Vettri

Breaking News

கந்தளாய் குளத்தின் 10 வான்கதவுகள் திறப்பு - விவசாய நிலங்கள் பாதிப்பு





திருகோணாமலை மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் அடைமழை காரணமாக கந்தளாய் குளத்தின் 10 வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதன் காரணமாகவும் பல்லாயிரக்கணக்கான விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

கிண்ணியா பிரதேச செயலாளார் பிரிவுக்குட்பட்ட, வன்னியனார்மடு, புளியடிக்குடா முதலான பிரதேசங்களில் செய்கை பண்ணப்பட்ட வயல் நிலங்களே இவ்வாறு நீரில் மூழ்கிக் காணப்படுவதாக விவசாயிகள் தெரிவித்தனர் . 

இது குறித்து விவசாயிகள்  மேலும் தெரிவிக்கையில், 

இப்பகுதியில் சுமார் 2000 க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலப்பரப்பில் பெரும்போக வேளாண்மை செய்கை பண்ணப்பட்டுள்ளன.

இவ்வாறு செய்கை பண்ணப்பட்ட வயல் நிலங்களே கந்தளாய் குளத்தின் வான் கதவு திறக்கப்பட்டுள்ளதனால் நீரில் மூழ்கி காணப்படுகின்றன.

பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் செய்கை பண்ணப்பட்ட வயல்  இம்முறையும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளன. 

கந்தளாய் குளத்தின் 10 வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதால்  வேளாண்மை பாதிக்கப்பட்டுள்ளது. கதிர் புடலை நெல் வருகின்ற காலப்பகுதியில் நீர் அதனுள் புகுந்தால் எவ்வித பயனும் இல்லை.

கடன் வேண்டித்தான் வேளாண்மை செய்தோம். எங்களுக்கு இதற்குரிய நஷ்ட ஈடு வழங்கப்பட வேண்டும். வடிச்சல் வாய்க்கால் இல்லாததனால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது . 

வெள்ள நீரினால் பல்லாயிரக்கணக்கான வயல் நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளதால்  விவசாயிகள் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளார்கள். பசளை வாங்குவதற்கான பணம் இதுவரை தரவில்லை எனவும் விவசாயிகள் மேலும்  தெரிவிக்கின்றனர்.  


No comments