Vettri

Breaking News

விழிப்புலனற்ற வாக்காளர்களுக்கு தொட்டுணரக்கூடிய வாக்கு சீட்டு வழங்க நடவடிக்கை - தேர்தல்கள் ஆணையாளர் நாயகம்!!





 தேசிய ரீதியில் நடைபெறும் அடுத்த தேர்தலில் விழிப்புலன் அற்ற வாக்காளர்களுக்காக ஒவ்வொரு வாக்களிப்பு நிலையத்திலும் தொட்டுணரக்கூடிய விசேட வாக்குச் சீட்டை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். விசேட தேவையுடையவர்களுக்கு விசேட அடையாள அட்டை ஒன்று வழங்கப்படும் என தேசிய தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ரத்நாயக்க தெரிவித்தார்.

இயலாமையுடைய நபர்களுக்கான சர்வதேச தினம் டிசம்பர் 03ஆம் திகதி நேற்று ஞாயிற்றுக்கிழமை அனுஷ்டிக்கப்பட்ட  நிலையில் இதனை முன்னிட்டு கடந்த வெள்ளிக்கிழமை  பத்தரமுல்லை வோட்டர்ஸ் எட்ஜ் ஹோட்டலில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினர்கள், இயலாமையுடைய நபர்களுக்கான சங்கங்களின் ஒன்றிணைந்த முன்னணி, தேர்தல்கள் ஆணையாளர் நாயகம், தேர்தல் கண்காணிப்பு அமைப்புக்கள்,சிவில் சமூக அமைப்புக்கள் உள்ளிட்ட தரப்பினர் கலந்துகொண்டனர்.

இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்ட,தேர்தல்கள் ஆணையாளர் நுவரெலியா மாவட்டத்தில் உள்ள 10 வாக்களிப்பு நிலையங்களில் முன்னோடித் திட்டமாக முன்னெடுக்கப்பட்ட இத்திட்டம் வெற்றியளித்துள்ளது. செவித்திறன் குறைபாடுள்ள சமூகத்தினரின் தேவைகள் மற்றும் இயலாமையுடைய நபர்கள் வாக்களிப்பு நிலையங்களுக்கு செல்லக்கூடிய வசதிகள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்படும் . அத்துடன் இயலாமையுடைய நபர்களுக்கு விசேட அடையாள அட்டையொன்றை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார். இங்கு கருத்துத் தெரிவித்த இயலாமையுடைய நபர்களுக்கான சங்கங்களின் ஒன்றிணைந்த முன்னணியின் தலைவர் ரசாஞ்சலி பத்திரகே, நாட்டின் சனத்தொகையில் 8.7 சதவீதம்  அதாவது கிட்டத்தட்ட 16 இலட்சம் பேர் இயலாமையுடைய நபர்களைக் கொண்ட சமூகமாகக் காணப்படுகிறது. அத்தரப்பினருக்காகக் குரல்கொடுக்க செப்டம்பர் 6 ஆம் திகதி பாராளுமன்ற ஒன்றியமொன்றை அமைக்கக் கிடைத்திருப்பது மிகப்பெரிய சாதனை என்றும் கூறினார்.  இந்த நாட்டில் பல பொது இடங்களில் வசதிகள் இல்லாததால், இயலாமையுடைய நபர்களுக்கு பஸ், ரயில் உள்ளிட்ட பொதுப்போக்குவரத்து வசதிகள் இல்லையென்றும் சுட்டிக்காட்டினார். இவ்வாறான நபர்கள் பாரிய அளவில் துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாகுவது மற்றும் அவர்களின் கல்விக்குக் காணப்படும் தடைகள் குறித்தும் அவர் பிரஸ்தாபித்தார். 

எனவே, இயலாமையுடைய நபர்களின் உரிமைகளை சட்டரீதியாக அமுல்படுத்தும் வகையில் புதிய சட்டத்தை உருவாக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய அவர், அவர்களின் பிரதிநிதித்துவம் அரசியலில் இருக்க வேண்டும் என்றும் சுட்டிக்காட்டினார். இயலாமையுடைய நபர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியத்தின் தலைவர் இச்சமூகத்துக்கு ஆற்றிவரும் பங்களிப்பைப் பாராட்டுவதாகவும் அவர் தெரிவித்தார்

No comments