முன்னுரிமையளிக்க வேண்டிய பல விடயங்கள் இருந்த போதிலும் அதிபர் வேறு விடயத்தில் கவனம் செலுத்தியுள்ளார்.
எந்தவித சிறப்புரிமைகளும் சலுகைகளும் வழங்காமலே ஐக்கிய மக்கள் கூட்டணிக்கு பல்வேறு தரப்புகளை ஒன்றிணைத்துக் கொள்கின்றது.
ஐக்கிய மக்கள் சக்தி பணத்தையோ அல்லது சலுகையோ வழங்காது. ஏனைய தலைவர்களைப் போன்று மக்களுக்கு சேவையாற்ற நான் அதிகாரத்தை கேட்கவில்லை” என தெரிவித்தார்.
No comments