செவ்வாயன்று இலங்கைக்கு மங்களகரமான செய்தி கிடைக்கும் - ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க
சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபை கூட்டம் எதிர்வரும் 12ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இடம்பெறவுள்ளது. இதன்போது இலங்கை குறித்து மங்களகரமான செய்தியை நாணய நிதியம் அறிவிக்கவுள்ளதாக தெரிவித்த ஜனாதிபதி
ரணில் விக்கிரமசிங்க, இதேவேளை சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாம் கட்ட கடன் தவணையான 330 மில்லியன் அமெரிக்க டொலர்கள், உலக வங்கியிடமிருந்து 250 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து 200 மில்லியன் அமெரிக்க டொலர்கள் இம்மாதத்தில் இலங்கைக்கு கிடைக்கப்பெறும் என்றும் குறிப்பிட்டார். பாராளுமன்றத்தில் அமைந்துள்ள ஜனாதிபதியின் அலுவலகத்தில் நேற்று சனிக்கிழமை (09) இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறினார்.
அவர் தொடர்ந்தும் தெளிவுபடுத்துகையில்,
தேசிய மற்றும் சர்வதேச கடன் மறுசீரமைப்புகள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில் இம்மாதத்தில் மொத்தமாக 780 மில்லியன் அமெரிக்க டொலர்கள் இலங்கைக்கு கிடைக்கப்பெறவுள்ளது. சர்வதேச மற்றும் தனியார் கடன் வழங்குனர்கள் இலங்கைக்கு கடனை மீள் செலுத்த நிவாரண காலத்தை வழங்கவும் இணங்கியுள்ளனர். கடன் வட்டியில் குறிப்பிட்ட தொகையை தள்ளுபடி செய்வதற்கும் சர்வதேச கடன் வழங்குனர்கள் உறுதியளித்துள்ளனர்.
கடன் மறுசீரமைப்புகளில் கிடைத்த வெற்றியானது நாட்டின் பொருளாதார மீட்சியை துரிதப்படுத்தியுள்ளது. தேசிய கடன் மறுசீரமைப்புகளின் பின்னர், சீனா, ஜப்பான், இந்தியா மற்றும் பரிஸ் கழகம் உட்பட தனியார் கடன் வழங்குனர்களும் இலங்கைக்கு ஒத்துழைக்கும் வகையில் தீர்மானங்களை எடுத்துள்ளனர். ஆனால் நாங்கள் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கடனை தள்ளுப்படி செய்ய கோரவில்லை. ஏனெனில் அவ்வாறு கோரிக்கை விடுத்திருந்தால் எமது மக்களுக்கு அது கௌரவமானதாக இருக்காது என்றார்.
பெறுமதி சேர் வரி அதிகரிக்கப்பட்டுள்ளமை குறித்து இதன்போது ஜனாதிபதி கருத்து தெரிவிக்கையில்,
இந்தியாவின் பெறுமதி சேர் வரி 18 வீதமாகும். இலங்கையை பொறுத்தவரையில் நாட்டின் பொருளாதாரம் தற்போது வளர்ச்சிப் பாதையில் உள்ளது. எனவே முழுமையான வெற்றி இலக்கை அடையும் வரை இன்னும் சிறு காலம் அனைவரும் பங்களிப்புகளை செய்ய வேண்டும். வீழ்ச்சியடைந்த நிலையிலிருந்து நாட்டை முழு அளவில் மீட்பதே நம் அனைவரினதும் பொறுப்பகும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
No comments