இலங்கை கடற்பரப்பில் விஷ மீன்கள்: கடலுக்கு செல்வோருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!
இலங்கையின் ஆழமற்ற கடற்பகுதிகளில் காணப்படும் விஷப் பாறை மீன்கள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அண்மைக்காலங்களில் பாறை மீன்கள் கடித்ததனால் பாதிப்புக்குள்ளான மக்கள் கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இது குறித்து ஆய்வுகளை மேற்கொண்ட ஒட்டுண்ணியியல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளரான கலாநிதி ஜானக ரூபன், இவை ‘கோன்மஹா-ஸ்டோன் ஃபிஷ் (Gonmaha-Stone Fish) எனப்படும் ஒருவகை நச்சு மீன் இனம் என அடையாளப்படுத்தியுள்ளார்.
பாறைகள் போல தோற்றமளிக்கும்
இது குறித்து மேலும் கருத்து தெரிவித்த அவர்,
"இந்த இனத்தைச் சேர்ந்த கல்மீன்கள் மணல் அல்லது இடிபாடுகள் நிறைந்த பாறை இடுக்குகள், ஆழமற்ற தடாகங்கள், குறைந்த அலைகளைக் கொண்ட கடற்பரப்புக்கள் மற்றும் சிறிய குளங்களில் காணப்படுகின்றது.
இந்த மீன்களின் மெதுவான இயக்கம் காரணமாக அவை பெரும்பாலும் பொய்க்கோலம் பூண்டு பாறைகள் போல தோற்றமளிக்கும், அதே போல் சில நேரங்களில் பாசிகளால் மூடப்பட்டும் காணப்படும்.
விஷத்தன்மையுடைய எலும்புகள்
இந்த வகை மீன்களின் முதுகில் பல எலும்புகள் போன்ற அமைப்பு காணப்படுகிறது, அவை விஷத்தன்மையுடையவை என்பதால் அவற்றின் பாதுகாப்புக்காக இதனை மீன்கள் பயன்படுத்துகின்றன.
மேலும், இந்த மீன்கள் அவற்றின் இனப்பெருக்க வேளையின் போது கரைக்கு அருகில் வரும், அதுமாத்திரமல்லாமல், இந்த மீன்கள் மனிதர்களின் நடமாட்டத்தை கண்டாலோ அல்லது தன்னருகில் ஏதேனும் உயிரினத்தின் அசைவுகளை கண்டாலோ, தன் உயிருக்கு அச்சுறுத்தல் எனக்கருதி தனது விஷ எலும்புகளால் தாக்குதல்களில் ஈடுபடும்" என அவர் தெரிவித்தார்.
எனவே, கடலுக்கு குளிக்கச் செல்பவர்கள் இந்த மீன்கள் குறித்து அவதானமாக இருக்க வேண்டும் என்றும், குளிக்கும் போது செருப்பு அணிந்து செல்ல வேண்டும் எனவும் அவர் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.
No comments