Vettri

Breaking News

எதிர்கால சந்ததியை பழுதாக்கும் மதுபானசாலையை அனுமதிக்க முடியாது : பொத்துவில் மதுபானசாலைக்கு எதிராக இன்று சாட்சிமளிப்பில் ஹரீஸ் எம்.பி தெரிவிப்பு !





 


நூருல் ஹுதா உமர் 


பொத்துவில் நகரில் மதுபான விற்பனை நிலையம் திறக்கப்படுவதை தான் வன்மையாக எதிர்ப்பதாகவும், குறித்த மதுபானசாலை அமையவுள்ள இடத்திலிந்து 200 மீட்டருக்குட்பட்ட பிரதேசத்தில் பொத்துவில் தமிழ் மகா வித்தியாலயம் அமைந்துள்ளதாகவும் அதேபோன்று 200  மீட்டருக்குட்பட்ட இடைவெளியில் பௌத்த விகாரை, கோயில், தேவாலயம், பொத்துவில் ஜும்மா பள்ளிவாசல், வைத்தியசாலை, நீதிமன்றம், பொலிஸ் நிலையம், பாலர் பாடசாலை என்பன அமைந்துள்ளதாகவும்  சுட்டிக்காட்டிய திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் இராஜாங்க அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் எதிர்கால சந்ததியை பழுதாக்கும் இந்த மதுபானசாலையை அனுமதிக்க முடியாது என்று தனது பக்க விளக்கமளிப்பில் சுட்டிக்காட்டியிருந்தார். 


பொத்துவில் நகரில் மதுபானசாலை அமைப்பது சம்பந்தமாக கோரப்பட்ட அனுமதியை ரத்து செய்யுமாறு கோரி திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் முறைப்பாடு செய்திருந்தார். இது தொடர்பிலான விசாரணை இன்று (05) பொத்துவில் பிரதேச செயலகத்தில் ஹலால், மதுவரித்திணைக்கள உதவி ஆணையாளர், திணைக்கள அதிகாரிகள், பிரதேச செயலாளர், பிரதேச செயலக அதிகாரிகள் முன்னிலையில் இடம்பெற்றது.  


இந்த சாட்சியமளிக்கும் நிகழ்வில் மேலும் கருத்து வெளியிட்ட அவர், பொத்துவில் பிரதேசம் சுற்றுலாத் துறைக்கு பேர் போன இடமென்பதால் அருகம்பே பிரதேசத்தில் ஐந்துக்கு மேற்பட்ட மதுபானசாலைகள் இயங்கிக்கொண்டிருப்பதனால் இந்த மதுபான சாலைக்கு உரிமம் வழங்குவது அவசியமற்றது என்பதனால் பொத்துவில் பிரதேச சிவில் அமைப்புக்களும், பொதுமக்களும் என்னிடம் இந்த அனுமதி வழங்களை ரத்து செய்து தருமாறு கேட்டுக்கொண்டிருப்பதனால் அவர்களின் பிரதிநியாக இருக்கும் நான் இந்த அனுமதியை எக்காரணம் கொண்டும் வழங்க கூடாது என்பதிலும், உரிமம் வழங்குவதனூடாக எதிர்காலத்தில் வரவிருக்கும் சமூக சீர்கேட்டை எக்காரணம் கொண்டும் அனுமதிக்க முடியாதென்பதிலும் உறுதியாக இருப்பதாக தனது சாட்சியத்தில் விளக்கியிருந்தார். 


சுகயீனம் காரணமாக நேரடியாக சமூகமளிக்க முடியாத சூழ்நிலையில் இருந்த பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் நிகழ்நிலை ஸூம் தொழிநுட்பத்தினூடாக தோன்றி இங்கு விளக்கமளித்தார். இந்த சாட்சியமளிக்கும் நிகழ்வில் மதகுருமார்கள், சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டிருந்தனர். இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதி, நிதி இராஜாங்க அமைச்சர் மற்றும் அரச உயர்மட்டங்களின் கவனத்திற்கும் பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் கொண்டு செல்லவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments