மதுபோதையில் பொலிஸ் கான்ஸ்டபிளை தாக்கிய இரு பெண்களுக்கு விளக்கமறியல்
மதுபோதையில் பொலிஸ் கான்ஸ்டபிளை தாக்கிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட இரண்டு பெண்களும் எதிர்வரும் 8ஆம் திகதி வரையில், விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
புதுக்கடை இலக்கம் 1 நீதவான் நீதிமன்றில் நேற்று முன்னிலைப்படுத்தப்பட்டதன் பின்னரே, சந்தேகநபர்களுக்கு இந்த விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு, கிரகரி வீதிக்கு அருகில் சந்தேகத்திற்கிடமான வகையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் ஒன்றை, பொலிஸ் போக்குவரத்து அதிகாரிகள் நேற்று முன்தினம் இரவு சோதனையிட்டுள்ளனர். இதன்போது, குறித்த இரண்டு பெண்களும், மது அருந்திக்கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சந்தர்ப்பத்தில் சோதனையில் ஈடுபட்ட பொலிஸ் கான்ஸ்டபிள் மீது அவர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனையடுத்து காயமடைந்த பொலிஸ் கான்ஸ்டபிள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
அதன் பின்னர் குறித்த இரண்டு பெண்களும் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments