"அவர் என்னோடு பேசுவாரென நான் எதிர்பார்க்கவில்லை" - மனந்திறந்தார் கில்மிஷா
"நான் எடுத்துக்கொண்ட பாடலை திருப்தியாக பாடி முடித்துவிட வேண்டும்; போட்டியில் என்னோடு பாடிய நண்பர்களில் யாராவது ஒருவர் வெற்றி பெற்றாலும் சந்தோஷம்தான் என்றே நினைத்தேன். ஆனால், 'டைட்டில் வின்னர் கில்மிஷா' என்று அறிவித்தபோது அத்தனை மகிழ்ச்சியாக இருந்தது" என ஜீ தமிழ் சரிகமபா வெற்றியாளர் கில்மிஷா இன்பக் களிப்போடு சொல்கிறார்.
தென்னிந்தியாவின் பிரபல தொலைக்காட்சியான ஜீ தமிழில் சமீபத்தில் ஒளிபரப்பாகி வந்த சரிகமபா சிறுவர்களுக்கான இசைப் போட்டி நிகழ்ச்சியில் பங்குபற்றி, இறுதிச் சுற்று வரை முன்னேறி, 'டைட்டில் வின்னராக' வெற்றி வாகை சூடிய சிறுமி கில்மிஷா, இலங்கை மண்ணின் பெருமையாக கொண்டாடப்படுகிறார்.
யாழ்ப்பாணம், அரியாலையை சேர்ந்த கில்மிஷா உதயசீலன், சுண்டுக்குளி மகளிர் கல்லூரியில் தரம் 9இல் கல்வி பயின்று வருபவர்.
3 வயதில் ஒரு நவராத்திரி விழாவில் மேடையேறி "அம்மாவும் நீயே அப்பாவும் நீயே...." என்ற பாடலை பாடி ஆலயத்துக்கு வருகை தந்த பக்தர்களை ஈர்த்த இந்த சிறுமி, பின்னர், "வேலுண்டு வினையில்லை..." என்ற முருகன் புகழ் பாடலொன்றை பாடியதிலிருந்து, இவரது குரல் சமய, கலாசார அம்சங்களில் தனித்துவ அடையாளம் பெற்றது.
யாழ்ப்பாணம் 'சாரங்கா' இசைக் குழுவினூடாக பல வாய்ப்புகளை பெற்று, பாடி, கிட்டத்தட்ட 10 வருடங்களாக தன்னை வளர்த்துக்கொண்டதாக, தந்தை உதயசீலனோடு சேர்ந்து கில்மிஷா பகிர்ந்துகொண்டது மட்டுமன்றி, 3 வயதில் தனக்குள் ஒளிந்திருக்கும் இசைத் திறமையை வெளிக்கொண்டு வந்த கமலோஜினி ஆசிரியர், பாடசாலை அதிபர் ஆகியோரையும் இவர்கள் நினைவுபடுத்திக்கொண்டனர்.
'சரிகமபா' மேடையை சந்திப்பதற்கு முன்னரே இலங்கையில் கில்மிஷா பாடிய "என்னுள்ளே என்னுள்ளே...", "ஓ ரசிக்கும் சீமானே..." போன்ற அல்பம் பாடல்கள் வரவேற்கப்பட்டன.
கில்மிஷாவின் தந்தையிடம் மகளின் இசையார்வத்தை பற்றி கேட்டபோது அவர்,
"பியானோ, வயலின், வீணை ஆகிய இசைக்கருவிகளை வாசிப்பதிலும் திறமைசாலியான கில்மிஷா, தமிழில் மட்டுமன்றி, சிங்கள, ஆங்கில மொழிப் பாடல்களையும் நன்றாக பாடுவாள். நிறைய போட்டிகளில் பாடியிருக்கிறாள். ஒரு முறை யாழ்ப்பாண மாவட்ட மட்டத்தில் நடைபெற்ற பாட்டுப் போட்டியில் முதலிடம் பெற்றாள்.
ஆறு மாத குழந்தையாக இருந்தபோதே இவளுக்குள் ஊற்றெடுத்த இசையை என்னால் உணர முடிந்தது.
தனக்கு ஒரு பாடல் பிடித்துவிட்டால், அதை உடனே பாடிக்காட்டிவிடுவாள். தனது தெரிவாக அல்லாமல், மற்றவர்கள் பாடச் சொல்லி கேட்கும் பாடல் என்றால், கொஞ்சம் பயிற்சி எடுத்துக்கொண்டு அந்த பாடல்களையும் நன்றாக பாடுவாள்" என பெருமிதத்தோடு தெரிவித்தார்.
தொடர்ந்து, கில்மிஷா வீரகேசரிக்கு பகிர்ந்துகொண்டதாவது :
'சரிகமபா' வெற்றியாளர் ஆகிவிட்டீர்கள்... வாழ்த்துக்கள் கில்மிஷா! இந்த சாதனையை எப்படி உணர்கிறீர்கள்?
ரொம்ப சந்தோஷம். இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு சென்று, இசை நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று முதல் முதலாக வெற்றி பெற்றது நானே என்பதால் பெருமையாக உணர்கிறேன்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உங்களுக்கு வாழ்த்துச் சொன்ன தருணம் எப்படியிருந்தது?
ஆமாம். ஜனாதிபதி எனக்கு தொலைப்பேசியில் வாழ்த்தினார். "இலங்கைக்கு வந்ததும் சந்திப்போம்" என்று சொன்னார். அவர் என்னோடு பேசியபோது ரொம்பவே சந்தோஷப்பட்டேன். பெருமையாக இருந்தது. ஜனாதிபதி என்னோடு பேசுவார் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை.
'சரிகமபா' இசை நிகழ்ச்சியில் பங்கேற்க காரணம் என்ன?
'சரிகமபா' எனது பல நாள் கனவு. அந்த நிகழ்ச்சியில் ஒரு முறையாவது பாடிவிட வேண்டும் என்று விரும்பினேன். அதில் கலந்துகொண்டு பாடி, இறுதியில் டைட்டில் வின்னராக வெற்றியீட்டியதில் மகிழ்ச்சி.
தமிழ்நாட்டில், கடும் போட்டித்தன்மை கொண்ட களத்தில், இறுதிச் சுற்று வரை பாட முடியும், வெற்றி கிடைக்கும் என்று எப்போதாவது எதிர்பார்த்தீர்களா?
நான் மெகா ஒடிஷன் குரல் தேர்வில், ஒரு போட்டியாளராக தெரிவுசெய்யப்படுவேன் என்றே எதிர்பார்க்கவில்லை.
ஒரே ஒரு முறை அந்த மேடையில் நிற்க வேண்டும், ஒரே ஒரு பாடல் பாடிவிட்டால் போதும் என்றே ஆசைப்பட்டேன். ஆனால், நடுவர்கள் என்னை தெரிவு செய்துவிட்டார்கள். அப்படியே ஒவ்வொரு சுற்றாக கடந்து, இறுதிச்சுற்று மேடையும் ஏறினேன்.
அப்போது கூட எனக்கு வெற்றி கிடைக்கும் என்று நம்பவில்லை.
நான் எடுத்துக்கொண்ட பாடலை திருப்தியாக பாடி முடித்துவிட வேண்டும்; போட்டியில் என்னோடு பாடிய நண்பர்களில் யாராவது ஒருவர் வெற்றி பெற்றாலும் சந்தோஷம்தான் என்றே நினைத்தேன். ஆனால், 'டைட்டில் வின்னர் கில்மிஷா' என்று அறிவித்தபோது அத்தனை மகிழ்ச்சியாக இருந்தது!
சக போட்டியாளர்கள் உங்களோடு எப்படி?
