Vettri

Breaking News

நான் உயிருடன் இருக்கும் வரை தனி ஈழ இராச்சியத்துக்கு இடமளிக்கமாட்டேன்: இனவாதத்தை கக்கிய சரத் வீரசேகர!




 நாங்கள் உயிருடன் இருக்கும் வரை தனி ஈழ இராச்சியத்துக்கு இடமளிக்கபோவதில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று (6.12.2023) இடம்பெற்ற அமர்விலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது, நாட்டில் மீண்டும் யுத்தம் ஒன்று தோற்றம் பெற்றால் தமிழ் அரசியல்வாதிகளும், அவர்களின் குடும்பத்தினரும் வெளிநாடுகளுக்கு செல்ல இடமளிக்கமாட்டோம். அவர்களும் யுத்தக் களத்துக்கு செல்ல வேண்டும்.

புத்த சாசனத்தை பாதுகாக்க வேண்டுமாயின் நாட்டின் ஒருமைப்பாட்டை பாதுகாக்க வேண்டும். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பௌத்த தொல்பொருள் சின்னங்கள் மற்றும் மரபுரிமைகள் திட்டமிட்ட வகையில் அழிக்கப்படுகின்றன.

வெடுக்குநாறி பகுதியில் பௌத்த சின்னங்களை அழித்து அதன் மீது பிற மதத்தின் சின்னங்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் மத்திய அரசுக்குள் இருக்கும் நிலையில் பௌத்த சின்னங்கள் அங்கு அழிக்கப்படுகிறது என்றால் தனி இராச்சிய அதிகராத்தை வழங்கினால் என்ன நேரிடும் என்பதை சிந்திக்க வேண்டும்.


இதனால் தான் ஒற்றையாட்சியை பாதுகாக்க வேண்டும் என்பதை நாங்கள் தொடர்ந்து வலியுறுத்துகிறோம். அண்மையில் மாவீரர் தினம் வடக்கு மற்றும் கிழக்கில் அனுஸ்டிக்கப்பட்டது. 

நாட்டின் ஒருமைப்பாட்டை பாதுகாப்பதற்காகவே 29 ஆயிரம் வீரர்கள் உயிர் நீத்தார்கள். பெற்றுக்கொள்ளப்பட்ட சுதந்திரம் பயங்கரவாதிகளை நினைவு கூர்வற்கு அல்ல என்பதை அனைவரும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

நான் உயிருடன் இருக்கும் வரை தனி ஈழ இராச்சியத்துக்கு இடமளிக்கமாட்டேன்: நாடாளுமன்றில் இனவாதத்தை கக்கிய சரத் வீரசேகர! | Sarath Weerasekara Eelah Kingdom Asylum Claim

மாவீரர் தினத்தன்று யாழ்ப்பாணம் கோப்பாய் பகுதியில் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் சீருடையை சிறுவர்களுக்கு அணிவித்து அவர்களின் கழுத்தில் சயனைட் மாதிரியிலான குப்பிகளை அணிவித்து அவர்களை மாவீரர் தின நிகழ்வுகளில் பங்குப்பற்ற செய்துள்ளார்கள். இவ்வாறான செயற்பாடுகளையிட்டு வெட்கமடைய வேண்டும்.


சிறு பிள்ளைகளின் மனங்களில் சிங்களவர்கள் தொடர்பில் வைராக்கியம் விதைக்கப்படுகிறது. 

தனி ஈழ இராச்சியத்துக்கு நாங்கள் உயிருடன் இருக்கும் வரை இடமளிக்க போவதில்லை. சிங்கள மக்கள் எவரும் இடமளிக்கமாட்டார்கள் என தெரிவித்துள்ளார்.


No comments