சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளரை கைது செய்த சிஐடி!
சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் ஜனக சந்திரகுப்த இன்று குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இம்யூனோகுளோபுலின் எனும் மருந்தை இலங்கைக்கு இறக்குமதி செய்தமை தொடர்பில் குற்றப்புலனாய்வு பிரிவில் இன்று வாக்குமூலம் வழங்க முன்னிலையாகியிருந்த நிலையிலேயே, இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இலங்கைக்கு இம்யூனோகுளோபுலின் எனும் மருந்தை இறக்குமதி செய்த குற்றச்சாட்டில் கடந்த மாதம் 20 ஆம் திகதி இலங்கை சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் ஜனக சந்திரகுப்த பதவி நீக்கப்பட்டார்.
அடுத்த கட்ட விசாரணை
போலி ஆவணங்களின் ஊடாக குறித்த மருந்துகள் இறக்குமதி செய்யப்பட்டதாகவும் இந்த நடவடிக்கையின் மூலம் 130 மில்லியன் ரூபாய் பண மோசடி மேற்கொள்ளப்பட்டதாகவும் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.
இதையடுத்து, கடந்த 30 ஆம் திகதி முதல் தடவையாக அவர் குற்றப்புலனாய்வு பிரிவில் முன்னிலையாகி தமது வாக்குமூலத்தை வழங்கியிருந்தார்.
இந்த நிலையில், அடுத்த கட்ட விசாரணைகளுக்காக திணைக்களத்தில் இன்று ஜனக சந்திரகுப்த முன்னிலையானதை தொடர்ந்து, திணைக்களத்தின் அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்
No comments