Vettri

Breaking News

இலங்கையில் தமிழ் ஊடகவியலாளர்கள் மீதான துன் புறுத்தலை நிறுத்துமாறு சர்வதேச அழுத்தம்!




 


அமெரிக்காவின் நியூயோர்க்கை தளமாகக் கொண்டு செயற்படும் ஊடகவியலாளர்களுக்கான பாதுகாப்பு அமைப்பு சி.பி.ஜே இலங்கை அரசிடம் முக்கியமான கோரிக்கை ஒன்றினை முன்வைத்துள்ளது.

அவ்வகையில், இலங்கையில் பணியாற்றும் தமிழ் ஊடகவியலாளர்கள் அரச அடக்குமுறையில் இருந்து விடுபட்டும் அச்சமின்றியும் செயலாற்ற அனுமதிக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்தி சேகரிப்பில் ஈடுபட்ட இரண்டு தமிழ் ஊடகவியலாளர்கள் மீதான விசாரணைகளை உடனடியாக இலங்கை அரசு கைவிட வேண்டும் என்று சி.பி.ஜே கோரியுள்ளது. 

இலங்கை அதிகாரிகள் உடனடியாக தமிழ் ஊடகவியலாளர்களான சசிகரன் புண்ணியமூர்த்தி மற்றும் பாலசிங்கம் கிருஷ்ணகுமார் ஆகியோர் மீதான அனைத்து அடக்குமுறைகளையும் கைவிட்டு, அவர்கள் சுதந்திரமாக செய்தி சேகரிப்பில் ஈடுபடுவதை உறுதி செய்ய வேண்டும் என சி.பி.ஜே அமைப்பின் நிகழ்ச்சித் திட்டங்களுக்கான ஒருங்கிணைப்பாளர் பெஹ் லியீ தெரிவித்துள்ளார்.


மேலும், மனித உரிமைகள் விடயங்கள் தொடர்பிலும் அது மீறப்படும் போது தமது சமூகத்தின் மீது ஏற்படுத்தும் தாக்கம் தொடர்பிலும் செய்திகளை சேகரித்து வெளியிட்டு வரும் தமிழ் செய்தியாளர்களை இலக்கு வைத்து தொடர்ச்சியாக துன்புறுத்தும் அரசின் நீண்டகால நடவடிக்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.


இந்நிலையில் மட்டக்களப்பிலுள்ள சசிகரன் புண்ணியமூர்த்தி மற்றும் பாலசிங்கம் கிருஷ்ணகுமார் ஆகியோரின் வீடுகளுக்குச் சென்ற காவலதுறையினர் அவர்களைத் தனித் தனியாக விசாரித்துள்ளனர்.

இலங்கையில் தமிழ் ஊடகவியலாளர்கள் மீதான துன் புறுத்தலை நிறுத்துமாறு சர்வதேச அழுத்தம்! | International Concern Harassment Tamil Journalists

கடந்த ஒக்டோபர் மாதம் 8ஆம் திகதி இடம்பெற்ற போராட்டம் ஒன்று தொடர்பில் செய்தி சேகரித்து வெளியிட்டமை தொடர்பாக அவர்களிடம் விசாரணைகள் நடத்தப்பட்டதாக, செயற்பாட்டுக் குழுவான ஜே.டி.எஸ் (JDS) அமைப்பை மேற்கோள் காட்டி சி.பி.ஜே தெரிவித்துள்ளது.

இந்த இரு சுயாதீன ஊடகவியலாளர்களும் மயிலத்தமடு, மாதவணைப் பகுதியில் மேய்ச்சல் நிலங்களை அரச ஆதரவுடன் வலிந்து ஆக்கிரமித்துள்ள சிங்கள மக்களால் தமது வாழ்வாதாரங்கள் கடுமையாகப் பாதிக்கப்படுகிறது எனக் கூறி கால்நடை விவசாயிகள் முன்னெடுத்த போரட்டம் குறித்து செய்தி சேகரிக்கச் சென்றிருந்தனர்.

அவர்களின் போராட்டாம் இப்போது இரண்டு மாதங்களுக்கும் மேலாகத் தொடர்கிறது. சசிகரன் மற்றும் கிருஷ்ணகுமார் ஆகியோர் அந்த போராட்டங்களின் போது செய்தி சேகரிக்கச் சென்ற அதே நாளில் அதிபர் ரணில் விக்ரமசிங்கவும் மட்டக்களப்பிற்கு விஜயம் செய்திருந்தார். 

அந்த இரு நிகழ்வுகள் குறித்த செய்திகளை உள்ளூர் மற்றும் வெளிநாட்டு ஊடகங்களுக்கு அளிப்பதற்காக அந்த இருவரும் அந்த இடங்களுக்குச் சென்றிருந்தனர்.

இந்நிலையில், அவர்களது வீடுகளுக்குச் சென்ற காவல்துறை அதிகாரி அவர்களின் தனிப்பட்ட மற்றும் ஊடகத்துறையின் பின்புலம் ஆகியவற்றிற்கு அப்பாற்பட்டு அந்த போராட்டத்தில் என்ன நடந்தது என்பது குறித்து விசாரணைகளை நடத்தியுள்ளார் என்கிறது சி.பி.ஜே அமைப்பு.

விசாரணையின் முடிவில் அவர்கள் தெரிவித்த விடயங்களை வாக்குமூலமாக எழுதி அதில் கையெழுத்திடுமாறு அந்த காவல்துறை அதிகாரி வலியுறுத்தியுள்ளார். 

மேலும், அவர்கள் இருவரும் கால்நடை விவசாயிகள், அரசியல்வாதிகள், செயற்பாட்டாளர்கள் ஆகியோருடன் அந்த போராட்டம் தொடர்பிலான குற்ற விசாரணையில் அவர்களுடன் பெயரிடப்பட்டுள்ளனர் என்று கூறி, இருவரும் நவம்பர் மாதம் 17ஆம் திகதி ஏறாவூர் நீதவான் நீதிமன்றத்தில் பிரசன்னமாக வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.

எனினும், சசிகரன் மற்றும் கிருஷ்ணகுமாருக்கு எழுத்துமூலமான அழைப்பாணையோ அல்லது அவர்கள் மீதான குறிப்பிட்ட குற்றச்சாட்டுக்கள் குறித்த காவல்துறை அறிக்கையோ அளிக்கப்படவில்லை என்று சி.பி.ஜே கூறியுள்ளது.

இலங்கையில் 2009ஆம் ஆண்டு போர் முடிவிற்கு வந்தாலும் பெரும்பான்மை சிங்கள மற்றும் சிறுபான்மை தமிழ் மக்களிடையே இன முரண்பாடுகள் தொடர்வதாக தனது அறிக்கையில் சி.பி.ஜே சுட்டிக்காட்டியுள்ளது.

No comments