காவியா பெண்கள் அமைப்பின் 21 வது ஆண்டு நிறைவுவிழா. 2023
காவியா சுய அபிவிருத்தி பெண்கள் அமைப்பின் 21வது ஆண்டு நிறைவை முன்னிட்டு இன்றைய தினம் திருமதி. Y.அஜித் குமார் தலைமையில் william adult memorial மண்டபத்தில் நிகழ்வுகள் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. குறித்த நிறுவனமானது பெண்கள் அபிவிருத்தி தொடர்பில் தன்னால் இயன்ற சேவைகளை முன்னெடுத்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
இதன்போது போது காவியா சுய அபிவிருத்தி பெண்கள் அமைப்பின் வளர்ச்சிப் பயணம் தொடர்பிலும் அதன் அனுபவம் தொடர்பிலும் ,எதிர்கால காவியா சுய அபிவிருத்தி பெண்கள் அமைப்பின் செயற்பாடுகள் தொடர்பிலும் பகிர்ந்துகொள்ளப்பட்டது.
மேலும் காவியா சுய அபிவிருத்தி பெண்கள் அமைப்பின் 21 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு தூய்மையான தேங்காய் எண்ணை போத்தல்களில் அடைக்கப்பட்டு 'Green Batti' எனும் பெயரில் அறிமுகம் செய்யப்பட்டிருந்தது. அத்துடன் வாழ்வாதார சுய தொழிலில் ஈடுபடுவோருக்கான 50,000 ரூபாய் பெறுமதியான சலுகை அடிப்படையிலான காசோலைகள் இன்றையதினம் தெரிவு செய்யப்பட்ட 8 பயனாளிகளுக்கு வழங்கி வைக்கப்பட்டிருந்தது.
குறித்த நிறுவனமானது அண்மையில் சந்தைப்படுத்தல் தொடர்பில் தாம் இடர்பாடுகளை எதிர் நோக்குவதாக கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவருமான சிவ சந்திராந்தன் அவர்களுக்கு முன்வைத்த கோரிக்கைக்கு அமைவாக பாரம்பரிய உணவுகளை சந்தைப்படுத்தக் கூடியதான இடம் மட்டக்களப்பு நகர் பகுதியில் வழங்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
இதன்போது மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.முரளிதரன், மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வாசுதேவன், கிழக்கு பல்கலைக்கழக மருத்துவபீட விரிவுரையாளர் அருளானந்தம், மாவட்ட அபிவிருத்தி குழு தலைவரின் பிரத்தியேக செயலாளரும், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தேசிய அமைப்பாளருமான தம்பிராஜா தஜீவரன், தேசிய கட்டிட ஒப்பந்தக்காரர் நிறுவனத்தினுடைய தலைவர் ரஞ்சிதமூர்த்தி, மண்முனை வடக்கு பிரதேச செயலக திட்டமிடல் பணிப்பாளர் திருமதி ஜெயா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
No comments