மலையக மக்களுக்கான காணி உரிமையை பெற்றுக்கொடுக்க நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் - திகாம்பரம் எம்.பி
பெருந்தோட்ட மக்களுக்கு 10 பேர்ச் காணி உரிமையை பெற்றுக்கொடுக்க எமது பூரண ஒத்துழைப்பை வழங்க தயார். அதேபோன்று தோட்ட மக்களின் ஆயிரம் ரூபாவை கம்பனிகாரர்களிடமிருந்து பெற்றுக்கொடுக்க நாங்கள் அனைவரும் போராட முன்வர வேண்டும் என எதிர்க்கட்சி உறுப்பினர் ப. திகாம்பரம் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று சனிக்கிழமை (25) இடம்பெற்ற அடுத்த வருடத்துக்கான வரவு செலவு திட்டத்தில் நீர்வழங்கல் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சுக்கான ஒதுக்கீட்டு சட்டமூலம் மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே திகாம்பரம் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில்,
மலையக மக்கள் இந்த நாட்டுக்கு வந்து 200 வருடங்கள் கடந்தும் அந்த மக்களின் உரிமைகளை யாராலும் பெற்றுக்கொடுக்க முடியவி்ல்லை. அதனை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும். நல்லாட்சி அரசாங்கத்தில் அதற்கான வேலைத்திட்டத்தை ஆரம்பித்தாேம். 7 பேர்ச் காணி உரிமையை வழங்கினோம். அதிகார சபையை ஏற்படுத்தினோம். பிரதேச சபைகளை அதிகரித்தோம், இவ்வாறான பல வேலைத்திட்டங்களை மேற்கொண்டாேம். யார் நெல்லு குத்தினாலும் அரிசிகளாக வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு. அதற்காக விமர்சன அரசியலை நாங்கள் தவிர்த்துக்கொள்ள வேண்டும்.
அத்துடன் மலையக மக்களின் வீட்டுத்திட்டத்தில் அவர்களுக்கு மூல காணிப் பத்திரத்தை பெற்றுக்கொடுத்தோம். இந்த பத்திரத்தை பயன்படுத்திக்கொண்டு மக்களுக்கு வங்கி கடன் பெற்றுக்கொள்ளலாம். இந்த உறுதிப்பத்திரத்தையே நீங்களும் வழங்கப்போகிறீர்கள். ஆனால் மஹிந்தானந்த அலுத்கமகே அமைச்சராக இருந்து வழங்கியது வெறும் அனுமதி பத்திரமாகும்.
அத்துடன் மலையகத்தில் 2015இல் நாம் 500 வீடுகளை கட்டிக்கொடுத்தோம். 2016இல் 1000 வீடுகளை அமைத்துக்கொடுத்தோம். 2017இல் 2000 வீடுகளை கையளித்தோம். 2018இல் 500 வீடுகளை கையளித்தோம். அதுவல்லாமல் 3 ஆயிரம் வீடுகளை ஒதுக்கினோம். அதில் ஆயிரம் வீடுகளுக்கு அடிக்கல் நாட்டி இருக்கிறோம். 500 வீடுகள் அரைவாசி கட்டப்பட்டிருந்தன. அது இன்னும் பூரணப்படுத்தப்படாமல் இருக்கின்றன. இந்த விடயங்களை அமைச்சினூடாக தெரிந்துகொள்ளலாம். அதனால் நாங்கள் எங்களால் முடிந்த வேலைகளை செய்தோம். உங்களால் முடிந்த விடயங்களை நீங்கள் செய்கிறீர்கள். நாங்கள் விமர்சன அரசியலை செய்ய விரும்பவில்லை.
அத்துடன் மலையக மக்களுக்கான காணி உரிமையை பெற்றுக்கொடுக்க நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும். எமது மக்கள் இந்த நாட்டுக்காக உழைத்தவர்கள். ஆனால் இந்த நாடு எமது மக்களுக்காக ஒன்றும் செய்யவில்லை. வரவு செலவு திட்டங்களில் பெருந்தோட்ட மக்களுக்கு நிதி ஒதுக்கப்படுகிறது. ஆனால் அந்த பணம் முழுமையாக திறைசேரியிடமிருந்து வழங்குவதில்லை. இந்த விடயத்தில் அமைச்சர் கவனமாக இருக்கவேண்டும். முடிந்தளவு திறைசேரியிடமிருந்து பெற்றுக்கொள்ள முயற்சிக்க வேண்டும். நீங்கள் ஒதுக்கப்பட்ட நிதியை முழுமையாக செலவழித்தால்தான் அடுத்த முறையும் ஒதுக்கப்படும் நிதியை பெற்றுக்கொள்ள முடியும். இல்லாவிட்டால் குறைவாகவே ஒதுக்குவார்கள்.
மேலும், எமது மக்களுக்கான காணியை பிரித்துக் கொடுப்பதற்கு நாங்கள் அனைவரும் இணைந்து செயற்பட வேண்டும். அரசாங்கம் ஒருபோதும் காணியை பிரித்துக்கொடுக்கப்போவதில்லை. அதேபோன்று ஒரு கிலோ பச்சை கொழுந்தை கம்பனிகாரர்கள் 150 ரூபாவுக்கே பெற்றுக்கொள்கிறார்கள். இதனை மக்களுக்கு பிரித்துக் கொடுத்தால் இந்த மக்களிடமிருந்து கம்பனிகாரர்கள் 150 ரூபாவுக்கு கொழுந்தை பெற்றுக்கொள்வார்கள். இதன் மூலம் அந்த மக்களுக்கு நல்ல வருமானம் கிடைக்கும். அவர்களின் பிரச்சினைகளை தீர்த்துக்கொள்ள முடியும்.
கம்பனிகாரர்கள் தொடர்ந்தும் எமது மக்களை ஏமாற்றி வருகிறார்கள். அதனால் நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து இந்த கம்பனிகாரர்களுக்கு எதிராக போராடி எமது மக்களின் ஆயிரம் ரூபா சம்பளத்தை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
No comments