அவர்கள், நான் இலங்கையில் இருந்து வந்தவர் என்றில்லாமல், தங்களில் ஒருவராகவே என்னை பார்த்தார்கள். மிகவும் நட்பாக என்னோடு பழகினார்கள். பாடுவதிலும் நிறையவே ஒத்துழைப்பு வழங்கி, துணையாக நின்றார்கள்.
போட்டியாளர்களின் திறமையை பார்த்து பயந்ததுண்டா?
பயம் எல்லாம் இல்லை. நான் நன்றாக பாடுவேன், பாடுகிறேன் என்கிற தன்னம்பிக்கை இருந்தது.
'மேடை பயம் இல்லை' என்றீர்களே... பல மேடைகளை பார்த்துவிட்டதாலா?
ஆம். நான் 3 வயதிலிருந்தே மேடைகளில் பாடி வருகிறேன். நிறைய போட்டிகளில் பங்குபற்றியிருக்கிறேன். அப்படியே பழகிவிட்டதால் எனக்கு மேடை பயம் கொஞ்சம் கூட இல்லை.
இறுதிச் சுற்றில் பாடிய 5 பேரில் உங்களுக்கு சவாலான, கடினமான போட்டியாளர் யார்?
எல்லோருமே கடினமான போட்டியாளர்கள்தான். என்னோடு பாடிய ஐந்து பேரும் மிகத் திறமைசாலிகள்.
ஒரு போட்டியில் ஆறு பேரும் பாடினோம். மற்றபடி, நாங்கள் எல்லோரும் நல்ல நண்பர்கள். எங்களுக்குள் போட்டி இருக்கவில்லை.
அடுத்தடுத்து பாடல்களை தெரிவு செய்து, குறுகிய கால, நேரத்துக்குள் பாடுவது எப்படி சாத்தியம்?
எந்த பாடலை பாடுவதானாலும் கடினமாக உழைப்பேன். நன்றாக பாட நிறைய பயிற்சி எடுத்துக்கொள்வேன். அதற்காக, ஒரு பாடலை அதிக தடவை கேட்கவும் மாட்டேன். சில தடவைகள் கேட்டதுமே அந்த பாடல் எனக்குள் பதிவாகிவிடும்.
அத்தோடு, கமகங்கள், சங்கதிகள் மாறாமல் எப்படி பாட வேண்டும் என்றெல்லாம் கங்கா மேம், ஸ்ரீராஜ் சேர், லக்ஷ்மி மேம் என பலர் எனக்கு சொல்லிக்கொடுத்திருக்கிறார்கள்.
அசானியை பற்றி என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?
அசானி ரொம்ப நல்ல பொண்ணு. எல்லோரிடமும் அன்பாக பேசி பழகக்கூடியவர். என்னோடும் நட்பாக பழகுவார். தீவிர பயிற்சிகளின் மூலம் தொடர்ந்து நன்றாக பாடி, மென்மேலும் அசானி சாதிக்க வேண்டும்.
நடுவர்களை பற்றி சில வார்த்தைகள்...
நடுவர்களின் அன்பும் ஒத்துழைப்பும் எப்போதும் நிறைவாக கிடைத்தது. அவர்களின் அறிவுரைகள் எங்களை அடுத்தடுத்த கட்டத்துக்கு முன்னேற்றும் படிகளாக இருந்தன.
தமிழக இசைப் பயணத்தில் புதிதாக எதை கற்றுக்கொண்டீர்கள்?
இசையிலுள்ள நுட்பமான நிறைய விடயங்களை பற்றி அறிந்து, கற்றுக்கொண்டேன்.
போட்டியில் நீங்கள் பாடியவற்றில் உங்களால் மறக்க முடியாத பாடல்?
"குயில்பாட்டு..." பாடலை என்னால் மறக்க முடியாது. ஏனென்றால், அந்த பாடலை பாடித்தான் மெகா ஒடிஷனில் தெரிவானேன்.
"கண்டா வரச் சொல்லுங்க..." பாடலை எனது மாமாவை நினைத்துப் பாடி, அவருக்கு சமர்ப்பித்தேன்.
"செந்தூரா...", இசையமைப்பாளர் தேவா சேர் பாராட்டிய "நிலவை கொண்டு வா" போன்ற பாடல்களை குறிப்பிட்டுச் சொல்லலாம்.
ஒரு பாடல் பாடிக் காட்டுங்களேன்?
நிச்சயமாக...
("கண்ணிரண்டில் நூறு வெண்ணிலாக்கள் தோன்றும்...." என சரணத்தை தொட்டு "என்னுள்ளே என்னுள்ளே..." என பல்லவி பாடி முடித்தார்.)
பாடகி ஸ்வர்ணலதாவின் பாடல்களையே அதிகமாக பாடுகிறீர்கள்... அவரை அவ்வளவு பிடிக்குமா?
ஆமாம். ரொம்ப பிடிக்கும். 'சரிகமபா'விலும் ஸ்வர்ணலதா மேம் பாடிய இரண்டு பாடல்களை பாடி பாராட்டுக்களை பெற்றேன். அத்துடன், ஷ்ரேயா கோஷல் மேமும் எனக்கு பிடித்தமான பாடகி.
உங்கள் வெற்றியை இலங்கை மக்கள், குறிப்பாக, அரியாலை மக்கள் எல்லோருமே கொண்டாடுகிறார்கள்... சந்தோஷமா?
ஆமாம்... ரொம்ப சந்தோஷம்... நான் இவ்வளவு தூரம் இசையால் பயணிக்க காரணம் மக்கள்தான். அவர்களின் அன்பும் ஆதரவும் ஒத்துழைப்பும்தான் எனக்கு பக்கபலமாக இருக்கிறது. அதுதான் எப்போதும் எங்களுக்கு தேவை.
உங்களை நேசிக்கும் மக்களுக்கு நீங்கள் என்ன செய்ய விரும்புகிறீர்கள்?
அதுதான் செய்துவிட்டேனே... டைட்டிலை வென்றுவிட்டேன்தானே!
மக்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப இன்னும் பெரிதாக எதையாவது செய்ய ஆசைப்படுகிறீர்களா?
இன்னும் நிறைய பாடல்களை பாட காத்திருக்கிறேன். தொடர்ந்து பாடிக்கொண்டே இருப்பேன். இப்போதைக்கு இவ்வளவுதான்.
உங்கள் வெற்றிக்காக உழைக்கும் பெற்றோரை பற்றி கூறுங்கள்...
அம்மா, அப்பாவுக்கு இசையில் ஆர்வம் அதிகம். அப்பா நன்றாக பாடுவார். அம்மாவுக்கும் பாடுவதென்றால் பிடிக்கும். ஆனாலும், எனது குடும்பத்தில் முறையாக சங்கீத துறையில் பயணிக்கும் ஒருவராக நான் மட்டுமே இருக்கிறேன். அதனால் இசையில் நான் முன்னேற பெற்றோர் அளவின்றி முயற்சிக்கின்றனர்.
உங்களது இலட்சியம்?
எதிர்காலத்தில் மருத்துவர் ஆவதுதான் எனது இலட்சியம். மருத்துவர் ஆனாலும் கூட இசைத்துறையிலும் ஈடுபடுவேன்.
உங்களது இசை சார்ந்த எதிர்காலம் இந்தியாவிலா, இலங்கையிலா?
வாய்ப்பு கிடைத்தால் இந்திய இசைத்துறையில் இணைந்து பாடுவேன். மற்றபடி, கல்வி கற்பது, இசை அல்பங்களை பாடி வெளியிடுவதெல்லாம் இலங்கையில்தான்.
No comments