மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் பலி - வீதியில் சென்ற மயிலுடன் மோதியதால் சம்பவம்
கல்குடா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கற்குடா பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ள சம்பவம் நேற்று (6) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்
அமைதி ஒழுங்கை வாகனேரி பிரதேசத்தைச் சேர்ந்த 18 வயதுடைய இராசமாணிக்கம் டிலோஷன் என்பவரே இவ்விபத்தில் பலியானவராவார்.
குறித்த இளைஞன் நேற்று முன்தினம் (5) பாசிக்குடாவில் உள்ள உணகம் ஒன்றில் தனது வேலையை முடித்து விட்டு தனது வீட்டுக்கு கற்குடா பிரதான வீதியூடாக தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருக்கும் போது குறித்த வீதியில் திடீரென சென்ற மயிலுடன் மோதி விபத்துக்குள்ளான நிலையில் படுகாயமடைந்து வாழைச்சேனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளின்போது தெரியவந்துள்ளது.
மட்டக்களப்பு நீதிமன்ற நீதிவான் பீற்றர் போல் அவர்களின் உத்தரவிற்கு அமைவாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி தம்பிப்பிள்ளை தவக்குமார் சடலத்தை பாவையிட்ட பின்னர் உடற்கூற்று பரிசோதனைக்கு உட்படுத்தும் படி சட்ட வைத்திய அதிகாரியிடம் பரிந்துரைத்தார். விசாரணைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டது.
இச்சம்பவம் தொடர்பில் கல்குடா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments