'யுக்திய' நடவடிக்கை ; மேலும் 1,182 பேர் கைது!!
போதைப்பொருள் வர்த்தகம் மற்றும் பாதாளாக்குழுக்களை ஒடுக்கும் யுக்திய விசேட பொலிஸ் சுற்றிவளைப்புகளில் மேலும், 1,182 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்ட 44 பேர் தடுப்புக் காவல் உத்தரவின் கீழ் மேலதிக விசாரணைகளுக்காக தடுத்துவைக்கப்பட்டுள்ளதாகவும் போதைப்பொருளுக்கு அடிமையான 47 சந்தேகநபர்கள் புனர்வாழ்வு மத்திய நிலையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளது. பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு ஏற்கனவே சந்தேக நபர்களாக பட்டியலிடப்பட்டு தேடப்பட்டு வந்த 138 பேரும் இதன்போது கைது செய்யப்பட்டுள்ளனர். இதனிடையே 287 கிராம் ஹெரோயின், 246 கிராம் ஐஸ் போதைப்பொருள், 5.4 கிலோ கிராம் கஞ்சா, 119 போதைப்பொருள் மாத்திரைகள் மற்றும் 19,052 கஞ்சா செடிககளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
இதேவேளை, இலங்கை பொலிஸார் நேற்று செவ்வாய்க்கிழமை (02) இடம்பெற்று வரும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கை தொடர்பில் பொதுமக்களுக்கு தகவல் வழங்குவதற்காக அவசர தொலைபேசி இலக்கமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளனர். பதில் பொலிஸ் மா அதிபர் (IGP) தேசபந்து தென்னகோனின் பணிப்புரையின் கீழ் இந்த அவசர தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி, போதைப்பொருள் பாவனையாளர்கள் அல்லது பாதாள குழுவின் செயற்பாடுகள் தொடர்பில் தகவல் தெரிந்தால் 071 859 8800 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாக பொலிஸ் தலைமையகத்தை தொடர்பு கொள்ளுமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
நாட்டில் போதைப்பொருள் கடத்தல், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் மற்றும் பிற தொடர்புடைய குற்றங்களை இல்லாதொழிக்கும் முயற்சியில், பொது பாதுகாப்பு அமைச்சர் டிரன் அலஸ் மற்றும் பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் ஆகியோரின் அறிவுறுத்தலின் பேரில், நாடளாவிய ரீதியில் 2023 டிசம்பரின் இறுதியில் ஆரம்பிக்கப்பட்டது.
No comments