Vettri

Breaking News

யாழ்.போதனாவின் குறைகள் நிவர்த்தி செய்யப்படும் - அமைச்சர் டக்ளஸ் தேவானாந்தா





 யாழ்ப்பாணத்தில் அதிகரித்து வரும் டெங்கு நோயினை கட்டுப்படுத்த முன்னெடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் தொடர்பில் யாழ் பிராந்திய சுகாதர சேவைகள் பணிப்பாளர் ஆ. கேதீஸ்வரனுடன் கலந்துரையாடி தேவையான நடவடிக்கைகளை துரித கெதியில் முன்னெடுக்குமாறு பணித்துள்ளதாக அமைச்சர டக்ளஸ் தேவானாந்தா தெரிவித்துள்ளார்.

யாழில். நேற்று  செவ்வாய்க்கிழமை (26) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். 

மேலும் தெரிவிக்கையில்,

யாழ்ப்பாணத்தில் அண்மைக்காலமாக டெங்கு நோயின் தாக்கம் அதிகரித்துள்ளது. அதனை கட்டுப்படுத்த சுகாதார சேவைகள் பணிமனை நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றன.  இது தொடர்பில் பணிப்பாளருடன் கலந்துரையாடி தேவையான நடவடிக்கைகளை எடுக்க கூறியதுடன் , அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பில் கேட்டறிந்து, அவற்றை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுத்துள்ளோம். 

நுளம்புக்கு புகை அடிப்பது , டெங்கு பரவும் சூழல்களை இனம் கண்டு அவற்றை அழிப்பது போன்ற செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகிறது என அமைச்சர் தெரிவித்தார்.  அவ்வேளை , யாழ்.போதனா வைத்திசாலையில் அண்மைக்காலமாக மருத்துவ தவறுகளால் உயிரிழப்புக்கள் ஏற்படுகின்றன என எழுப்பப்படும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் , அமைச்சரிடம் கேட்ட போது, 

மருத்துவ தவறுகளால் உயிரிழப்புக்கள் ஏற்படுகின்றன என்பது தொடர்பில் எனக்கு அறிய தரப்பட்டது. அது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படும். அவ்வாறான மருத்துவ தவறுகள் காணப்பட்டால் அவற்றை உடனடியாக களைய நடவடிக்கை எடுக்கப்படும்.  போதனா வைத்தியசாலையில் மருந்து தட்டுப்பாடுகள் நிலவுவதாகவும் , கூறப்படுகிறது. தட்டுப்பாட்டை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்.  யாழ்ப்பாணத்திற்கு ஜனாதிபதி வருகை தரும் போது  யாழ்.போதனா வைத்தியசாலையில் நிலவும் குறைப்பாடுகள் தொடர்பில் நேரில் தெரிவித்து, அவற்றை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்க உள்ளேன் என அமைச்சர் மேலும் தெரிவித்தார். 

No comments