Vettri

Breaking News

தலைமன்னாருக்கும் தனுஷ்கோடிக்கும் தரை வழிப்பாதையமைக்க முயற்சி !!





 தலைமன்னாருக்கும், தனுஷ்கோடிக்கும் இடையில் தரைவழிப் பாதையை அமைப்பது தொடர்பிலான முயற்சிகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், அதற்கான சத்தியக்கூற்றாய்வுச் செயற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே யாழ்ப்பாணத்தில் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே இம்மாதத்துடன் இலங்கையில் தனது சேவைக்காலத்தினை நிறைவு செய்யவுள்ள நிலையில் வடக்கிற்கான மூன்று நாள் விஜயத்தினை மேற்கொண்டுள்ளார்.      இதன்போது, நேற்று முன்தினம் மன்னார் மாவட்டத்துக்கு விஜயத்தைச் செய்திருந்த அவர் பின்னர் யாழ்ப்பாணத்தில் உள்ள நட்சத்திர தனியார் விடுதியில் அரசியல் மற்றும் அரச அதிகாரிகளுடன் இரவு நேர விருந்துபசாரத்துடன் சந்திப்பொன்றை நடத்தியிருந்தார்.

குறித்த சந்திப்பில், அரசியல் பிரதிநிதிகளாக, மாவை.சோ.சேனாதிராஜா, சி.வி.கே.சிவஞானம், சுமந்திரன், சுரேஷ் பிரேமச்சந்திரன், என்.சிறீகாந்தா, கலாநிதி.சர்வேஸ்வரன், பொ.ஐங்கரநேசன், வைத்தியர் சத்தியலிங்கம், உமாசந்திரா பிரகாஷ் ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.  அதேபோன்று, யாழ்.பல்கலையின் துணைவேந்தர் பேராசிரியர் சி.சற்குணராஜா, யாழ்.மாவட்டச் செயலாளர் அ.சிவபாலசுந்தரன், யாழ்.மாநகரசபையின் ஆணையாளர் ஜெயசீலன் ஆகியோரும் பங்கேற்றிருந்தனர்.

இதன்போது கருத்து வெளியிடுகையிலேயே இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அத்துடன், இந்தியா, இலங்கைக்கு இடையிலான எரிபொருள் குழாய் செயற்றிட்டம் விரைவில் ஆரம்பமாகவுள்ளது. இந்த செயற்றிடமானது வடக்கு மாகாணத்தின் பகுதியையும் அடியொற்றியே முன்னெடுக்கப்பட்டு திருகோணமலையை சென்றடையவுள்ளது.  இந்த குழாய் திட்ட முன்னெடுப்பின்போது, இந்தியா இலங்கையின் எரிபொருள் தேவையை நிறைவேற்றும் விடயத்திலுத் கரிசனைகளை வெளிப்படுத்தியுள்ளது. ஆகவே அதற்கான கோரிக்கை இலங்கையிடமிருந்து வருகின்றபோது அதுதொடர்பான நடவடிக்கைகள் அடுத்தகட்டமாக முன்னெடுக்கப்படவுள்ளன. 

அதேநேரம் எனது வடக்கிற்கான விஜயத்தின்போது, மன்னார் மாவட்டத்திற்குச் சென்றிருந்தேன். இதன்போது தலைமன்னாரில் உள்ள இறங்குதுறை உள்ளிட்ட பகுதிகளையும் பார்வையிட்டேன். தலைமன்னாருக்கும், இராமேஸ்வரத்துக்கும் இடையிலான கப்பல் சேவையை ஆரம்பிப்பது தொடர்பில் கோரிக்கைகள் விடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் அதுதொடர்பிலான நடவடிக்கைகள் அடுத்த கட்டமாக முன்னெடுக்கப்படவுள்ளன.  இதேநேரம், தலைமன்னாருக்கும், தனுஷ்கோடிக்கும் இடையில் தரைவழிப்பாதை அமைப்பது தொடர்பான விடயத்தினை இந்தியா கைவிடவில்லை. அதற்கான பேச்சுவார்த்தைகள் ஏற்கனவே நடைபெற்றுள்ள நிலையில் தற்போதும் அந்த விடயம் உயிர்ப்புடன் உள்ளது. 

குறித்த திட்டத்தினை முன்னெடுப்பதற்கான சத்தியக்கூறு ஆய்வறிக்கை உள்ளிட்ட விடயங்கள் தற்போது ஆராயப்பட்டு வருகின்றன. இவ்வாறான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றபோது இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்ப தொடர்புகள் மேலும் அதிகரிக்கும். அது இருதரப்பினருக்கும் குறிப்பாக தமிழர்களுக்கு நன்மைகளை வழங்கும். அதேவேளை, அரசியல் தீர்வு விடயத்தில் இந்தியா தொடர்ச்சியான கரிசனைகளைக் கொண்டுள்ள அதேநேரம், மாகாண சபைகளுக்கான தேர்தல் மற்றும் 13ஆவது திருத்தச்சட்டத்தினை முழுமையாக நடைமுறைப்படுத்தல் உள்ளிட்ட விடயங்களை அரசாங்கத்திற்கு தொடர்ச்சியாக கூறி வருகின்றோம் என்று மேலும் தெரிவித்தார்.

இதேநேரம், குறித்த சந்திப்பில் கலந்துகொண்ட அரசியல் பிரதிநிதிகள், இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு இந்தியா காத்திரமான பணியைச்n செய்துள்ள நிலையில், இந்தியாவால் அழுத்தம் திருத்தமாக ஏன் இந்திய இலங்கை ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துமாறோ அல்லது மாகாண சபைகளுக்கான தேர்தலை காலந்தாழ்த்தாது நடத்துமாறோ அழுத்தமளிக்க முடியாதுள்ளது. இலங்கை அரசாங்கம் தொடர்ச்சியாக கலங்கடத்தும் செயற்பாடுகளை மேற்கொள்கின்றது என்பது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதேநேரம், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, தற்போது வரையில் ராஜபக்ஷக்களால் நியமிக்கப்பட்ட பாதுகாப்புச் செயலாளரையே மாற்ற முடியாதுள்ள நிலையில் அவரால் 13ஆவது திருத்தச்சட்டம் உள்ளிட்ட எந்த விடயங்களை அர்ப்பணிப்புடன் முன்னெடுப்பார் என்று எதிர்பார்க்க முடியாது என்ற விடயமும் எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

மேலும், பொருளாதார ரீதியான விடயங்கள் இருதரப்பு நடைமுறைகள் முன்னெடுக்கப்பட்டாலும், தமிழ் மக்களின் விடயங்கள் முன்னேற்றகரமாக அமைவதற்கு நிரந்தரமான அரசியல் தீர்வு அவசியம் என்பதும் அதில் இந்தியாவின் வகிபாகம் அதிகமாகவுள்ளது என்பதும் அரசியல் பிரதிநிதிகளால் உயர்ஸ்தானிகருக்கு எடுத்துரைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments